தினமணி கொண்டாட்டம்

என்றும் இருப்பவர்கள்! 34 - சா. கந்தசாமி

DIN

இயக்குநர் மகேந்திரன் யதார்த்தமான சினிமா பக்கம் இருந்தவர். அடக்கமாக சினிமா இருக்க வேண்டுமென்று நினைத்து செயல்பட்டார். சில படங்களில் அதனைத் தன் அளவில் சாத்தியப்படுத்தினார். அவர் இருபத்திரண்டு படங்களில் நடிப்பு, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று சம்பந்தப்பட்டிருந்தார். ஆனால், அவர் இயக்குநர் என்பதில் தான் முத்திரைப் பதித்தார். அவர், எழுதப்பட்டக் கதையை நம்பிய இயக்குநர்.
 
 1978 -ஆம் ஆண்டில் அவர் இயக்கிய "முள்ளும் மலரும்' என்ற படம் வெளிவந்தது. அது அவர் இயக்கிய முதல் படம். அப்போது அவருக்கு முப்பத்தொன்பது வயதாகி இருந்தது. "முள்ளும் மலரும்', "கல்கி'யில் உமாசந்திரன் எழுதிய தொடர்கதை. ரஜினிகாந்த் கதாநாயகன். படம் வெற்றிகரமாக ஓடியது.
 மகேந்திரன் இயக்கிய அடுத்தப்படம் "உதிரிப்பூக்கள்'. அது புதுமைப்பித்தன் எழுதிய "சிற்றன்னை' என்ற சிறுகதை. மகேந்திரன் "உதிரிப்பூக்கள்' என்று பெயரிட்டு திரைக்கதை வசனம் எழுதி இயக்கினார்.
 விஜயன் பிரதான நடிகர். தமிழ்ச்சினிமாவில் இயக்குநர் என்ற இடத்தை மகேந்திரனுக்கு "உதிரிப்பூக்கள்' உறுதி செய்தது.
 "உதிரிப்பூக்கள்' தயாரிப்பாளர் பாலகிருஷ்ணன். அவர் நந்தனத்தில் என் வீட்டின் அருகில் வசித்து வந்தார். அவர் ஒரு நாள் மகேந்திரனை என் வீட்டிற்கு அழைத்து வந்தார். மூவரும் இரண்டு மணி நேரம் போல சினிமா, இலக்கியம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அவர்கள் வந்த காரணம் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. ஆனால், தமிழில் உள்ள நல்ல நாவல்கள் சிறுகதைகளை சினிமா படமாக எடுக்க வேண்டும் என்று மகேந்திரன் சொல்லிக் கொண்டிருந்தார்.
 "உதிரிப்பூக்கள்' தயாரிப்பாளர் பாலகிருஷ்ணன், அடுத்தப் படத்திற்காக நாவல் ஒன்றைத் தேடி கொண்டிருப்பது தெரிந்தது. நான் அசோகமித்ரன் நாவலான "கரைந்த நிழல்கள்' பற்றிச் சொன்னேன். மகேந்திரன், ""நான்
 அசோகமித்ரன், ஜானகிராமன், ஜெயகாந்தன் போன்றவர்களின் நாவல்களை படிக்கிறவன்'' என்றார்.
 சோவின் "துக்ளக்' பத்திரிகையில் சில ஆண்டுகாலம் பணியாற்றியவர். அவர் இயற்பெயர் ஜான் அலெக்சாண்டர். அசோகமித்ரன் கையெழுத்திட்டு எனக்கு அன்பளிப்பாக வழங்கிய "கரைந்த நிழல்கள்' இருந்தது. அதனை அவரிடம் காட்டினேன். எழுந்து நின்று இரண்டு கைகளையும் நீட்டி வாங்கிக் கொண்டார்.
 "அசோகமித்ரன் சிறுகதைகள் பலவற்றைப் படித்திருக்கிறேன். கரைந்த நிழல்களையும் படித்திருக்கிறேன். ஆனால், சினிமா படத்திற்கு பயன்படுமா? என்ற முறையில் படிக்கவில்லை. படித்துப் பார்த்துவிட்டு ஒரு வாரத்தில் பாலகிருஷ்ணனிடம் புத்தகத்தைக் கொடுத்தனுப்புகிறேன்'' என்றார்.
 அவருக்கு தமிழ்ச் சினிமாவை இந்திய சினிமாவின் மையப் பகுதிக்குக் கொண்டு போக வேண்டுமென்ற ஆவல் இருந்தது. அதற்குக் கதைகள் முக்கியமென்று கருதினார். அவர் நிறைய நாவல்கள் படித்து இருப்பது பேச்சின் வழியாகத் தெரிந்தது. பதினைந்து நாட்கள் கழித்து பாலகிருஷ்ணன் "கரைந்த நிழல்கள்' நாவலைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, " உங்களுக்கு இயக்குநர் நன்றி தெரிவிக்கச் சொன்னார். அவர் ஐந்து பிரதிகள் வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறார்'' என்றார்.

 பின்னர் பல ஆண்டுகள் மகேந்திரனைச் சந்திக்கவில்லை." உதிரிப்பூக்கள்' தயாரிப்பாளர் பாலகிருஷ்ணன், மகேந்திரன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, சரத்குமார் - என்று பெயர் பெற்ற நடிகர்கள் நடிகைகளை வைத்துப் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்.
 பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு நாள் "அடையார் கேட்' சாலையில் நடைபயிற்சியின் போது எதிராக வந்தவர். "வணக்கம் என்னைத் தெரிகிறதா?'' என்று கைகளைப் பிடித்துக் கொண்டார். அவர் வீடு ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்தது. ""டாக்டர் அவசியம் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார். எனவே, ஒரு வாரமாக நடக்கிறேன். உங்களை இரண்டு நாட்களாகப் பார்க்கிறேன்'' என்றார்.
 நாங்கள் நேரம் குறித்துக் கொண்டோம். ஆனால், எல்லா நாளும், அவர் குறித்த நேரத்தில் வந்தார் என்று சொல்ல முடியாது. ஆனால் சில நாட்கள் வந்தார்.
 மகேந்திரனிடம் பேச நிறைய சினிமா, இலக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இருந்தன. "இருபதாண்டு காலத்தில் சினிமா போல வேகமாக மாறியது இன்னொன்று இல்லை'' என்றார். அவரின் சினிமா உலகம் முடிந்து போய்விட்டது என்பதை உணர்ந்து கொண்டிருந்தார்.
 மத்திய அரசு சினிமாவை தரமான முறையில் முன்னெடுத்துச் செல்ல என்.எப்.டி.சி என்ற தேசிய திரைப்பட வளர்ச்சி வாரியத்தை ஏற்படுத்தியது. அது 1975-ஆம் ஆண்டில் இருந்து பம்பாயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட ஆரம்பித்தது. பல சிறந்த இயக்குநர்கள் தங்கள் மாநில மொழிகளில் படமெடுக்க நிதியுதவி அளித்தது.
 இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர்களாக இருந்த சத்யஜித்ரே, மிருணாள் சென், ஷியாம் பெனகல் எல்லாம் என்.எப்.டி.சி பணத்தில் படம் எடுத்தார்கள்.
 1983-ஆம் ஆண்டில், ஆட்டன்பரோ இயக்கத்தில் உருவான "காந்தி' என்.எப்.டி.சி படம் தான். அது சினிமா ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
 தமிழகத்தின் சினிமா இயக்குநர்கள் பார்வை என்.எப்.டி.சி பக்கம் திரும்பியது. சுதந்திரமாக படம் எடுக்கலாமென்று சிலர் சிறந்த கதைகளை தேடினார்கள். வலுவான சமூக பிரக்ஞை உள்ள கதைகளுக்கு அது முன்னுரிமை வழங்கியது.
 1990-ஆம் ஆண்டில், மகேந்திரன் தமிழ் முற்போக்கு எழுத்தாளரான கந்தர்வன் எழுதிய "சாசனம்' என்ற சிறுகதைக்குத் திரைக்கதை வசனம் எழுதி விண்ணப்பித்தார். அது ஏற்கப்பட்டது. அரவிந்த்சாமி , கெüதமி, ரஞ்சிதா என்று நடிகர், நடிகைகளை வைத்துக் கொண்டு மகேந்திரன் படப்பிடிப்பைத் தொடங்கினார். செலவு கூடியது. அவர் எதிர்பார்த்தது போல என்..எப்.டி.சி அதிகமான பணம் கொடுக்கவில்லை. எனவே படப்பிடிப்பு தடைப்பட்டது. அவர் வேறு படங்கள் இயக்கத்தில் ஈடுபட்டார்.
 அநேகமாக "சாசனம்' கைவிடப்பட்டது என்ற நிலைக்கு வந்துவிட்டது. சாசனத்தில் நடித்தவர்கள் சினிமா உலகத்தில் இருந்தே ஓய்வு பெற்றுவிட்டார்கள். ஆனால், மகேந்திரன் சினிமா கலைஞர். அவர் ஓய்வு பெற முடியாது. தன்னால் என்ன முடிகிறதோ அதை செய்து தான் ஆக வேண்டும். பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு சாசனத்தை முடித்து கொடுத்துவிட்டு வெளியில் வந்தார்.
 சிலர் பித்துப் பிடித்து கலையைப் பிடித்துக் கொள்வார்கள்; வேறு சிலரை கலைப்பிடித்துக் கொண்டு செயல்பட வைத்துக்கொண்டே இருக்கும். அதுதான் கலை என்பதின் ஈர்ப்பு. வெற்றி - தோல்வி என்பது அதில் கிடையாது. இறுதி மூச்சு உள்ள வரையில் கலையுடன், கலைஞனாக வாழ்வது என்பதுதான்.
 மகேந்திரன் சினிமா கலைஞனாகவே இருக்க ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அதுதான் இலக்கியத்தை சினிமாவிற்குள் கொண்டு வரும் வழி. அது தன்னால் முடியுமென நம்பினார்.
 "நிறைய இளைஞர்களுக்கு சினிமா மீது ஆர்வம் இருக்கிறது. ஆனால் சினிமா பற்றி புரிதல் இல்லை. இலக்கியம் தெரியவில்லை. கதை தெரியவில்லை. தமிழ்நாட்டில் சினிமாவிற்கு ஏற்ற மாதிரியான கதைகள் நிறைய இருக்கின்றன. சில கதைகளை அப்படியே திரைக்கதைகளாக மாற்றி அமைத்துவிடலாம்; பல கதைகளை சிறிது மாற்றி எழுதினால் வெற்றிகரமான சினிமா எடுத்துவிடலாம். சினிமா என்பதே திரைக்கதையில் தான் இருக்கிறது'' என்று மகேந்திரன் நடை பயிற்சியின் போது சொல்லிக் கொண்டே வந்தார்.
 "அப்படியா?'' என்று கேட்டுக் கொண்டே இருந்தேன்.
 "நான் பத்துப் பதினைந்து நாவல்கள், சிறுகதைகளை திரைக்கதை எழுத தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன். நீங்கள் இன்னொரு பத்துப் பதினைந்து நாவல்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுங்கள். நாம் கலந்து பேசி ஒரு பதினைந்து நாவல்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதி புத்தகமாகப் போடுவோம். நன்றாக விற்கும். இளைய இயக்குநர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். எனக்குச் சினிமாவிலும். உங்களுக்கு இலக்கிய உலகத்திலும் பெயர் இருக்கிறது. அது மற்றவர்களுக்கு பயன்படும்'' என்றார்.
 ""நீங்கள் சினிமா இலக்கியம் தெரிந்தவர்கள், பல கதைகளுக்கு திரைக்கதை எழுதி சினிமாவாக எடுத்து இருக்கிறீர்கள். எந்த நாவல், எந்தச் சிறுகதை சினிமாவிற்குப் பொருத்தமாக இருக்கும் என்பதை உங்களால் தான் கணிக்க முடியும்'' என்றேன்.
 அவர் ஒன்றும் சொல்லாமல் சிறிது தூரம் கூடவே நடந்து வந்தார். பின்னர், "நீங்கள் நல்ல நாவல், சிறந்த, சிறுகதைகள் பட்டியல் கொடுங்கள். நான் புத்தகங்கள் வாங்கிப் படிக்கிறேன். பிறகு நாம் சந்தித்து எவை எல்லாம் சரிபடும் என்ற முடிவு செய்வோம். அவற்றுக்கு நான் திரைக்கதை வசனம் எழுதி விடுகிறேன். எழுதுவதில் எனக்குச் சிரமம் இல்லை. புத்தகம் போடவும், பதிப்பகங்கள் தயாராக இருக்கின்றன'' என்றார்.
 கை கூப்பி விடை பெற்றோம். பின்னர் அவர் அடையார் கேட் பகுதிக்கு நடைபயிற்சிக்கு வரவே இல்லை. நாவல் சிறுகதைப் பட்டியல் என் சட்டைப் பையில் பல நாட்கள் இருந்தது.
 மகேந்திரன், ராஜா அண்ணாமலைப்புரத்தில் இருந்து வீடு மாறி போய்விட்டார் என்று "உதிரிப்பூக்கள்' பாலகிருஷ்ணன் ஒரு நாள் சொன்னார்.
 (அடுத்த இதழில் நிறைவுறும்)
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும்: இபிஎஸ்

பாரமுல்லாவில் அதிக வாக்குப் பதிவு: தொகுதி மக்களுக்கு பிரதமா் பாராட்டு

நெதன்யாவுக்கு எதிராக கைது உத்தரவு: பிரான்ஸ், பெல்ஜியம் ஆதரவு

தனியாா் பள்ளிகளில் இலவச கல்வி சோ்க்கைக்கு 1.30 லட்சம் போ் பதிவு

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை: சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? கேரள அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் கேள்வி

SCROLL FOR NEXT