தினமணி கொண்டாட்டம்

உலகமயமாக்கல் வாழ்க்கை முறையை மாற்றி விட்டது! 

DIN

""சென்னையின் முகம் முழுக்க மாறி விட்டது. முன்பெல்லாம் ஏரியாவுக்கு இரண்டு, மூன்று குடிசைப் பகுதிகள் இருக்கும். இப்போது அப்படிப் பார்க்க முடியாது. இதை நீங்கள் வளர்ச்சி என்று நினைத்தால் தவறு.  யாருக்கும் எந்தப் பதிலும் சொல்லாமல் அந்தக் குடிசைப் பகுதிகளை அரசாங்கம் அப்புறப்படுத்தி விட்டார்கள். சென்னை மண்ணின் மைந்தர்கள் எல்லாம் இப்போது ஊருக்கு வெளியே இருக்கிறார்கள். இங்கே இருக்கும் சில குடிசைப் பகுதிகளும் எப்போது வேண்டுமானாலும் காணாமல் போகலாம். மாநகரத்துக்கு வெளியே நானும் வாழ்ந்து வருவதால், அங்கே வாழ்கிற மனிதர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்... அவர்களின் ஆசை, கனவு எல்லாம் என்ன? என்று எனக்குத் தோன்றியதை எழுதி படமாக்கியிருக்கிறேன்.'' அர்த்தம் தெறிக்கப் பேசுகிறார் "மின்னல்' முருகன். சண்டை பயிற்சி இயக்குநராக அறியப்பட்டவர், இப்போது "புறநகர்' படத்தின் இயக்குநர். 

""ஒரு காலத்தில் சென்னையின் மத்தியில் வாழ்ந்தவர்கள்தான் இன்றைய புறநகர் மக்கள். கூடுவாஞ்சேரி, மாங்காடு, மறைமலைநகர், ஊத்துக்கோட்டை என சென்னைக்கு வெளியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்து பஸ், ரயில் பிடித்து மாநகரத்துக்கு வேலைக்கு அவர்கள் வந்து செல்வதே பெரும் போராட்டம்.  உலகமயமாக்கல் நம் வாழ்க்கை முறையையே மாற்றி விட்டது. 

சாப்பிடுகிற சாப்பாட்டையும் மாற்றியது போல், வாழ்க்கை முறையையும் மாற்றி விட்டது. பூந்தமல்லி தாண்டிப் போனால், மக்களின் வாழ்க்கை முறையும், அடிப்படை தேவைகளும் வேறு மாதிரி இருக்கிறது. மனிதர்களின் முகங்களே மாறி இருக்கிறது. ஆனால், புறநகர் மனிதர்கள் அந்த மாற்றங்களை சும்மா வேடிக்கை பார்த்துவிட்டு கடந்துபோவார்களா? இல்லை அதை அனுபவிக்க முயற்சி செய்வார்களா? இப்படிப் புறநகர் மனிதர்களின் வாழ்க்கையில் உலகமயமாக்கல் ஏற்படுத்துற தாக்கம்தான் கதை.''

""இந்த நகரத்தை உருவாக்கியவர்களை இங்கிருந்து அகற்றி நகரத்துக்கு வெளியே கண்ணகி நகருக்குத் தள்ளி விடுகின்றன அரசும் அதிகாரமும். குடிசைப் பகுதிகள் எல்லாம் அழிந்து வணிக வளாகங்களும், அடுக்குமாடி குடியிருப்புகளும் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. 

ஒவ்வொரு விடியலிலும் அரசியல் வாரிசுகளும் பண முதலைகளும் தொழில் அதிபர்களும் பொக்லைனோடு வந்து நிற்பார்களோ என்ற நிராதரவான பயத்துடனே கழிகின்றன சென்னை மைந்தர்கள் வாழ்க்கை. அந்தப் பயத்தில்தான் எப்போதும் குடிசைப் பகுதிகளில்  ஒரே கம்பத்தில் மாறி மாறி ஆளும் கட்சிக் கொடிகள் பறந்து கொண்டே இருக்கின்றன. திடுதிப்பென்று எழுந்து நிற்கும் கட்டடங்கள் விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகளுக்குத் தெரியப்போவது இல்லை.... அதற்கு முன்பு அங்கே விளையாடிக் கொண்டு இருந்த பிள்ளைகளின் நிரந்தரமற்ற எதிர்காலம்.''

""புறநகர் மக்களின் வாழ்க்கையில் கேலி, கிண்டல், கொண்டாட்டம் எல்லாம் உச்சத்தில் இருக்கும். அதை அப்படியே இயல்பாகப் பதிவு செய்ய நினைத்தேன். அதற்காகப் புறநகர் பகுதியில் இருந்த கமல் கோவின்ராஜ் என்பவரை கதாநாயகனாக ஆக்கினேன். இவர் ஒரு ஜிம்னாஸ்டிக் வீரர். அதே இயல்பும், குணமும் கொண்ட  அவருக்கு ஜோடி சுகன்யா . பட்ஜெட்டுக்குள் சில நடிகர்களை கொண்டு 60 நாள்களில் முடித்த படம் இது. 

எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தி உள்ள மனிதனால் எவ்வளவு காசு, பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கி விட முடியாது. இப்போதுள்ள வாழ்க்கை சவால்தான். அதுவும் ஆண், பெண் உறவுகளுக்குள் உள்ள சிக்கல்கள் ஏராளம். எண்ணங்கள் பொருந்திப் போனால்தான் எந்த விஷயமும் ஈடேறும். இது காதலுக்கு அப்படியே பொருந்தும். ஆனால், நாளடைவில் எல்லாவற்றிலும் சலிப்பு, பிரியமானவர்கள் மீது காட்டுகிற அன்பு அவர்களை சந்தோஷப்படுத்தவில்லை. என்னை நானே சந்தோஷப்படுத்திக் கொள்ளத்தான் என்ற நிலை உருவானால் அந்த வாழ்க்கை என்னவாகும்... அப்படியோர் பாதையில்தான் இந்தக் கதை பயணமாகும். காமெடி, ஆக்ஷன், த்ரில்லர் என இந்தக் கதை வழக்கமான பார்வைதான். ஆனால் அதைத் தாண்டிய சுவாரஸ்யங்கள் ஒளிந்து கிடக்கின்றன. 

எங்கிருந்தோ வந்தவர்கள் கூவத்தின் கரையில், நெருக்கியடிக்கும் குடிசைகள் போட்டு கொசுக்களோடு வாழ்கிறார்கள் இந்த மண்ணின் பிள்ளைகள். சென்னை என்பது, கபாலிகளின் நகரம். ஆனால், இன்று வரை திருடன், பிக்பாக்கெட், சாராய வியாபாரி என்பவைதான் கபாலிகளைப் பற்றிய ஜோக்குகளிலும் சினிமாக்களிலும் நாம் அறிந்த சித்திரங்கள். தங்களுக்கான வாழ்நிலத்தில் எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டு, வறுமைக்குள் கிடக்கும் கபாலிகளையும் முனியம்மாக்களையும் பற்றி நாம் அறிந்துணரவே இல்லை.''

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறார் வாகனம் ஓட்டினால் ஆர்.சி. ரத்து; ரூ.25,000 அபராதம்: ஜூன் 1 அமல்

காஸா - எகிப்து எல்லையை இஸ்ரேல் ராணுவம் முழுமையாகக் கைப்பற்றியது

கருத்துக் கணிப்பு வெளியிட்ட தொலைக்காட்சி: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

இருளுக்கு எதிராகப் போராடும் வலிமை கொடுத்தவர் மகாத்மா: ராகுல் காந்தி

பட்டதாரிகளுக்கு ராணுவ அதிகாரிப் பணி: காலியிடங்கள் 459

SCROLL FOR NEXT