தினமணி கொண்டாட்டம்

மனிதர்களைத் தெரிந்து கொள்கிற விந்தை !

DIN

ஒரு காட்சியை சினிமாவாக்க நிறைய வழிகள் இருக்கும். ஆனால், எல்லாவற்றையும் செய்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அப்படி செய்தால் எந்த சுவாரஸ்ய புள்ளியையும் தரிசிக்க முடியாது. காட்சிப்படுத்த எது சிறந்த வழி என்பதைப் பார்த்து ஆராய்ந்து எடுக்க வேண்டும். அது ஒரு நுட்பமான பயிற்சி. ஒரு நல்ல திரைக்கதைதான் சினிமாவின் தன்மையைத் தீர்மானிக்கிறது. அதன் பின் இயக்குநருக்கும், ரசிகர்களுக்கும் மத்தியில் இருக்கிற புரிதல். அது மட்டும் இருந்தால், உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பது போல எளிமையானது அது. அழுத்தமாகப் பேசத் தொடங்குகிறார் இயக்குநர் ஹரி உத்ரா. "தெரு நாய்கள்', "படித்தவுடன் கிழித்து விடவும்' படங்களின் இயக்குநர். இப்போது "கல்தா' படத்தின் மூலம் மீண்டும் கதை சொல்ல வருகிறார்.

கல்தா.... தலைப்பு தருகிற பொருள் எப்படி....
 கதைதான் இங்கே அதி முக்கியம். தலைப்பு என்பது கவர்ந்திழுக்கும் மையம்தான். "கல்தா' என்பது பொதுவாக அரசியல் வட்டத்தில் உச்சரிக்கப்படும் சொல். அவர் இன்றைக்குக் கல்தா கொடுத்து விட்டார் என சொல்லுவார்கள். அந்த ஏமாற்றம், அதன் தாக்கம்தான் தலைப்பு. மற்றபடி இது முழுக்க முழுக்க அரசியல் கதை. அரசியலை விட தனி மனிதனுக்கான உரிமை, அதிகாரம், ஜனநாயகம் எல்லாவற்றையும் பேசும் படம். நிச்சயமாக சூழ்நிலை ஒருவனை மாற்றும். அப்படி சிலரை மாற்றி எங்கெங்கோ கொண்டு போய் வைக்கிற கதைதான் இது. இங்கே கதைக்காகவோ களத்துக்காகவோ அலைய வேண்டிய அவசியமே இல்லை.
 ஒருவனை, அவன் வாழ்க்கையை ஆழமாகப் பார்த்தாலே கதை. அவனோடு ஊர் வரைக்கும் தேடிப் போனால் அது களம். அப்படி நான் படித்த பத்திரிகை செய்தி, அதன் பின் தொடர்ந்து சென்று பார்த்தால் இப்படித்தான் கதை. தமிழக - கேரள எல்லையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் குறித்த செய்திதான் அது. அதன் பின்னால் போய் பார்த்தால் அதனுள் அவ்வளவு அரசியல். அதையெல்லாம் சினிமாவுக்கான சமரசங்களுடன் புனைந்து வந்திருக்கிறேன். அதிகாரம் என்ற ஒன்று நம்மை எப்படி எல்லாம் துரத்தி அடிக்கிறது... நாம் ஒவ்வொருவரும் இந்த அதிகாரத்துக்கு முன்பாக, ஒன்றும் செய்ய இயலாதவர்களாக வாழ்க்கை முழுக்க நமக்கே தெரியாமல் போராடித் தவிக்கிறோம். வாழ்க்கை நம்மைப் புரட்டிப் போட்டால் எல்லாமே மாறும். அப்போது மனிதர்களைத் தெரிந்துக் கொள்கிற விந்தையும் நடக்கும். அப்போது நிகழ்கிற அற்புதங்களும் அபத்தங்களும்தான் இந்தக் கதை.
 
 ஆய்வு அனுபவம், படமாக்கிய பக்குவம் எப்படி இருக்கும் படம்...?
 இப்போது கூட பார்க்கலாம், நமக்கு ஆகாத, பிடிக்காத ஒரு விஷயத்தை எங்கேயும், எந்த நிமிஷமும் நாம் எதிர்கொள்ள வேண்டி வரும். மொத்தமாகவே, சகலத்திலும் ஊழல் என்கிற இடத்தில் வந்து இப்போது நின்று கொண்டு இருக்கிறோம். சகித்துக் கொண்டால் வாழ்வு வசப்படும். பொறுமை இழந்தால், வாயைத் திறந்து, கண்கள் சிவந்து கேள்வி கேட்டால் அங்கேதான் பிரச்னை ஆரம்பம். அப்படி ஒரு கட்டம் இந்தக் கதையில் இருக்கிறது. குடும்பம், சமூகம் என சகல மட்டங்களிலும் கேள்வியை முன் வைக்கிற கதை. அதுதான் மொத்த படமும். எனக்கான, நமக்கான உணர்வாக, மனிதனாகக் காட்சிப்படுத்தியதுதான் புதிது. வசதி மட்டுமே சந்தோஷம் இல்லை. அதுக்குப்பிறகு கூட சித்தார்த்தன் துறவுக்குப் போனது நடந்திருக்கிறது. கழுத்தில இருக்கிற வரைக்கும்தான் தங்கம். திருடன் கழுத்தில் கத்தி வைத்து விட்டால் இரும்பு குண்டு மாதிரி அதுவே கனக்கும். எங்கே நிம்மதி, எப்போது சந்தோஷம் என்று எதையும் எளிதாக அர்த்தப்படுத்திட முடியாது.

விமர்சனம் அதிகமாக இருக்குமோ...
 எல்லா இடங்களிலும் லஞ்சம், பொய், ஊழல் என மிடில் கிளாஸ் மாதவன் ஒருவர் தவறாமல் நம் தெரு முனை டீக்கடையில் கருத்துச் சொல்லுவார்.
 ஆனால், பெரும்பான்மையான நடுத்தர வர்க்கம் நாம் நினைப்பது போல் இல்லை. பிளாக்கில் வாங்கி கேஸ் கனெக்ஷன் வைத்திருப்பது. ஆண்டு வருமானம் 40 ஆயிரம் என்று சொல்லி பொய் சான்றிதழ், சலுகைகளை அனுபவிக்கிறோம். இப்படி சூழ்ச்சியும் மாய மந்திரங்களும் நிரம்பி கிடக்கிற வாழ்க்கை இந்தச் சமூகத்துக்கு மட்டுமே உரித்தானது. இப்படி பல சலுகைகள் தன்னகத்தே இருந்தாலும், இன்னும் பணம் வேண்டும் என்ற ஆசையில் கையில் இருக்கும் சுக, துக்கங்களை மறந்து விட்டு ஓடுவதுதான் இங்கே காமெடி. ஆனால், பயங்கரக் காமெடியன்களாகச் சமூகத்தால் பார்க்கப்படுகிற எல்லோரும் காமெடியன்கள் அல்ல. அவர்கள் எல்லாம் காரியவாதிகள். சமூகம்தான் அவர்களைத் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறது. சாண் வயிற்றுக்காக திருடுகிறவர்களை விட, மக்களின் சேவகராக தன்னை நிலை நிறுத்தி திருடுகிறவர்கள் இங்கே நிறைய. அப்படிப்பட்ட திருடுகிறவர்களின் உலகத்தை எட்டிப் பார்ப்பதுதான் இந்தப் படம்.

மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனியை கொண்டு வந்திருக்கீங்க போல....
 நிறைய திட்டங்கள் இருந்தன. எல்லாவற்றையும் பட்ஜெட்டுக்குள் முடிக்க வேண்டிய கட்டாயம். அதே நேரத்தில் கதையின் தன்மையைப் புரிந்தவர்கள் துணைக்கு வந்தார்கள். "மேற்கு தொடர்ச்சி மலை' ஆண்டனிக்கு மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு. இது தவிர அப்புக்குட்டி, அயிரா, கஜராஜ், ராஜசிம்மன், தங்கதுரை, எல்லோருமே தெரிந்த முகங்கள்தான். எல்லோருமே சாதிக்கத் துடிக்கும் இதயங்கள். இந்தக் கதையின் ஓட்டத்துக்கு எல்லோருமே பிரதானம். யாருக்குமே சமரசம் எதுவுமில்லை. எது தேவையோ அதை தந்திருககிறார்கள். கவிஞர் வைரமுத்து இரு பாடல்களைத் தந்திருக்கிறார். குறிப்பாக இசையமைப்பாளர் தேவா ஒரு பாடலைப் பாடியுள்ளார். எல்லோருக்கும் இந்தப் படத்தில் தனித்துவமான இடங்கள் உண்டு. கேரள எல்லையில் உள்ள ஒரு மலை கிராமத்தில் தங்கி படப்பிடிப்பு நடத்தியிருக்கிறேன். வாய்ப்பு தந்த மலர் மூவி மேக்கர்ஸ் ரகுபதி சாருக்கு நிறுவனத்துக்கு நன்றி.
 -ஜி.அசோக்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகம்: அமித் ஷா பிரசாரம்

அமலாக்கத்துறை, சிபிஐ காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்டவை: மத்திய சட்ட அமைச்சா் விளக்கம்

பறவைக் காய்ச்சல்: தமிழக - கேரள எல்லைகளில் மருத்துவக் கண்காணிப்பு

நீண்டகால பெண் எம்.பி.

பள்ளிவாசல் நிா்வாகிகள் தோ்தலில் முறைகேடு: நடவடிக்கை கோரி மறியல்

SCROLL FOR NEXT