பள்ளிக்கு வரும் சிறார்களில் சிறுவர்கள் சட்டை, டிரெளசர் அணிவார்கள். சிறுமிகள் சட்டை, பாவாடை அணிவார்கள். மாணவ, மாணவிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சீருடை பத்தாம் வகுப்பு முதல் சில பள்ளிகளில் உள்ளது. சில பள்ளிகளில் சட்டை , முழுநீள கால் சட்டையை மாணவ மாணவிகள் அணிகிறார்கள். தொடக்கப்பள்ளி நிலையில் சிறுவர் சிறுமிகளுக்கு ஒரே மாதிரியான உடை அறிமுகப்படுத்தவில்லை.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் வலயஞ்சிரங்காரா என்ற ஊரில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி இரு பாலருக்கும் பாகுபாடு ஏதும் இல்லாமல் ஒரே சீருடையை அறிமுகப்படுத்தியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தத் தொடக்கப்பள்ளியில் பாலின பாகுபாடு இல்லாத சீருடையை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சட்டையும், பெர்முடா மாதிரியான முக்கால் டிரவுசரும் சீருடையாக அறிமுகப்படுத்தலாம் என முடிவானது. கால்சட்டை பெர்முடா மாதிரி முழங்காலை மூடும் அளவுக்கு நீளம் உள்ளதாக இருந்தாலும் அகலம் இப்போதைய கால்சட்டை மாதிரி ஒடுங்கியே இருக்கும்.
""பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஒரே சீருடையை அறிமுகம் செய்திருக்கும் பள்ளிக்கு 105 வயதாகிறது. குட்டைப் பாவாடையில் வரும் சிறுமிகளுக்கு விளையாடும் போது, காற்று பலமாக வீசும் போது, பல அசெளகரியங்கள் இருப்பதால் ஒரு தடவைக்குப் பலமுறை யோசித்து இந்த முடிவுக்கு வந்தோம். எங்களது யோசனையை மாநில கல்விக் குழுவும் ஏற்றுக் கொண்டது. ஏற்கெனவே எடுத்திருந்த முடிவை செயல்படுத்துவதில் கரோனா காரணமாக தாமதம் ஏற்பட்டுவிட்டது. இந்தப் பழமையான பள்ளியின் ஒரே மாதிரியான சீருடையைப் பார்த்து இனி எல்லா பள்ளிகளும் ஒரே பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஒரே சீருடையை அறிமுகப்படுத்தும் என்று நம்புகிறோம்'' என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர்.