ஞாயிறு கொண்டாட்டம்

பிரிவுகளையும் பிரியங்களையும் நிரப்பும் குரல்!

ஜி. அசோக்

""ஒரு சமூகத்தின் நீதி கல்வி கூடங்களில்தான் பிறக்கிறது. ஆசிரியர்களிடம் இருந்துதான் ஒவ்வொரு சமூகமும் முதல் ஒளி வாங்கி கொள்ள முடியும்.''

இரண்டே வார்த்தைகளில் கதையின் ஆழம் பேச தொட்டுப் பார்க்கிறார் இயக்குநர் ராஜ்மோகன். யூடியூபர், பேச்சாளர் என பன் முகங்களை கொண்டவர். இப்போது "பாபா பிளாக் ஷீப்'  படத்தின் மூலம்  சினிமா இயக்கத்துக்கு வந்திருக்கிறார். 

இணைய தளம், மேடை என நீங்கள் ஏற்கெனவே பரிச்சயம், இப்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகுமே....

எல்லாவற்றுக்கும் இங்கே முன் மாதிரிகள் இருப்பதால், உங்களுக்கு அப்படித் தோன்றும். இது ஒரு அழகான பள்ளி வாழ்க்கை... இதில் எல்லாமும் இருக்கும்.   
வரம்பு மீறிய காதல், காமம், பெற்றோர்களை ஏமாற்றுவது, பொய் சொல்லுவது.. இன்னும் இன்னப் பிற மீறல்களைத்தான் பல சினிமாக்கள் அர்த்தப்படுத்தி வந்திருக்கின்றன. இது அது மாதிரி இல்லாமல், வேறொரு மீட்டொருவக்கத்தில் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. பெரு நகர வாழ்க்கை, தேடல்கள் ஆனாலும், எப்போதைக்குமான மனசு அந்தப் பள்ளி, கல்லூரி என காதல் வாழ்க்கையிலேயே சிலாகிக்க விரும்புகிறது. சக தோழர்கள், ஆசிரியர்கள், அந்த மர நிழல், குளம், ஆறு என எதையும் மறக்க மறுக்கிறது மனசு. ஆயிரங்களில் இருந்து லட்சங்களுக்கு மாறின வாழ்க்கை கிடைத்தாலும், இன்னொரு முறை அந்த வாழ்க்கையை வாழவே முடியாது.  வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பது மாதிரி,  முகத்தால்... குரல்களால்... செயல்களால்... சாயல்களால்தான் நம் பிரிவுகளையும் பிரியங்களையும் நிரப்பிக் கொண்டே இருக்கிறோம். ஆசிரியர்கள் நமக்குச் சொல்லித் தந்த பூக்கள், எப்போதும் உதிராத பூக்கள். நிறம் இழக்காமல் , வெயில் மழை குடிக்கும் பூக்கள். எங்கே சென்றாலும், என்ன ஆனாலும்  ஆசிரியர்களுக்கு நாம் சிறு பிள்ளைகள்தான். அவர்கள் கடவுளின் நிழல் போல் எங்கோ இருக்கிறார்கள். வயதாகி உடல் உடைந்து சிரமங்கள் கடந்து எப்படி எப்படி எல்லாமோ ஆகி விடுகிறார்கள். ஆனால், நம் நினைவில் நிற்பது கம்பீரமான ஆசிரியர்கள்தான். பறவையின் இறகைப் போன்ற அப்பழுக்கு எதுவும் இல்லாத நமது பால்யத்தை எடுத்துக் கொண்டு ஆசிரியர்கள் போய் விடுகிறார்கள். அதனால்தான் காலத்துக்கும் அவர்களை நினைத்துக் கொண்டே இருக்கிறோம். 

கல்வி கொள்கைகளுக்கு எதிரான சாட்டையடி என்பது போல்தான் இங்கே சினிமாக்கள் வந்து சேர்கின்றன....

ஒரு பள்ளி  என்பது, ஒரு சமூகம். ஒரு தேசம். அங்கிருக்கும் சூழலையும் சக மாணவர்களையும் அனுசரிக்க முடியாமல் போனதுதான் இங்கே பல பேருக்கான பிரச்னை. அது வெறும் வாடகை சத்திரம் அல்ல. அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம். ரசவாதக் கூடம். மாறுபவனும் இருக்கிறான். மாற்றப்படுகிறவனும் இருக்கிறான். எல்லா கல்லூரிகளிலும் யாரோ ஒருவன் வீட்டுக்கு அடங்காமல் வந்து சேருகிறான். யாரோ ஒரு மாணவனுக்கு காதல் பூக்கிறது. ஒருவனுக்கு மரணம் நிகழ்கிறது. யாரோ ஒருவன் கலைஞனாகிறான். கவிதை எழுதுகிறான். அரசியல் கற்று உணர்கிறான். ஒருவன் குற்றவாளியாகிறான். நிறைய பேர் திருந்துகிறார்கள். யாரோ ஒருவன் தன்னைத்தானே கண்டுபிடித்துக் கொள்கிறான். வெகு நாள்களுக்கு பிறகு... பள்ளி  என்பது ஒரு வனத்தை கடந்த மாதிரி இருக்கிறது எல்லோருக்கும். இதுதான் கதையின் அடிப்படை. இது மாதிரி ஒவ்வொரு இடமும் கவனிக்கத் தோன்றும். 

கதை என்பதை தாண்டி, அது கையாளப்படுகிற விதங்களுக்குதான் இப்போது வெற்றி முகம்... இது எந்த விதத்தில் மாறுபடும்...?

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நாகரீக மாற்றங்கள், பொருளாதார நெருக்கடி, அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கை, துரித உணவு முறை என ஒவ்வொன்றும் குழந்தைகளின் கோபத்தை சுமந்துக் கொண்டுதான் நிற்கின்றன. இதை விட ஒரு கொடுமை.... ஒரு தகப்பனாக எனக்கும் என் மகளுக்குமான இடைவெளியை யாரோ போட்டு வைத்த சட்ட திட்டங்கள் தீர்மானிப்பதுதான். பெண்களுக்காவது வீட்டில் அம்மாக்கள் இருக்கிறார்கள். உடல் சம்பந்தமான சந்தேகங்களை மகளுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டியது தன்னுடைய கடமை என்று நினைக்கிற பக்குவம் அவர்களுக்கு இருக்கிறது. அப்பாக்களுக்கு அந்த பொறுப்புணர்வு இல்லை. அதனால் நம் நாட்டில் வயது பெண்களை விட, வயது பையன்கள்தான் பாவம். தன் உடலில் நடக்கிற மாற்றங்களை நினைத்து குழம்பி, அநாவசியமாக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். சில நேரங்களில் நாம் மீட்கவே முடியாத தூரத்துக்கு போய் விடுகிறார்கள். நம் வீட்டிலேயே வளர்ந்தாலும், நிறைய டீன் ஏஜ் குழந்தைகள் காணாமல் போனவர்கள் பட்டியலில்தான் இருக்கிறார்கள். இப்படி நிறைய விஷயங்களை இந்தப் படம் பேசும். 

பேச வேண்டிய விஷயம்தான்... வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்...?

 சிறுவர்களின் உலகம் அப்பழுக்கு இல்லாத பிராயம். ஏக்கம், கனவு, ஆசை, பொறாமை, வன்மம், ஈகோ, மன்னிப்பு, காதல், தண்டனை என எதுவும் இல்லாத இதயங்கள். உண்மையில் பரிசுத்தங்கள். இல்லாத போது ஏங்குவதும், இருக்கிற போது ஆடுவதுமான மன நிலை அவர்களுக்கு இருப்பதில்லை. எப்போதும் ஒரே மன நிலைதான். குழந்தையாக வந்து குழந்தையாகி போகும் இந்த வாழ்க்கையில், எல்லோரும் மீண்டும் குழந்தையாகி விடுகிற தருணத்தைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம். என்ன முயற்சி செய்தாலும், நம்மால் நுழைந்து விடவே முடியாத உலகம் அது. ஒரு மழைக் காலையில் ஜன்னல் விளிம்பில் நெளிந்த மரவட்டை, ரயில் பூச்சியானது ஒரு குழந்தைக்குத்தானே?  ஊளையிடும் நரிகள் கதையானதும் ஒரு குழந்தைக்குத்தானே? மரக்கிளை தூளியாவது...சுவர்களின் கிறுக்கல்கள் ஓவியமாவதும் குழந்தையால்தான்...? குழந்தைகளின் உலகத்தில் அசிங்கம் என்பதே இல்லை. அதனால்தான் உலக இலக்கியங்களும், சினிமாக்களும், கதைகளும் குழந்தைகளை பற்றியே பேசி விடுகின்றன. ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்து கிடக்கும் குழந்தைதான் மனித இனத்தின் பேரழகு. அதுதான் இந்தக் கதையின் ஊடாக வெளிப்படும். 

"விருமாண்டி' அபிராமியை கொண்டு வந்துருக்கீங்க....

 ஒரு அன்னையாக மிக முக்கிய வேடத்தில், "விருமாண்டி' அபிராமி நடிக்கிறார். ஒரு உணர்ச்சிகரமான காட்சியில் மொத்த படக்குழுவும் அவரது நடிப்பை கண்டு கண்கலங்கியுள்ளது.  அம்மு அபிராமி, அயாஸ், நரேந்திர பிரசாத், ஆர் ஜே விக்னேஷ்காந்த்,  சுப்பு பஞ்சு,  சுரேஷ் சக்ரவர்த்தி, போஸ் வெங்கட், வினோதினி.... இப்படி முக்கிய இடங்களை இவர்கள் எல்லாம் நிரப்புகிறார்கள். 
ஒளிப்பதிவு பொறுப்பை சுதர்சன் சீனிவாசன், இசைக்கு  சந்தோஷ் தயாநிதி படத்தொகுப்புக்கு விஜய் வேலுக்குட்டி இப்படி நம்பிக்கையான தொழில்நுட்பக் கலைஞர்களின் பக்க பலத்தில் இந்தப் படம் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹேப்பி ஓணம்... மாளவிகா மோகனன்!

சொத்துக்காக மைத்துனரைக் கொன்றவர் கைது!

ஓணம் ஸ்பெஷல்... பாவனா!

உத்தரகண்ட் நிலச்சரிவு: சிதம்பரம் யாத்திரிகர்களை மீட்க நடவடிக்கை -தமிழக முதல்வர்

விஜய் மாநாடு நடத்தக் கூடாது என்பதற்காகவே நிபந்தனைகள் விதிப்பு: ஆர்பி உதயகுமார்

SCROLL FOR NEXT