முகப்பு
இளைஞர்மணி

தோல்விகள் தோற்கடிக்கப்படுவதற்கே!

கற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவன்" என்று ஒரு பள்ளியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டான் ஒரு சிறுவன்.

Updated On : 4 ஜூன் 2019, 10:53 am IST
பகிர்:

தன்னிலை உயர்த்து! 47 ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.
கற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவன்" என்று ஒரு பள்ளியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டான் ஒரு சிறுவன். அதே சிறுவனை அவரது இரண்டு முதலாளிகளும் "ஆக்கத்திறன் இல்லாதவன்" என்று வெளியேற்றினர். கடைசியில் அச்சிறுவன்தான் இந்த உலகம் வியக்கும் ஆக்கத்திறனுடைய தாமஸ் ஆல்வா எடிசன் என்ற விஞ்ஞானியாக உருவானார்.
அவர் மின்சார பல்பைக் கண்டுபிடிப்பதற்காக ஆயிரம் முறை முயன்று தோல்வியுற்றார். "ஆயிரம் முறை தோல்வியுற்றபோது நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்?'' என ஒரு பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டார். அதற்கு எடிசன், "நான் ஆயிரம் முறை தோல்வி அடையவில்லை. மின்சார விளக்கைக் கண்டுபிடிக்க ஆயிரம் படிகளைத் தாண்டி வர வேண்டியுள்ளது''" என்றார். மேலும், "மின்சார ஒளியினை டங்க்ஸ்டன் இழைகளைத் தவிர இதர உலோகங்களோ, உலோகக் கலவையினாலோ உருவாக்க முடியாது''" என்பதை இந்த உலகம் தெரிந்து கொண்டது என்றார்.
"தோல்வி என்பது சிறந்த நுட்பத்துடன் ஒரு செயலை மீண்டும் துவக்குவதற்கான ஓர் அரிய வாய்ப்பு'" என்ற ஹென்றி ஃபோர்டின் வரிகளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். ஆதலால்தான் 1914-ஆம் ஆண்டில் அவரது ஆய்வகத் தொழிற்சாலை தீயில் கருகியபோது, "அழிவில் பெரிய நன்மை இருக்கிறது. எனது எல்லா தவறுகளும் தீயில் கருகி விட்டன. இனி நான் புதிதாக எதையும் தொடங்கலாம்''" என்ற நம்பிக்கை வார்த்தைகளை மண்ணிற்கு விதைத்தார்.
தோல்வி என்பது அழுவதற்கல்ல; ஆற்றலை வளர்ப்பதற்கு. தோல்வி துவண்டு விடுவதற்கு அல்ல; மீண்டு வருவதற்கு. தோல்வி புதைந்து போவதற்கல்ல; விதையாய் முளைப்பதற்கு. எனவே, தோல்வியடைதல் ஒரு கலை. வெற்றியை நோக்கி தோல்வியடைகின்றபோது தோல்வி ஒரு கவிதையாகிறது. ஒரு சிறந்த வெற்றியின் அழகு அதன் பெரிய தோல்வியிலிருந்துதான் நிர்ணயிக்கப்படுகின்றது. தோல்வி என்பது முற்றுப்புள்ளி அல்ல. அது காற்புள்ளி. தோல்வி செயலின் முடிவல்ல; அது வெற்றியின் ஆரம்பம்.
வாழ்க்கை என்பது செயல்பாடுகளின் தொகுப்பு. இதில் வெற்றி என்பதும் தோல்வி என்பதும் அவரவர் மனநிலையே. ஆதலால்தான் தேர்வு முடிவில் கணிதத்தில் நூற்றுக்கு தொன்னூற்று ஒன்பது மதிப்பெண் எடுத்த மாணவன் ஒரு மதிப்பெண்ணை பெறாமல் விட்டுவிட்டேனே என்று தன்னை மாய்த்துக் கொள்கிறான். தேர்ச்சி மதிப்பான முப்பத்தைந்து மதிப்பெண் மட்டுமே எடுத்தவன் வெற்றி பெற்றுவிட்டேன் என்று ஆனந்தமாய் மகிழ்கின்றான்.
தோல்வியேயில்லாத வாழ்க்கையில்லை. ஒவ்வொரு தோல்வியிலும் முன்னைவிட முழுவதுமாக முயன்றவர்களே வெற்றியாளர்களாகப் பரிணமித்திருக்கிறார்கள். அவர்கள்தான் வெற்றியடையத் துடிப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியிருக்கிறார்கள். செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்த ஒரு மனிதர் தனது இருபத்தியோராவது வயதில் வியாபாரத்தில் தோல்வியடைந்தார். புதிய முயற்சியாக அடுத்த ஆண்டே சட்டமன்ற தேர்தலில் நின்றார். அதிலும் தோல்வி அடைந்திருக்கிறார். 
மீண்டும் புதிய அணுகுமுறையில் வியாபாரத்தில் முயற்சித்தார். அதிலும் தோல்வியடைந்தார். தனது இருபத்தியாறாவது வயதில் அவர் திருமணம் செய்யவிருந்த தனது காதலியை இழந்தார். அது அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் தோல்வியாக்கியது. இருப்பினும் அவர் வாழ்வில் நம்பிக்கையிழக்கவில்லை. நரம்புத்தளர்ச்சி நோய்க்கு ஆளானார். 
அத்தகைய சூழலிலும் கருப்பின மனிதர்கள் அடிமைகளாக வாழ்வதைக் கண்டு மனம் வெதும்பினார். அவர்கள் விடுதலை பெற வேண்டும் என்று மனதில் கங்கணம் கட்டிக் கொண்டார். அவர்களுக்காக மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார். அவரது பேச்சுக்கும், கருத்திற்கும் மக்கள் பேராதரவு தந்தனர். ஆனால் தேர்தலில் தோல்வி அடைந்தார். அப்பொழுது அவருக்கு வயது முப்பத்து நான்கு. தொடர்ந்து போராடினார். தனது நற்பத்து ஐந்தாவது வயதில் ஆட்சிக்குழு தேர்தலில் போட்டியிட்டார். அதிலும் தோல்வியைத் தழுவினார்.
அடுத்த இரண்டாண்டில் நடைபெற்ற துணை ஜனாதிபதி போட்டியில் தோல்வி கண்டார். அவரது துன்பமான காலத்தில் அவரது நண்பருக்கு ஒரு கடிதம் எழுதினார். "நான் மிகவும் பரிதாபமான மனிதராக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். நான் அனுபவித்த துன்பங்களை உலகின் அனைத்து குடும்பங்களுக்கும் சரிபாதி பகிர்ந்தளித்திருந்தால், இந்த உலகில் மகிழ்ச்சியான முகத்துடன் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்'" என எழுதினார்.
எனினும் தனது சொல்லாற்றலும், சமூக சிந்தனையாலும் ஐம்பத்திரண்டாவது வயதில் அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.
என்ற தெய்வப்புலவர் திருவள்ளுவரின் வரிகளுக்கேற்ப இடைவிடாது தோல்விகளும், துன்பங்களும் வந்தாலும் யாரொருவர் அதனைக் கண்டு கலங்காமல் ஊக்கத்துடன் தொடர்ந்து முயற்சிக்கிறாரோ அவரிடம் தோல்வியும் தோற்றுப் போகிறது. அத்தகைய விடாமுயற்சியால் அமெரிக்காவில் கருப்பின மக்களின் அடிமைத்தனத்தை அகற்றியவர் ஆப்ரஹாம் லிங்கன். ஒவ்வொரு முறையும் தோல்வியடைவது அவமானமல்ல. ஒவ்வொரு தோல்விக்குப்பின்னும் முயற்சிக்காமல் இருப்பதுவே அவமானம் என்பதுதான் அவரது வாழ்க்கைச் செய்தி.
தோல்வியின் பாடங்கள் கடினமானவை என்றாலும் அது புரியவைக்கும் செய்தியோ ஆழமானது. களிப்பான வெற்றியைக் கொண்டாடி மகிழ சில சலிப்பான தோல்விகள் அவசியம். தோல்விகளை வரவேற்கக் கற்றுக் கொண்டவர்களால் மட்டுமே நிலைத்த வெற்றியைப் பெற முடியும். ஏனென்றால் வெற்றியில் கற்றுக்கொள்ளும் பாடத்தைவிட தோல்வியில் கற்றுக் கொள்ளும் பாடமே சரியான பாதையைக் காட்டும். 
முயற்சிக்காமல் கிடைக்கும் வெற்றியும் தோல்விதான். அதேவேளையில் முயற்சித்து கிடைத்த தோல்வியும் வெற்றியே. தோல்விக்கு பிறகும் அணுகுமுறை மாறாவிட்டால் வெற்றியை அடைவது முயற்கொம்பே. புதிதாகக் கற்றுக் கொள்ளாத தோல்வியில் எந்த வெற்றியும் இல்லை. செயல்பாடுகளில் மாற்றங்களை உருவாக்க அவ்வப்போது தலையில் விழும் அன்புக் குட்டுகளே தோல்விகள்.
தோல்விகள் மனிதனைக் கலங்கடிக்கச் செய்யும். அந்நேரத்தில் "என்னால் நிச்சயமாக வெல்ல முடியும். ஏனென்றால் நான் கடந்து வந்த தோல்வியிலிருந்து புதிய பாடத்தினைக் கற்றுக்கொண்டு வெற்றிக்கான புதிய திட்டத்தினை வகுத்திருக்கிறேன்'" என்று மனதால் மார்தட்டிக்கொள்பவர் சாதனையாளனாகிறார்.
சிட்னி பாய்ட்ர் தனது பதினைந்தாம் வயதில் பிழைப்புத் தேடி நியூயார்க் நகருக்கு வந்தார். அவருக்கு ஓட்டலில் பாத்திரம் கழுவும் வேலை கிடைத்தது. பாத்திரம் கழுவிக்கொண்டே வானொலியில் பாடல்
களைக் கேட்பது அவரது வழக்கம். அந்தப் பாடல்களைப் பாடிக்கொண்டே பாத்திரங்களைக் கழுவுவார். ஒருநாள் ஆடல் பாடல் போட்டித் தேர்வு நடைபெற்றது. சிட்னி பாய்ட்டரின் நண்பர்கள் அனைவரும் அவரது திறமையைக் கண்டு அதில் பங்கேற்க அனுப்பினர். சிட்னி பாய்டர் நம்பிக்கையோடு போட்டியில் கலந்துகொண்டார். 
போட்டியின் நடுவர் அவரது நடிப்பைக் கண்டார். "நீ என்ன செய்கிறாய்?'' என்று கேட்டார். "பாத்திரம் கழுவுகிறேன்''" என்று பதிலளித்தார். "பாத்திரம் கழுவுவதை விட்டுவிட்டு ஏன் எங்களது காலத்தை வீணடிக்கிறாய்?'' என்று நடுவர் கேட்டதும் மனம் கலங்கினார் பாய்டர். அப்போது ஒரு முடிவெடுத்தார். நடிப்பு பயிற்சிப் பள்ளியில் கற்று நடிகர் ஆவேன் என உறுதிபூண்டார். அமெரிக்கன் நீக்ரோ தியேட்டரில் தொடர்ந்து ஆறுமாதம் பயிற்சி மேற்கொண்டார். நடிகரானார். பல விருதுகளைப் பெற்றதோடு நடிப்பின் உயரிய விருதான ஆஸ்கர் விருதினைப் பெற்ற முதல் ஆப்ரிக்க அமெரிக்கன் என்ற பெருமையைப் பெற்றார். தோல்வி என்னும் கடலில் துவள்பவர்களை விட தவழ்கிறவர்களே வெற்றியாளர்கள். தோல்வியைக் கண்டு அஞ்சாமலிருப்பதுதான் வெற்றியாளருக்கான முக்கியமான தகுதியாகும். பிறரின் வசைமொழிகளும், செயல்களில் தோல்விகளும் மனதிற்குள் அவ்வப்போது அசைபோட வேண்டியவை. அவைதான் வெற்றிக்கான மாபெரும் உந்துதலைத் தூங்கவிடாமல் தரும்.
தோல்வியைத் தைரியத்துடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும், தோல்வியைப் பரிசீலித்து அதனை வெற்றியாக்குவதற்கான வழிமுறையை ஆராயும் எண்ணமுமே ஒரு வெற்றியாளனுக்கு அறிகுறி. அதனோடு, தோல்விக்குப் பின்னால் புதிய வழியில் முயற்சிப்பவனே மாபெரும் தலைவனாகிறார். 
1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் நாள், ரெளலட் சட்டத்தை எதிர்த்து ஒருநாள் ஹர்த்தாலை இந்தியா முழுவதும் அனுசரிக்க முடிவு செய்தார் மகாத்மா காந்தி. அந்நாளில் மகாத்மா காந்தி பம்பாயை வந்தடைந்தபோது அங்கிருந்தவர்கள் காந்திஜியைச் சூழ்ந்து கொண்டனர். அவர் சென்றவிடமெல்லாம் ஊர்வலமாக மாறியது. அது கோட்டையை நோக்கிப் புறப்பட்டதும், ஆங்கிலேயப் படைகளால் அடித்து தடுத்து நிறுத்தப்பட்டது. அதில் பலர் காயமடைந்தனர். காந்திஜி நடந்தவற்றைத் தெரிவிக்க கமிஷனர் சர் கிரிபித்தின் அலுவலகத்திற்குச் சென்றார். நடந்தவற்றை விவரித்தார். 
அப்பொழுது, "பொதுமக்கள் இயற்கையாகவே அமைதியானவர்கள். அவர்கள் மூர்க்கத்தனமானவர்கள் அல்ல''" என்றார் மகாத்மா காந்தி. அதற்கு கமிஷனர் கிரிபித், "உங்கள் அகிம்சை போதனைகளை மக்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் உங்கள் கருத்துக்களை முழுவதுமாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிந்தால் என்ன செய்வீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு, "அவ்வாறு நிச்சயமாகத் தெரிந்தால் நான் சாத்வீக சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்திவிடுவேன்''" என்றார். 
பின்னர் அங்கிருந்து கிளம்பி அகமதாபாத் வந்தார். அங்கு கேடா மாவட்டத்திற்கு சென்றார். அங்கே மக்கள் அரசாங்கத்தின் பொருட்களைச் சேதப்படுத்தியும், கலவரத்தினை உருவாக்கியும் இருந்தனர். அதனைக் கண்டு, "நான் "இமாலயத் தவறு செய்துவிட்டேன்''" என்றார் மகாத்மா காந்தி. தனது தவறை ஒப்புக்கொண்டதோடு தனது தோல்வியையும் ஏற்றுக்கொண்டார். தான் செய்த தவறுகளை பூதக் கண்ணாடி கொண்டு பார்த்தும், பிறர் செய்யும் தவறுகளை அவ்விதம் பார்க்காமல் இருப்பவரால்தான் நியாயமாக எதையும் மதிப்பிட முடியும் என்ற சிந்தனை கொண்டவர் மகாத்மா காந்தி. 
ஆதலால்தான், தான் செய்த தவறை இமாலயத் தவறு என்றதுடன், மக்களுக்கு சாத்வீகப் போராட்டத்தின் அடிப்படைத் தன்மையைப் புரிய வைக்காமல் அவர்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தியது தனது சாத்வீக சட்ட மறுப்பு இயக்கத்தின் தோல்விக்கு காரணம் என்பதை உணர்ந்தார். மக்களைத் தகுதியாக்குவதற்கு சத்தியாகிரக சபையின் மூலம் சத்தியாகிரக சபையைத் திரட்டினார். "நவஜீவன்', "யங் இந்தியா'" பத்திரிகைகள் மூலம் சத்தியாகிரகத்தை மக்களின் மனதினில் விதைத்தார். தேசத்தின் விடுதலைக் கனவு பலித்தது. 
கற்றுக் கொள்ளாத வெற்றி; தோல்வி !
கற்றுக்கொண்ட தோல்வி; வெற்றி !
(தொடரும்)
கட்டுரையாசிரியர்:
காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.