பெண்கள் ஐம்பது வயதை நெருங்கிவிட்டால் போதும். எங்கேயோ ஒளிந்திருக்கும் மூட்டு வலி சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக் கொண்டு விடும். தரையில் அமர முடியாது. சில இடங்களில் இன்னும் "வெஸ்டர்ன் கிளாஸட்' இல்லாமல் இருக்கிறது. அங்கு குத்துக்கால் போட்டு இந்தியன் டாய்லெட்டில் உட்கார்ந்து இயற்கை உபாதையை கழிக்க முடியாது. அதிக நேரம் நிற்க முடியாது. வாக்கிங் போகவே கஷ்டமாக இருக்கும். இந்த மாதிரியான உபாதைகள் ஆண்களை விட பெண்
களைத்தான் அதிகமாக பாதிக்கிறது. எனவே, சிதையும் வாதம் (OSTEO ARTHRITIS) பற்றி விளக்கிக் கூறுகிறார், ஓய்வுபெற்ற முதுநிலை அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் க. பூங்கோதை.
சிதையும் வாதம் என்றால் என்ன?
சிதையும் வாதம் என்பது மூட்டுக் குருத்தெலும்பு சிதைவினால் உண்டாகும் இயக்க அசைவு முறை பிறழ்வுகளினால் ஏற்படும் நோயாகும்.
இதனை கீல்வாதம் என்றும், முதுமை மூட்டழற்சி, சிதையும் மூட்டு நோய், அத்தி மூட்டு நோய் என்ற பிற பெயர்களாலும் அறியலாம்.
இந்த சிதையும் வாத நோயில் பாலின பாகுபாடு உண்டா?
ஆம், சிதையும் வாதம் ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்கும் நோய் ஆகும்.
இந்த நோயின் அறிகுறிகள் யாவை?
• மூட்டுவலி
• மிருதுத்தன்மை
• மூட்டுப்பிடிப்பு
• மூட்டு நீர்மக்கட்டு (Joint effusion)
• அசையும் போது சொடுக்குப்போடுவது போல சத்தம்
இந்த நோயின் காரணிகள் யாவை?
• மரபுவழி பரம்பரை வளர்ச்சி
• வளர்சிதை மாற்றம் (Metabolic changes)
• விசையியல் சார்ந்தவை (Mechanical)
• ஹார்மோன் குறைபாடு
இந்த சிதையும் வாதம் பெண்களை அதிகம் தாக்குவதன் காரணம் என்ன?
பெண்களின் தொடை எலும்பு சற்றே ஆண்களைக் காட்டிலும் குறுகல்.
பெண்களின் தொடை தசையின் வலிமையும் ஆண்களை விடக் குறைவு.
கசியிழையம் (Synovial cartilage) எனப்படும் குருத்தெலும்பும் பெண்களுக்குக் குறைவு.
கசியிழையம் சிதையும் வீதம் பெண்களுக்கு அதிகம். எஸ்தோகர் எனப்படும் ஹார்மோன் சுரப்பும் 40 வயதுக்கு மேல் பெண்களுக்குக் குறைந்து வருகிறது.
பெண்களைத் தாக்கும் போது; இந்த சிதையும் வாதம் ஆண்களைக் காட்டிலும் அதிக வலியும் இயலாமையும் தரக்கூடியது.
எந்த வயதில் இந்த சிதையும் வாதம் தாக்கும் ?
பெரும்பாலும் 40-50 வயதில்தான் இந்த நோயின் தாக்கம் வெளிப்படுமெனினும் அனைத்து வயதினரையும் இது தாக்கக் கூடியது.
சிதையும் வாதம் உண்டாகும் நுட்பம் என்ன?
• எலும்புகள் உறைவதால் (Stiffness of bones) ஏற்படும். உராய்வைக் குறைப்பது அதன் மேல் மூடியுள்ள கசியிழையம் எனப்படும் ஜவ்வு போன்ற குருத்தெலும்பாகும்.
• விசையியல் காரணங்களாலோ, மரபுவழி காரணங்களாலோ, வயதினால் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தினாலோ இந்த கசியிழையம் கொஞ்சம் கொஞ்சமாக அழியத் தொடங்குகிறது.
• இத்தகு சிதைந்த கசியிழையம் எலும்பின் மேற்பகுதியைச் சரியாகப் பாதுகாக்காது. எனவே எலும்புப் பகுதிகள் வெளிப்பட்டு சேதமடைகின்றன. அதனால் வலி உண்டாகிறது. வலியினால் அசைவு குறைந்து விடுகிறது. மற்றும் எலும்புகளைச் சுற்றியுள்ள தசைகள் தொய்வடைந்து விடுகின்றன.
• மூட்டுறை திரவம்(Synovial fluid) நிரப்பப்பட்டுள்ளதால் ஈரத்தன்மை மிக்க குளிரான பருவ காலங்களில் வலி மிகுந்து காணப்படுகிறது.
சிதையும் வாதம் வந்தால் செய்யக் கூடாதவை என்ன?
அதிக தாக்கம் ஏற்படுத்தக்கூடிய சீரோட்டம், வலைப்பந்து, வேகமாகப் படி ஏறுதல், தாவுவது, மூட்டுக்கு அழுத்தம் கொடுக்கும் குந்துகைகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
சிதையும் வாதம் உள்ளவர்கள் செய்யக்கூடிய பயிற்சிகள் யாவை?
• வலி ஏற்படும் காரணத்தால் மூட்டிற்கு பூரண ஓய்வளிப்பது, நீண்டகால அளவில் பாதகத்தைத்தான் விளைவிக்கும்.
• சிதையும் வாதம் உள்ளவர்கள் குறைந்தபட்சம் மூட்டுகளை இயக்கி குறைந்த அழுத்தம் தரும் பயிற்சிகளை செய்யலாம்.
• மெதுவாக நடப்பது
• நீச்சல்
• மிதிவண்டி அழுத்துதல்
• துடுப்புப்போடுதல்
• நடனம்
• யோகா
எந்த மாதிரியான உணவுகளை உண்ணலாம்?
• பால், தயிர், பாலாடைக் கட்டி
• பசலைக் கீரை
• கடலை, முந்திரி, பாதாம் பருப்பு
• பூண்டு, இஞ்சி
• மீன்
• சோயா
• செர்ரிப்பழம், ஆரஞ்சுப்பழம், எலுமிச்சை
எந்த மாதிரியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும் ?
• அதிக சர்க்கரை
• பொரித்த உணவுகள்
• மாவு பதார்த்தங்கள்
• அதிக அளவு உப்பு
• செயற்கை பதன சரக்குகள்
சிதையும் வாதம் குறைய வேறு எளிய முறைகள் எனன?
• வலியை அதிகப்படுத்தும் செயல்பாட்டைத் தவிர்த்தல்
• அதிக உடல் பருமன் உள்ளவர்கள் உடல் எடையைக் குறைத்தல்
• கால்சியம் மற்றும் விட்டமின் "டி' நிறைந்த பால், கீரை, பீன்ஸ், மீன்கள் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுதல்
• ப்ரேசஸ் எனப்படும் பிடிப்புக் கருவிகள் பயன்படுத்துதல்
• மீள்கட்டுகள்(Crepe bandage) மற்றும் வெந்நீரில் ஒத்தடம் இடுதல்
• எளிய உடற்பயிற்சிகள் மூலம் மூட்டின் அசையும் திறன் மற்றும் வளைவுத்தன்மையை அதிகப்படுத்துதல்
இவை எதுவும் பலனளிக்காவிடில் என்ன செய்வது?
வாதவியல் சிறப்பு மருத்துவரை அணுகி அவரின் பரிந்துரைப்படி மருந்துகள் அல்லது சிகிச்சை முறைகள் பெற வேண்டும்.
• முதல் நிலை எளிய வலி நிவாரணிகள்
• அகச்சிவப்பு சிகிச்சை (Infra red treatment)
• நோய் திருத்தும் வாத எதிர்ப்பு மருந்துகள்
• நுண்துழை அறுவை சிகிச்சை (arthroscopy)
• மூட்டுப் புனர் அமைப்பு
• மூட்டுமாற்று அறுவை சிகிச்சை
சந்திப்பு : மாலதி சந்திரசேகர்