மகளிர்மணி

சின்னத்திரை மின்னல்கள்!: ரசிகைகள் இன்னும் கற்பகத்தை மறக்கவில்லை!

ஸ்ரீ

"அத்திப்பூக்கள்', "வம்சம்' போன்ற பல தொடர்களில் தனது வித்தியாசமான நடிப்பினால் ரசிகர்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் சந்தியா. கரோனா பொது முடக்கம் அறிவிக்கும் முன்பு இவர் "சந்திரலேகா' தொடரில் நடித்து கொண்டிருந்தார். இந்த பொதுமுடக்கத்தை இவர் எப்படி பயன்படுத்தினார் என்பதை அவரே கூறுகிறார்:

""இந்த பொதுமுடக்கக் காலத்தில் கூட சொந்த ஊருக்கு போகவில்லை. தமிழ்நாடு எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. தமிழ்நாட்டு மக்கள் ரொம்ப பாசக்காரர்கள். பெண்களுக்கும் இங்கே நிறைய மரியாதை கொடுக்கிறார்கள். இங்கு கடவுள் பக்தியும் அதிகமாக இருக்கிறது. இதுபோன்ற பக்தி நிறைந்திருக்கும் இடத்தில் ஒரு பயம், கட்டுப்பாடு இருக்கும். அதெல்லாம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அதனால் சென்னையிலேயே இருந்து விட்டோம். இனி என்ன வந்தாலும் சென்னையை விட்டு போகக் கூடாது என்று முடிவு செய்துவிட்டேன்.

"அத்திப்பூக்கள்', "வம்சம்', இப்போ "சந்திரலேகா' எனக்கு அமைந்த ஒவ்வொரு தொடரிலுமே வெவ்வேறான கதாபாத்திரங்கள் அமைந்தது எனக்கு கிடைத்த வரம். "அத்திப்பூக்கள்' 5 ஆண்டுகள் வெற்றிகரமாக போன ஒரு தொடர். இன்னும் நிறைய ரசிகைகள், அத்திப்பூக்கள் கற்பகத்தை மறக்கவில்லை. வெளியே செல்லும்போது, "நீங்க கற்பகம் தானே‘ என்று கேட்கிறார்கள்.

அதுபோன்று, "வம்சம்' தொடரில் மலைவாழ் பெண்ணாக நடித்திருப்பேன். இப்போ "சந்திரலேகா', இதில் மாடர்னாக, ஹோம்லியாக, போலீஸ், டாக்டர், ரிப்போர்டர், மாடல் என பல கெட்டப்களில் வரும் அளவுக்கு கதாபாத்திரமும், அழமான கதைக்கருவும் உள்ள கதை. எனக்கும் இதில் எனது பல முகங்கள் காட்டும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. "சைல்ட் அப்யூஸ்' பற்றி எல்லாம் இந்த கதையில் வரும், அந்த பெற்றோரின் நிலையை நினைக்கும்போது மனது அவ்வளவு வலிக்கும்.

பொதுவாக நான் தொடர்களில் நடிக்கும்போது கிளிசரின் போட்டு நடிப்பதில்லை. அந்த சீனை உள்வாங்கிட்டு ஒரு 5 நிமிடம் எடுத்துக்குவேன். கண்ணீர் தானாகவே வந்துவிடும். சிலர் இதை நம்ப மறுக்கலாம். சிலர் ஓவர் ஆக்ட்டிங் என்றும் சொல்லலாம். ஆனால், என்னைப் பொருத்தவரை அழுகிற சீன் என்றால் நிஜமாகவே அழுதிடனும், யாரையாச்சும் அறைகிற சீன்என்றால் நிஜமாகவே அறைஞ்சிடனும். அவ்ளோதான்.

மறக்க முடியாத ரசிகர்கள் நிறைய இருக்கிறார்கள். அவ்வப்போது அவர்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறேன். ஒருமுறை, ஷாப்பிங்கிற்கு ஒரு கடைக்கு சென்றிருந்தேன். நான் பொருள்களையெல்லாம் வாங்கும்வரை அந்த கடைக்கு சொந்தக்காரப் பெண்மணி என்னை உற்று உற்று பார்த்துக் கொண்டே இருந்தார். நானும் அவர், என்னை நடிகையென அடையாளம் கண்டுக்கொண்டார் போல. அதுதான் இப்படி பார்க்கிறார் என்று நினைத்தேன். நான் பொருள்களை எல்லாம் வாங்கிமுடித்துவிட்டு பில் போட போனால், "நீங்கள் கற்பகம் தானே, உங்களிடம் நான் எப்படி பணம் வாங்குவேன். பணம் வேண்டாம். நீங்கள் செல்லுங்கள்' என்று நான் எவ்வளவு சொல்லியும் பிடிவாதமாக பில்லுக்கான பணத்தை வாங்கவே மறுத்துவிட்டார்.

அதேபோன்று குடும்பத்துடன் ஒருமுறை மூணாருக்கு டூர் சென்றிருந்தோம். அங்கே ஹோம்மேட் சாக்லேட் வாங்கலாம் என்று சென்றிருந்த ஒரு கடையில் இருந்த பெண்மணி, என் கையைப் பிடித்துக் கொண்டு, "நீங்க எங்க வீட்டுக்கு கட்டாயம் வரணும்ன்னு பிடிவாதமாக நிக்குறாங்க, நீங்கள் எங்கள் வீட்டிலேயே இருங்க உங்களை நான் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் என்று ரொம்பவும் பிடிவாதமாக இருந்தாங்க. நான் சொன்னேன், "அம்மா பத்து நாளுக்கு மேல உங்களால என்னை வெச்சுக்க முடியாது, நான் தினமும் 3 வேளையும் பிரியாணிதான் சாப்பிடுவேன். உங்களால என்னை சமாளிக்க முடியாது பரவாயில்லையா'ன்னு சும்மா பயம் காட்டினேன். அந்தம்மா எதுக்கும் அசரவில்லை. "அதுக்கென்னம்மா நான் 3 வேளையும் பிரியாணி செய்து தர்றேன். நீங்க எங்க வீட்டுக்கு வாங்க, என் கணவர் உங்களைப் பார்த்தா ரொம்ப சந்தோஷப் படுவார்' என்று பிடிவாதமாக இருந்தாங்க. அவங்க பாசத்தை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டேன். இதுபோன்ற ரசிகைகளையெல்லாம் எப்படி மறக்கமுடியும்.

பொதுவாக நான் நன்றாக சாப்பிடுவேன். அதிலும் அசைவம் என்றால் ரொம்ப விரும்பி சாப்பிடுவேன். ஆனா, இந்த பொதுமுடக்கக் காலத்தில் வாயைக் கொஞ்சம் கட்டிப்போடணும், நொறுக்குத் தீனியெல்லாம் சாப்பிடக் கூடாது என்று தீர்மானமாக முடிவெடுத்தேன். இப்போது அசைவம் சாப்பிடுவதை முழுமையாக விட்டுவிட்டேன்.

வீட்டு வேலைகள் செய்வது, உடற்பயிற்சி செய்வது என தொடர்ந்தேன். அதன் விளைவு இப்போ ஓரளவுக்கு உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாகி இருக்கிறேன். இதுதவிர, வீட்டில் பறவைகள், பூனை, நாய் என நிறைய பெட்ஸ் இருக்கிறது. அவைகள்தான் எனக்கு பெரிய பொழுதுபோக்கு. நான் அசைவம் நிறுத்தியதற்கு அவைகளும் ஒரு காரணம். அசைவம் சாப்பிடுபவர்கள் உண்மையான பெட்ஸ் விரும்பியாக இருக்க முடியாது என்று மனசுக்குள்ள அடிக்கடி தோணிட்டே இருக்கும். அதுதான் விட்டுட்டேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

நீடாமங்கலம் மகாமாரியம்மன் கோயில் புஷ்ப பல்லக்கு விழா

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்: மீன்கள் விலை உயர வாய்ப்பு

மும்பை: நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு

SCROLL FOR NEXT