மகளிர்மணி

வாழ்க்கை ஒரு வரம்!

எஸ். சந்திர மௌலி

வழக்குரைஞர், நீதிபதி என்றமுகங்களைத் தாண்டிஎழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர்,சொற்பொழிவாளர், நாடகக் கலைஞர் ஆகியமுகங்களும் ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவனுக்கு உண்டு.

குடும்பத்திலும், உறவு வட்டாரத்திலும் வழக்குரைஞர்களும், எழுத்தாளர்களுமாக இயற்கையாக அமைந்தது ஒரு வரப்பிரசாதம். அநுத்தமா, குமுதினி போன்ற அன்றைய ஸ்டார் எழுத்தாளர்கள் தொடங்கி ம.பொ.சி. வரை ஏராளமான அந்தக் கால பத்திரிகை, இலக்கிய உலகின் பிரபலங்கள் இவர்களின் வீட்டுக்கு வந்து போவார்கள். ஒரு வகையில் இத்தகைய குடும்பச் சூழல் இவரது பன்முகப் பரிமாண பர்சனாலிடிக்கு அடித்தளம் என்று சொன்னால் மிகை இல்லை. சட்டத்துறையில் வழக்குரைஞராக, நீதிபதியாக முத்திரை பதித்தவர். அவருடன் ஒரு சந்திப்பு:

"உங்களுடைய குடும்பப் பின்னணி, இளமைக் காலம் பற்றி?'

எங்கள் வீடு மயிலாப்பூரில். பக்கத்தில் சாந்தோமில் இருக்கும் ரோசரி மெட்ரிக் பள்ளியில்தான் நான் பள்ளிப் படிப்பை முடித்தேன். அடுத்து, ஸ்டெல்லா மேரீசில் கல்லூரிப் படிப்பு. ஆங்கில இலக்கியம் படித்தேன். பின், திருமணம். வக்கீல், ஸ்ரீதேவனுடன் திருமணம் நடந்தபோது, பிற்காலத்தில் நானும் ஒரு வக்கீலாகவும், அதன் பிறகு, சென்னை உயர்நீதிமன்றத்திலேயே நீதிபதியாகவும் ஆகப்போகிறேன் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தேன். அவர்கள் இருவருக்கும் பத்து, எட்டு, வயதானபோது,

ஒரு நாள் என் கணவர், "குழந்தைகள்தான் வளர்ந்து விட்டார்களே! நீ சட்டக் கல்லூரியில் சேர்ந்து படியேன்' என்றார். எனக்கும் முயற்சி செய்து பார்க்கலாமே என்று தோன்றியது. சட்டக் கல்லூரியில் சேர்ந்தேன். கல்யாணமாகி, இரண்டு வளர்ந்த பிள்ளைகளுக்குத் தாயான நான், கர்ம சிரத்தையாக மறுபடியும் கல்லூரிக்குப் போய், வகுப்பில் அமர்ந்து பாடம் கேட்டேன். சட்டப் படிப்பை முடித்த கையோடு, என் கணவரிடமே ஜூனியராக சேர்ந்துவிட்டேன்.

உங்கள் முதல் வழக்கு என்ன?”

என்னைத் தேடி வந்த முதல் வழக்கு ஒரு விவாகரத்து வழக்கு என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். அந்தப் பெண் சொன்ன வார்த்தைகள் காரணமாக, இன்றளவும் அது மறக்கமுடியாத வழக்காக என்னுடைய நினைவில் நிற்கிறது. அந்தப் பெண்ணிடம் வழக்கு குறித்து ஒரு நாள் விவாதித்த சமயத்தில், விவாகரத்துக்குப் பின் குழந்தைகள் உங்கள் பொறுப்பில்தான் இருப்பார்கள். அவர்களின் எதிர்கால வாழ்க்கையின் பொருட்டாவது நீங்கள் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறவேண்டும் என்று நான் அந்தப் பெண்மணியிடம் சொன்னேன். சில விநாடிகள் மெளனமாக இருந்த அந்தப் பெண் அடுத்து, அழுத்தம், திருத்தமாகச் சொன்ன வார்த்தைகள், " அந்த மனுஷனே வேணாம்னு முடிவுக்கு வந்து விவாகரத்து வாங்கின பிறகு, அவருடைய பணம் எனக்கு எதுக்கு மேடம்?'

அதே போல, இன்னொரு விவாகரத்து வழக்கும் என்னால் மறக்க முடியாது. பொதுவாகவே, பெண்மையும், தாய்மை உணர்வும் பிரிக்க முடியாதவை என்ற ஒரு நம்பிக்கை நம் எல்லோர் மனதிலும் பதிந்துள்ளது. அந்த குறிப்பிட்ட விவாகரத்து வழக்கில், ஒரு தாயால் எந்த அளவுக்குத் தன் பெண் குழந்தையிடமிருந்து விலகிச் செல்ல முடியும் என்பதும், ஒரு அப்பாவால் எந்த அளவுக்குத் தன் மகள் மீது பாசமாக இருக்க முடியும் என்பதையும் நான் புரிந்து கொண்டேன். அந்த காலகட்டத்தில், இப்படியான ஒரு சூழ்நிலையை என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.

"சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய அனுபவம் குறித்து?'

2000 -ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதி ஆகப் பொறுப்பேற்றுக் கொண்டேன். அடுத்த பத்தாண்டுகள் என் வாழ்க்கையில் முக்கியமான ஒரு கட்டம் என்றால் அது மிகையில்லை. சென்னை உயர்நீதி மன்ற வரலாற்றில் குறிப்பிடத்தக்க சில முக்கிய தீர்ப்புக்களை வழங்கிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

"ஓய்வு பெற்ற பிறகு, எழுதும் ஆர்வம் வந்தது எப்படி?'

பல வருடங்களுக்கு முன்பு, பெண்களுக்கான ஆங்கிலப் பத்திரிகையான ஃபெமீனா ஒரு சிறுகதை போட்டியை நடத்தியது. அதற்கு நானும் ஒரு சிறுகதை எழுதி அனுப்பி வைத்தேன். குழந்தைப் பருவத்திலேயே திருமணமாகி, கணவனையும் இழந்த ஒரு சிறுமியின் வாழ்க்கையை மையப்படுத்தி எழுதப்பட்டது அந்த சிறுகதை. அதற்குப் போட்டியில் மூன்றாம் பரிசு கிடைத்தது. நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, மறுபடியும் எழுத்துத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. மறுபடியும் ஆங்கிலத்தில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன்.

அடுத்து, நான் தமிழில் படித்த சில சிறந்த சிறு கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் என்ன என்று தோன்றியது. அந்த வகையில், முதலில் நான் முயற்சி செய்தது ஆர். சூடாமணியின் சிறுகதைகள். அந்த சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ் தாண்டிய வாசகர்கள் மத்தியில் மிகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழில் உள்ள ஒரு சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது, கதையில் இடம் பெற்றிருக்கும் தமிழ் வார்த்தைகளை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை; தமிழில் எந்த உணர்வினைச் சொல்ல அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டனவோ அதே உணர்வுகளை நான் ஆங்கிலத்துக்குக் கொண்டு செல்ல விரும்புகிறேன். மனசுக்குப் பிடித்த ஒரு கதையை நான் மொழி பெயர்க்கும்போது, என்னையும் அறியாமல் அதிலே நான் முழுமையாக மூழ்கிப் போகிறேன். ஒரு தடவை, ஆர். சூடாமணி எழுதிய ஒரு கதையின் காட்சியை மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன். அந்தக் கதை என்னை மிகவும் உணர்ச்சிவசப்படச் செய்துவிட்டது. ரொம்பவே எமோஷனலாகிபோன நான், என்னையும் அறியாமல் கண்ணீர் சிந்தினேன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ரவிகுமார் எழுதிய சில சிறுகதைகளையும் நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறேன். சமூக சிந்தனையுடன், தினமணியில் எழுதிய எனது கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, புத்தகமாகவும் வெளியாகியுள்ளது. தற்போது எழுத்தாளர் தோப்பில் முகமது மீரானின் சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறேன்.

"சங்கீத மும்மூர்த்திகள் தொடர்பான உங்கள் ஆங்கில மொழிபெயர்ப்பு மேடை நாடகமாகவும் அரங்கேறிய அனுபவம் குறித்து?'

கல்கி சீதா ரவி சங்கீத மும்மூர்த்திகளின் வாழ்க்கை அடிப்படையிலான சிறுகதைகளை எழுதி இருப்பதை அறிந்தபோது, ஆர்வம் உந்த, அவற்றை விரும்பிக் கேட்டு வாங்கிப் படித்து ரசித்தேன். அடுத்து அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தேன். அந்த சிறுகதைகள், இசைக் கலைஞர்களே பிரதான பாத்திரங்களில் நடிக்க மேடை நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டன. அந்த முயற்சிக்கு கர்நாடக இசை ரசிகர்கள் மத்தியில் அபாரமான வரவேற்பு கிடைத்தது.

மொத்தத்தில் பணி ஓய்வு வாழ்க்கையில் மனசுக்குப் பிடித்ததை செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். அப்படித்தானே?

வாழ்க்கையில் எனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய எனக்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. அந்த வகையில் எனக்கு வாழ்க்கை ஒரு பெரிய வரம். இன்றளவும் என்னை வாழ்க்கையில் இயக்கிக் கொண்டிருக்கும் விஷயங்களில் முக்கியமானது நகைச்சுவை உணர்வு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க சென்று மயக்கமடைந்த 428 பேருக்கு மருத்துவ சிகிச்சை

சங்கா் ஐ.ஏ.எஸ். அகாதெமி மாணவா்கள் 273 போ் வெற்றி

உ.பி.: பாஜக வேட்பாளா் மரணம்

காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகம்: அமித் ஷா பிரசாரம்

அமலாக்கத்துறை, சிபிஐ காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்டவை: மத்திய சட்ட அமைச்சா் விளக்கம்

SCROLL FOR NEXT