மகளிர்மணி

பாட்டுடன் பேச்சு!

கோதை ஜோதிலட்சுமி

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள். தன்னுடைய பதின்மூன்று வயதில் திருக்குறள் முழுமையையும் நேராகவும் தலைகீழாகவும் சொல்லும் ஆற்றல் பெற்றவர் சிந்துஜா. குறள் எண் சொன்னால் இந்த அதிகாரத்தின் இத்தனையாவது குறள் என்று சொல்லுவார். திருமண வீடுகள் தொடங்கி பெரிய சபைகள் வரை ஹரிகதையில் தனக்கென தனி முத்திரை படைத்து வருபவர் இவர். ஹரிகதைக்கான வகுப்புகளும் எடுத்து வருகிறார். இந்த ஆண்டு கலை கலாசார பிரிவில் சேவைக்காக, தேசிய ஊடகவியலாளர் சங்கம் அவருக்கு "வீரமங்கை வேலுநாச்சியார் விருது' வழங்கி கெளரவித்திருக்கிறது. சிந்துஜா ஹரிகதைக்கு எப்படி தயாராகிறார் என்பதை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:

ஹரிகதை என்பது புராதனமான கலை வடிவம். புராணங்கள் மட்டுமல்ல, வாழ்வியல் சம்பந்தப்பட்டதும் கூட. புராணம் என்பதே நம் முன்னோரின் வாழ்வியலை சொல்வது தானே. இசையுடன் இயலைக் குழைத்துக் கொடுப்பதால் தயாரிப்பு அதிகம் தேவைப்படும். ஒரு சரித்திரத்தை முழுவதுமாக உள்வாங்கி ஏற்கெனவே அதெற்கென பிரபலமாக உள்ள பாடல்களையெல்லாம் திரட்டி, இன்றைய தலைமுறைக்கேற்ப சில பாடல்களையும் சேர்த்துக் கொண்டு மெட்டமைத்து, கதையுடன் மணம் குன்றாமல் கொடுக்கும் இறைப்பணி. இந்தப் பணியில் ஆசையாய் நானே கரைந்து போய் ரசித்து ரசித்துச் செய்வேன். நாம் சொல்லப்போகும் கதையின் முதல் ரசிகை நாமாக இருந்தால்தான் சுவைபட சொல்வதும் சாத்தியமாகும்.

அதைத் தவிர, ஹரிகதைக்குத் தயாரிப்பு என்பது பெரிய அளவில் தேவைப்படுகிறது. கற்றல் அவசியம். தினமுமே புதிதாக கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். ஹரிகதை ஏற்கெனவே செய்தவர்களின் சரித்திரங்கள் கேட்டு உள் வாங்குவதும் அவசியமானது. ஒரு பக்கம் அவை காதில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 மணி நேரமாவது ஒரு தலைப்பில் ஹரிகதை எழுத்தில் தயாராவதற்கு தேவைப்படும். தற்கால சூழலுக்கு ஏற்றாற்போல கதை சொல்லும் விதத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

தலைப்புக்கு இன்றைய செய்திகளைச் சேர்த்து மெருகூட்டுவதும் அத்தியாவசியம். புராணங்கள், சரித்திரங்கள், மகான்களின் தவ வாழ்வு என்று ஹரி கதை அமைவதோடு, சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றையும் தேசியமும் தெய்வீகமும் கலந்து இன்றைக்கு வழங்குகிறோம்.

ரசித்து ரசித்து செய்த கதை மேடையில் அரங்கேறும்போது கூடுதல் பூரிப்பு ஏற்பட்டுவிடும். சில நேரங்களில் கதை சொல்லிக்கொண்டிருக்கும் போதே புதிய தகவல்கள் நம்மையும் அறியாமல் தெய்வ வாக்காக வந்து விடும். இறைவன் கொடுத்த கலையை அவனுக்கே அர்ப்பணம் செய்வது அலாதியான இன்பம் தானே.

ஹரிகதைக்கும் ஆன்மிக சொற்பொழிவுக்கும் என்ன வேறுபாடு?

ஆன்மிகச் சொற்பொழிவு என்பது பேச்சின் வழியாக ஆன்மிகக் கதைகளை, இதிகாசங்களை, புராணக் கதைகளை, நெறிகளைச் சொல்லுதல். இதற்கு கதை சொல்லும் முறையில் கவனம் இருந்தால் போதும். ஹரிகதை என்பது ஒரு வகையான இசைச் சொற்பொழிவாற்றுதல். ஒரு வகையானது என்பது ஏன் என்றால், இந்தக் கலையில், நிறைய நுணுக்கங்கள் உண்டு. பஞ்சபதி என்பது ஹரிகதையின் முதன்மைக் கூறு. திமிகிட... திமிகிட.. என்று அநேகமாய்க் கேட்டிருப்போம்.

ஒரு கீர்த்தனம்(பாடல்) பாடி, அதிலிருந்து சரித்திரத்தைத் துவக்குவோம். சாகி, திண்டி, ஓவி என்று மராட்டிய காலத்தில் தோற்றுவிக்கப் பட்ட பாட முறை இதில் புழக்கத்தில் தற்போது உள்ளது.

ஏற்கெனவே இருக்கும் பாடல்களுடன், புனைந்து பாடும் பாடல்களும் இதில் உண்டு. பேச்சுடன், பாட்டு.. பாட்டுடன் பேச்சு என்று தொய்வில்லாமல் தொடர வேண்டும்.

இசையும் கதை சொல்வதும் பாடுவதும் ஒரே லயத்தில் இணைந்து வர வேண்டும். இதற்கு மனம் மற்றும் உடற்பயிற்சிகளும் கட்டுப்பாடும் அத்தியாவசியம். கேட்போருக்கும், சோர்வின்றி விறுவிறுப்பாக இருக்கும் படி கதை சொல்லலும் இசையும் கட்டமைக்கப் பட வேண்டும்.

கதாகாலட்சேபம் மூலம் மக்களுக்கு எதையெல்லாம் சொல்ல முடியும்?

தலை சிறந்த தொடர்பு முறை ஹரிகதை. மழை நீர்ச்சேகரிப்பு, மின்சாரம் வீண் செய்யாமை என்பது வரை எதையும் சொல்ல முடியும். ஆன்மிகம் முதல் அன்றாட வாழ்வின் நிகழ்ச்சிகள் வரை எதையும் கண் முன்னே காட்ட வல்லது. "எங்கள் தங்கம்' என்ற பழைய திரைப்படத்தில் சந்திராயணம் என்று சந்திர மண்டலத்திற்குப் போனதையே ஹரிகதை பாணியில் சொல்லியிருப்பார்கள். அது தான் அக்கலையின் அழகு. என்னளவில், ஆன்மிகம் மட்டுமின்றி, சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாழ்க்கை வரலாற்றையும் ஹரிகதையாகச் செய்து வருகிறேன். மகான்கள் வாழ்க்கை வரலாற்றை எப்படி பாட்டுடன் ஹரிகதை செய்வோமோ, அது போல வ. உ.சிதம்பரனார் வாழ்க்கை, பசும்பொன் தேவரின் வாழ்க்கை என்று அவரவர் வாழ்க்கையை அதிலிருக்கும் முக்கிய சம்பவங்களைப் படித்து, அதையே ஹரிகதையாக வடிவமைத்து அரங்கேற்றுகிறேன். எனக்கு இப்படியான புதிய முயற்சிகளில் தனித்த சுவையும் மகிழ்ச்சியும் உண்டு.

இக்கலைக்கான அடிப்படையாக நீங்கள் கற்றுக் கொண்டவை என்னென்ன...

ஹரிகதைக்கு கர்நாடக இசை மிக அவசியமானது. முறையான இசைப்பயிற்சி, அத்துடன் கூடவே பேச்சுக் கலையில் தேர்ச்சி. இவை தான் ஹரிகதையின் சாரமான தூண்கள் ரயில் தண்டவாளம் போல, இரண்டும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. இசைப் பயிற்சியில் அசுர சாதகம் இருந்தால் மட்டுமே பேசும்போது, சற்றும் தயங்காமல், கணத்தில் பாட்டைத் தொடங்கிப் பாட முடியும். யோசித்து ஆரம்பிக்க முடியாது அல்லவா! அதே போல், மடை திறந்த வெள்ளமாய் பேச்சுத் திறன் இருந்தால் தான், பாட்டின் மத்தியில் பேச முடியும். அதனால், ஹரிகதைப் பயிற்சிக்குத் தயாராக விழைபவர்கள், இவ்விரண்டையும் இரண்டு கண்களாகப் பார்க்க வேண்டும். அன்றாடம் அதற்காக பல மணி நேரம் பயிற்சி மேற்கொள்வதே முதன்மையான பணி.

கடல்கடந்தும் ஹரிகதை கற்றுக் கொடுக்கிறீர்கள். அந்த அனுபவம் பற்றி..

இன்றைய நவீன காலத்திலும், பெற்றோர்கள், குழந்தைகளுக்குத் தங்கள் மணம் மாறாத கலாசாரத்தைக் கற்பிக்கவே ஆசை கொள்கிறார்கள் என்பது நாம் அனைவரும் பெருமைப் பட வேண்டிய விஷயம். என்னுடைய யூடியூப், "நண்ய்க்ட்ன்த்ட்ஹ ஏஹழ்ண்ந்ஹற்ட்ஹ' வில், அன்றாடம் ஹரிகதை வெவ்வேறு தலைப்புகளில் 5 நிமிட விடியோவாக பதிவிடுகிறேன். எனது சமூக வலைத்தள பக்கங்களிலும், முக்கியமான நாட்கள் அன்று, அந்தந்த மகான்கள், தியாகிகள் வாழ்க்கை வரலாற்றை ஹரிகதையாய்ச் செய்துவருகிறேன்.

கரோனா நோய் தொற்று காலத்தில், எனக்குள் உதித்த ஆசை, "நம்ம பூமி நம்ம சாமி" எனும் அழகிய இணைய வழி இலவச நிகழ்ச்சியாக உருப்பெற்றது. கடல் கடந்தும் பல குழந்தைகள் 40 நிமிட வகுப்பில், கதை, எளிய பாட்டு, கேள்வி பதில் என்று சக்கை போடு போட்டார்கள். 500 குழந்தைகள் பங்கு பெற்று மிக அழகாகத் தங்கள் திறனை வெளிப்படுத்தினார்கள். இதைத் தொடர்ந்து, பல வெளிநாடுகளில் இருந்தும் ஹரிகதை கற்றுக் கொள்ள இணைய வழியில் குழந்தைகள் வருகிறார்கள். தமிழில் அழகான உச்சரிப்புடன், பாட்டுடன், அந்தக் குழந்தைகள் சொல்லும்போது, என்னையும் அறியாமல் கண்கள் பனிக்கும். ஐந்து வயது குழந்தை முதல் எழுபது வயது முதியவர்கள் வரை வயது ஆனவர்கள் கூட தற்போது என்னிடம் ஹரிகதை கற்றுக் கொள்கிறார்கள். கற்க வயது தடை இல்லையே.

இந்தத் துறைக்கு நீங்கள் வந்ததற்கான காரணம், எந்த வயதிலிருந்து அதற்கான பயிற்சியில் இருக்கிறீர்கள்...

நான் ஏழாம் வகுப்பு படித்த போது திருவள்ளுவரின் 133 அடி சிலை குமரியில் திறக்கப்பட்டது. அன்றைய முதல்வர் கலைஞர், திருக்குறள் முழுமையையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும் என்று அறிவித்தார். என் அம்மா, தவம் போல என்னைப் படிக்க வைத்தார். நிறைய மாணவர்கள் வந்ததால் போட்டியை கடுமையாக்கியது உலகத் திருக்குறள் மையம். நேராக, தலைகீழாக, எண் சொல்லி குறள், குறள் சொல்லி பொருள், முயல் வரும் குறள், சிங்கம் வரும் குறள் என்று திக்குமுக்காடச் செய்யும் பயிற்சிகள். போட்டியில், பல சுற்றுகளில் வென்று இறையருளால், "திருக்குறள் மாமணி" "என்ற விருது கிடைத்தது.

வள்ளுவம் என்னை ஆட்கொண்டது. அதுவே ஹரிகதைக்கும் கொண்டுவந்தது. என் தாயார் உஷா ஏகாம்பரம். 13 வயதான எனக்கு புதுப்புது தலைப்புகளில் ஹரிகதை தயார் செய்து என்னையும் தயார் செய்தார். சுமார் 200 தலைப்புகளில் நான்கு மணி நேரம் வரையில் இன்று என்னால் பேச முடியும் என்பதற்கு அந்த இளம் வயதுப் பயிற்சியே காரணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரோட்டா தொண்டையில் சிக்கியதில் தொழிலாளி பலி

கீழப்பாவூரில் கே.ஆா்.பி. நவீன அரிசி ஆலை திறப்பு

சமூக ஆா்வலரை மிரட்டியதாக ஊராட்சித் தலைவா் மீது வழக்கு

ஆலங்குளத்தில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சரிடம் திமுக சாா்பில் கோரிக்கை

செங்கோட்டையிலிருந்து கூடுதல் ரயில்கள்: பாஜக கோரிக்கை

SCROLL FOR NEXT