சிறுவர்மணி

ஓலைப் பெட்டி!

என்.எஸ்.வி.குருமூர்த்தி

அரங்கம்
 காட்சி - 1

 இடம் - அரசவை, மாந்தர் - மன்னர் மாறவேந்தர், அமைச்சர் சிகாமணி மற்றும் புலவர்கள்,
 
 தலைமைப் புலவர் கவிக்கோன் - மன்னா .. நேற்று நம் அவைக்கு வருகை தந்த இமயமலை கேதார நாட்டைச் சேர்ந்த அறிஞரும் யாத்ரீகருமான சிவபாத சித்தர் சில அரிய மூலிகைகளையும் தைலங்களையும் நம் அரண்மனை வைத்தியரிடம் தந்து சென்றுள்ளார்.
 மன்னர் மாற வேந்தர் - எப்போதோவது வரும் அவர் தரும் மருந்துகள் பல நோய்களுக்கு தீர்வு அல்லவா. சிவப் பழமாகக் காட்சி தரும் அவரைப் பார்த்தாலே சிவ நினைவு மேலிடுகிறது. திருக் கயிலாய மலையின் தோற்றத்தை அவர் விளக்கிய போது அந்த பர்வதத்தை வலம் வந்த அனுபவம் பெற்றோம்.
 கவிக் கோன் - மன்னா.. அவர் போகு முன் ஒரு புதிரைப் போட்டு விட்டுப் போய்விட்டார்.. நாங்கள் விடை அறிய முடியாமல் தவிக்கிறோம்.
 மாற வேந்தர் - அப்படியா.. என்ன அது..எனக்குத் தெரியாதே?
 கவிக்கோன் - சந்தோஷமாக இருக்கும் ஒருவனிடம் எதைச் சொன்னால் துயரமுறுவான். அதே சொற்களை துக்கத்தில் இருப்பவனிடம் சொன்னால் அவன்ஆறுதலையும் மகிழ்வையும் அடைவான்.., சந்தோஷத்தையும் துயரத்தையும் மாற்ற வல்ல அந்தச் சொற்கள் எவை. இரண்டே சொற்கள்..?
 (மன்னரும் அமைச்சரும் திகைப்புற.....)
 
 மன்னர் - அடடா.. உயரிய தத்துவார்த்த வினா.. இதற்கு விடை என்னவாக இருக்கும்..?
 அமைச்சர் - மன்னா.. ஒரு வாரமாக புலவர்கள் மத்தியில் இது தான் விவாதப் பொருள்
 மன்னர் - பலே.. சிந்தனைக்கு சவால்.. அமைச்சரே.. நீங்கள் சகலமும் கற்றுக் கரைத்துக் குடித்தவராச்சே.. உங்களுக்குப் புலப்படவில்லையா?
 அமைச்சர் சிகாமணி - என் சிந்தைக்குப் பிடிபடவில்லை வேந்தே.
 மன்னர் - இதற்கான சரியான விடையைச் சொல்வோருக்கு பெரும் பரிசை அறிவிக்கலாம்.
 கவிக்கோன் - மன்னா விடையை ஒரு ஓலை நறுக்கில் எழுதி அதை இந்தப் பனை ஓலைப் பெட்டியில் வைத்துள்ளார் சிவபாதர்.. முடியா
 விடில் திறந்து பார்த்துக் கொள்ளச் சொன்னார்..
 மன்னர் - ஓ.. விடை கைவசம் உள்ளதா.. பெட்டியைத் திறவுங்களேன்!
 அமைச்சர் - மன்னா. இது சிந்தனைக்கு விருந்தான ஒரு விஷயம்,, எல்லோருக்கும் ஒரு சந்தர்ப்பம் அளிக்கலாமே.
 மன்னர் - நல்ல விஷயம்.. அவையோரே.. நாட்டு மக்களே.. சரியான விடை சொல்லுங்கள்.. அதைப் பெட்டிக்குள் இருக்கும் ஓலையுடன் ஒப்பிட்டுச் சரியாக இருந்தால் அந்த பெட்டி முழுவதும் நவ ரத்தின ங்கள் பரிசு..
 (அவை கலைகிறது.)
 
 காட்சி 2
 இடம் - அரண்மனை அந்தப் புரம், மாந்தர்- மன்னர் மாற வேந்தர் மகாராணி சிலம்பரசி, இளவரசன் குழந்தை வண்ண நிலவன்
 
 மன்னர் - ராணி. இன்று அவையில் புலவர்களின் விவாதப் பொருளைக் கேட்டாயா?
 மகாராணி - கொஞ்சம் சிக்கலான விஷயம் தான்.. ஆனால் விடை மிக எளிதாகத் தானிருக்கும் என என் உள் மனம் சொல்கிறது..
 மன்னர் - கவலைப் படாதே..சந்தோஷம் விரைவில்.. இந்த விடை எப்படி?
 மகாராணி - இது வருத்தமுற்றவனுக்கு ஆறுதல் தரலாம்.. மகிழ்ச்சியுடன் இருப்பவனிடம் சொன்னால் பொருத்தமாயிராதே!
 மன்னர் - ஆம் ராணி.. சந்தோஷமான மன நிலையில் இருக்கும் ஒருவனிடம் என்ன சொன்னால் துயருறுவான்..?
 மகாராணி - துன்பம் இன்பம் மாறி மாறி வரும் போகும்.. இது எப்படி..
 மன்னர் - இரண்டே வார்த்தைகளில் இருக்க வேண்டும்..
 மகாராணி- ம்ஹூம்.. முடியலை.. தூங்கலாம்.
 
 காட்சி 3
 இடம் - தலைமைப் புலவர் கவிக்கோன் இல்லம், மாந்தர் - கவிக்கோன் அவர் மனைவி குழலி
 
 குழலி - என்னங்க .. சாப்பிடாம என்ன சிந்தனை.. இலையில் நான் வச்ச கீரை அடை அப்படியே இருக்கு.. சூடு ஆறிட்டா நல்லா இருக்காது அவை விவாத ஞாபகமா?
 கவிக்கோன் - குழலி - துன்பம் கண்டு துவளாதே.. இன்பம் கண்டு மகிழாதே. இது எப்படி இருக்கு.?
 குழலி - நல்லாத்தான் இருக்கு.. கருத்து.. ஆனால் நீட்டமா இருக்கு. இரண்டே சொற்கள் தான் ஞாபகம் இருக்கட்டும்.
 கவிக்கோன் - ஏதாவது ஒன்றிரண்டை எடுத்தா பொருள் வரலியே.. சிவபாதர் சிக்கலாராக இருக்காரே..
 குழலி - ராத்திரி பூரா சிந்திச்சுக்கிட்டே இருங்க.. கனவில் விடை தோன்றலாம்..
 கவிக்கோன் - ஆமாமா.. தலை மாட்டில் ஒரு ஓலை நறுக்கையும் எழுத்தாணியும் அகல் அருகில் வச்சுக்கிட்டே தூங்கறேன். டக்கெனத் தோணும். எழுந்தால் மறந்து போயிடும்.
 குழலி - ஏற்கனவே முடி தலையில் கொட்டி புளி போட்டு விளக்கின பித்தளைக் குடம் மாதிரி பள பளன்னு இருக்கு.. இனி சிந்திச்சா உள்ளே உள்ளது உருகி காது மூக்கு வழியா வரப்போவுது.
 கவிக்கோன் - குழலி .. சிந்தனை சிதறுது..கேலியாகப் பேசாமலிரு.
 (குழலி ஒரு முறை முறைத்து விட்டு போர்வையை இழுத்து முகத்தை மூடிக்கொள்கிறாள்.)
 
 காட்சி 4
 இடம் - விகடகவி வெங்கண்ணா இல்லம், மாந்தர் -– வெங்கண்ணா அவன் மனைவி ஞானமணி அவள் தம்பி சின்னமணி
 
 (காலை நேரம்....)
 
 ஞானமணி -– என்னங்க.. என் தம்பி சின்ன மணி ராத்திரி ..ஊரில் இருந்து வந்திருக்கானே.. வந்தவனை வா நல்லா இருக்கியான்னு ஒரு வார்த்தை கேட்கலாமில்லே?
 வெங்கண்ணா - நல்லா இருக்கியாங்கிறது இரு வார்த்தைகள்டி.. இப்ப தானே அவன் வந்து ஆறு மாசம் தங்கிட்டு போன வாரம் ஊருக்குப் போனான்..மறுபடி வந்திட்டான்.. சரி எங்கே போனாலும் இப்படி இரண்டு வார்த்தை பிரச்சினையாவே இருக்கே!....அங்கே சபையில் இரண்டு வார்த்தையில் விடை சொல்லச் சொல்றாங்க!....
 ஞானமணி - – சீக்கிரமா குளிச்சிட்டு வாங்க.. அரண்மனைக்குப் போக வேணாமா.. தம்பி பசியோட இருக்கான்.. பணியாரமும் புட்டும் செஞ்சிருக்கேன் சாப்பிடுங்க,
 (ஞானமணி குளித்து வந்ததும் இருவருக்கும் உணவு பரிமாறுகிறாள்.......இலையில் சூடாக தோசை, பணியாரம் வைக்க...)
 
 சின்ன மணி - அக்கா மிளகாப் பொடி காரமா இருக்கு.. நெய் விடக்கா
 ஞானமணி - இதோ நேத்து புதுசா காய்ச்சின பசு நெய் இருக்கு.. உருக்கி ஊத்தறேன்.
 (நெய் இலையில் வழிந்தோட)
 
 வெங்கண்ணா - அடியே.. நெய் ஓடுது பாரு.. பார்த்து ஊத்து.. இது நீடிக்காதுடி.. சிக்கனமா இரு
 ஞானமணி - என் தம்பி இளைச்சுட்டாங்க..ஊரில் சாப்பாடு சரியில்லாம
 வெங்கண்ணா - இது நீடிக்காதுடி! சொல்லிட்டேன்..
 
 வெங்கண்ணா : (டக்கென எழுந்து துள்ளி) ஆஹா விடை கிடைச்சிட்டு..
 (எழுந்து அவசர அவசரமாக உடை மாற்றிக்கொண்டு விரைகிறான் அரண்மனையை நோக்கி)
 
 சின்னமணி - என்னக்கா .. மச்சான் சரியா சாப்பிடாம ஓடறார்.. சரி அவர் இலையில் இருக்கிற புட்டை நான் சாப்பிடவா ?
 ஞான மணி - சாப்பிடுடா தம்பி... உன் மச்சான் இலை தானே !

 காட்சி 5
 இடம்--- அரசவை, மாந்தர் - மன்னர், அமைச்சர், புலவர்கள், வெங்கண்ணா
 
 மன்னர் - என்ன கவிக்கோன் அவர்களே.. விடை தெரிந்த தா.
 கவிக்கோன் - கிட்ட த்தட்ட வந்து விட்டோம். ஆனால் இரு சொற்களில் அடங்கவில்லை.
 வெங்கண்ணா (எழுந்து) - மன்னா விடையை நான் சொல்லலாமா..?
 கவிக்கோன் - என்னப்பா வெங்கண்ணா.. நாங்கள் முக்கிய விஷயத்தில் மண்டையை உடைச்சுக்கிட்டு இருக்கோம்.. இடையில் நீ விகடம் பேசாதே.
 மன்னர் - இருங்கள் தலைமைப் புலவரே.. வெங்கண்ணாவும் விஷயாதி தான்.. சொல்லப்பா!
 வெங்கண்ணா - ( எழுந்து கம்பீரமாக ) அவையோரே.. ஒருவன் சந்தோஷத்தில் மனம் துள்ளிக் குதிக்கும் போதும், துயரத்தில் புண் பட்ட மனத்தோடு இருக்கும் போதும் "இது நீடிக்காது" என்ற இரு சொற்கள் அவன் காதில் விழுந்தால் இன்பத்தில் திளைப்பவன் துயரம் அடைவான்..! துன்பத்தில் இருப்பவன் மனம் மகிழ்வான்..! இது நீடிக்காது என்பதே அந்த இரு சொல் விடை..!
 மன்னர் - எங்கே ஓலைப் பெட்டியைத் திறவுங்கள் அமைச்சரே
 (ஓலைப்பெட்டியில் உள்ள ஓலையில் "இது நீடிக்காது' என எழுதி இருந்ததை உரக்கப் படிக்க....)--அவையில் பலத்த கரகோஷம்! --)
 மன்னர் - பலே வெங்கண்ணா.. பிடி பரிசு.. யாரங்கே இந்த ஓலைப் பெட்டியில் நவரத்தினங்களை நிரப்புங்கள்..
 (எல்லோரும் பாராட்டுக் கோஷத்தை எழுந்து முழங்க மன்னரிடம் பரிசைப் பெறுகிறான் வெங்கண்ணா.)
 -(திரை)-
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: துரை வைகோ

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

இன்றைய ராசி பலன்கள்!

இறுதி வாக்குப் பதிவு நிலவரம் எப்போது கிடைக்கும்? தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

காங்கிரஸ் உருவாக்கிய பிரச்னைகளுக்கு பாஜக ஆட்சியில் தீா்வு: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT