சிறுவர்மணி

அரங்கம்: பரீட்சை!

என்.எஸ்.வி.குருமூர்த்தி

காட்சி 1
காலம் - மாலை ஆறு மணி
இடம் - வங்கிக்கிளை
மாந்தர் - வங்கி காசாளர் ஆனந்தன், கிளை மேலாளர் கோதண்டபாணி, அட்டெண்டர் பாலு மற்றும் ஊழியர்கள்.

மேலாளர் கோதண்டபாணி அட்டெண்டர் பாலுவிடம் - பாலு கேஷியரிடம் போய் கணக்கு முடிச்சாச் சா என்று கேள்.. ரொக்கத்தை பெட்டகத்தில் வைக்கணும்.. நான் மேலதிகாரியைப் பார்க்கப் போகணும்.
(பாலு கேஷியரைப் போய்ப் பார்த்துவிட்டு வருகிறார்)
பாலு (மேலாளரிடம்) - மேனேஜர் சார் ஒரு சிக்கல்.., கேஷியர் அல்லாடுகிறார்
கோதண்டபாணி - என்னப்பா என்ன சொல்றே?
பாலு - பணம் குறையுதாம் கணக்கில்.. மொத்தம் நாற்பத்தி அஞ்சாயிரம் கணக்கில் உதைக்குதாம்.. கேஷியர் தடுமாறுகிறார்..மற்ற ஊழியர்கள் இன்றைய வரவு வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய விவரங்களை சரிபார்த்துக்கிட்டு இருக்காங்க.. காசோலைகள், செலுத்து செலான் களில் எழுதப்பட்ட விவரங்களை வச்சு...!
கோதண்டபாணி - அட டே என்ன இது சோதனை?...
ஊழியர் ஒருவர் - (சத்தமாக) கேஷியர் சார்,.... சிக்கல் இதோ, இந்த செக்கில் இருக்கு!.... ஐந்தாயிரம் செக் ஒருத்தர் பணமாக்க தந்ததுக்கு நீங்க ஐநூறு ரூபாய் கட்டு தந்திருக்கிறதா பின்புறம் குறிச்சிருக்கீங்க.... அந்த நபருக்க்கு ஐந்தாயிரத்துக்குப் பதில் அம்பதாயிரம் தந்துட்டீங்க!.....
கோதண்டபாணி - அடடே!.... அதிகப் படியான தொகையை வாங்கிப் போனவர் யாருமில்லை,.... நம்ம மளிகைக் கடை கோபாலன் தான்.... நல்ல மனுஷனாச்சே!..... போய் பாலு அவரிடம் விவரம் சொல்லி அதிகத் தொகையை உடனே திரும்ப வாங்கி வா.
பாலு - இதோ போறேன் சார்....
(டிவிஎஸ் ஃபிஃப்டி வாகனத்தில் விரைகிறான்)


காட்சி 2
மாந்தர் இடம் - கோபாலன் இல்லம்
மாந்தர் - மளிகைக் கடைக்காரர் கோபாலன், அவர் மனைவி ருக்மணி, பாங்க் ஊழியர் பாலு.
(கோபாலன் மாலை சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார் - காலிங் பெல் ஒலிக்கிறது)

கோபாலன் - ருக்கு... போய் யாருன்னு பாரு. நான் கை கழுவிட்டு வந்திடறேன்..கடையில் ஆள் கூட்டம் வந்திடும் நான் சீக்கிரம் போகணும்.
ருக்மணி - (போய்க்கொண்டே) - யாராயிருந்தாலும் ஹாலில் உட்காரச் சொல்றேன்.. பொறுமையா வாங்க.
(கோபாலன் சிறிது நேரத்தில் கை கழுவி விட்டு துண்டால் கையைத் துடைத்தபடி வருகிறார்.)

கோபாலன் - அடடே.. பாங்க் தம்பி பாலுவா..! வாங்க,....என்ன விஷயம்?... டிபன் சாப்பிடறீங்களா?
பாலு - வேண்டாம் சார். வந்து நீங்க இன்னிக்கு பணம் எடுத்தீங்களே எவ்வளவுன்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க...
கோபாலன் - ஐந்தாயிரத்துக்கு செக் போட்டேன்.. மெதுவா கடை முடிஞ்சு மூணு மணிக்கு சாப்பிடப் போறப்போ வாங்கிக்கிறதா சொல்லி இருந்தேன் கேஷியர் ஒரு கவரில் வச்சிருந்தார் பிரிக்காமல் அப்படியே பையில் வச்சிருக்கேன் இதோ பாருங்க
(கவரை எடுத்துப் பிரிக்க ஒரு ஐநூறு ரூபாய் கட்டு வெளிப்பட)

கோபாலன் - அடடே !...என்ன இது?.... ஐம்பது ரூபா கட்டு கேட்டதுக்கு கேஷியர் ஐநூறு கட்டு வச்சிட்டாரே,.... கணக்கில் குறையுமே!....
பாலு - ஆமாம் சார் கணக்கில் நாற்பத்தி ஐந்தாயிரம் குறையுது!....
கோபாலன் -( பத்து 500 தாள்களை மட்டும் வைத்துக் கொண்டு) இந்தாப்பா பாலு,... கேஷியரிடம் தந்துடுங்க....
பாலு - ரொம்ப நன்றி சார்!..., வேறு யாரிடமாவது கொடுத்திருந்தால் திரும்பக் கிடைப்பது சந்தேகம் தான்...
ருக்மணி - இந்தாங்க தம்பி காபி சாப்பிடுங்க....
பாலு - (போனில் கேஷியரிடம்) - கேஷியர் சார்!.... இங்கே சார் கிட்டே தான் நீங்க தந்த கூடுதல் தொகை இருக்கு வாங்கிட்டேன்!.... இதோ வர்றேன்!.....
(பாலு காபி சாப்பிட்டுவிட்டு கிளம்புகிறார்)

ருக்மணி - என்னங்க நல்ல வேளை. கேஷியருக்கு நஷ்டம் ஏற்படவில்லை.. நீங்க கடைக்குப் போனதும் கோயிலுக்குப் போறேன். சில்லறையா பூ வாங்க ஒரு ஐம்பது ரூபா தாங்க.
(கோபாலன் 50 ரூ தாள் ஒன்று தந்து விட்டு கடைக்குக் கிளம்புகிறார்)

காட்சி 3
காலம் - இரவு ஏழு மணி
இடம் - கோயில் முன் உள்ள பூக்கடை
மாந்தர் - கோபாலன் மனைவி ருக்குமணி பூ விற்கும் பெண் குமுதா

குமுதா - அம்மா பூ வாங்கிப் போங்க....
ருக்குமணி - கதம்பம் ஒரு முழம் தாம்மா.... எவ்வளவு?
குமுதா - இருபது ரூபாம்மா....
(ருக்குமணி ஐம்பது ரூபாய் நோட்டை நீட்ட)

குமுதா - அம்மா சில்லறை இல்லியே. இன்னிக்கு வியாபாரத்துக்கு லேட்டா வந்திட்டேன். வியாபாரம் சரியில்லே..சாமி கும்பிட்டுவிட்டு வாங்க போகும் போது மிச்சம் தருகிறேன்.
ருக்குமணி - சரிம்மா, போகும் போது வாங்கிக்கறேன்.
(ருக்குமணி சாமி கும்பிட்டுவிட்டு பிரகாரம் சுற்றி விட்டு வர எட்டு மணி ஆகிறது....குமுதா ஓடி வந்து மிச்சம் தர அதை அப்படியே பர்ஸில் வாங்கி வைத்துக் கொள்கிறாள்)


காட்சி 4
இடம் - கோபாலன் இல்லம்
மாந்தர் - கோபாலன், ருக்குமணி

(கோபாலன் கடை யைப் பூட்டிவிட்டு வர இரவு பத்து ஆகிவிடுகிறது....வாசலில் செம்பு நீரில் கால் கழுவி விட்டு வருகிறார்.)

கோபாலன் - என்ன ருக்கு, கோயிலுக்கு போனியா?..... கூட்டமா?...
ருக்குமணி - இன்னிக்கு பிரதோஷம்!.... நல்ல கூட்டங்க..... நந்திக்கு இரண்டு முழம் பூ வாங்கிப் போட்டேன்.... பூக்காரப் பெண் மீதம் அப்புறம் தருகிறேன் என்றாள். வரும்போது வாங்கி வந்தேன்
இந்தாங்க மீதிப் பணம். கோபாலன் - எவ்வளவு மிச்சம் தரணும் அந்தப் பெண்?
ருக்குமணி - இருபது ரூபாக்கு வாங்கினேன்.... ஐம்பது தந்தேன்.... மீதம் முப்பது தரணும்!...
கோபாலன் - இந்த மடிச்ச நோட்டுகளைப் பிரிச்சா... எண்பது இருக்குதே!.....
ருக்குமணி - அடடே!..... அந்தப் பெண் நான் நூறு ரூபா தந்ததாக எண்ணி மிச்சம் எண்பது தந்திட்டாளே....இப்ப என்ன பண்றது?.... வியாபாரமே ஆகலேன்னு கவலையா இருந்தாளே...
கோபாலன் - அவள் வீடு என் கடைக்குப் பின் உள்ள சந்தில் தான் இருக்கு..... வா, டூவீலரில் போவோம். பணத்தை நீ கொடுத்து விடு!....
ருக்குமணி - ஏங்க காலையில் போனால் என்ன ?
கோபாலன் - அவள் அதிகாலை டவுனுக்கு மொத்த பூ விற்கும் மார்கெட்டுக்குப் போயிடுவாள். இப்பவே போகலாம் வா. அவளுக்கு எண்பது ரூபாய் பெரிய காசு.
(இருவரும் வீட்டைப் பூட்டி விட்டு கிளம்புகிறார்கள்....கோபாலன் வண்டியை ஸ்டார்ட் செய்ய பின்னால் அமருகிறாள் ருக்குமணி)


காட்சி 5
இடம் - பூக்காரி குமுதா குடிசை
மாந்தர் - கோபாலன் ருக்க்குமணி குமுதா குழந்தைகள்

ருக்குமணி - (குடிசை வாசலில் நின்றபடி) - பூக்காரம்மா, பூக்காரம்மா!
குமுதா - (மூங்கில் தட்டிக் கதவைத் தள்ளியபடி) யாரு, இந்நேரத்தில்?....அடடே! வாங்கம்மா, என்னம்மா இந்த நேரத்தில் ?
ருக்குமணி - பூவுக்கு அம்பது ரூபாகொடுத்தேன். நீ மிச்சம் முப்பது தர்றதுக்குப் பதில் எண்பது தந்திட்டே!... நான் கவனிக்காம பர்ஸில் வச்சுக்கிட்டேன்.... இந்தாம்மா, நீ அதிகமா தந்த அம்பது ரூபா!....
குமுதா - இதுக்காகவா இந் நேரத்தில் இருட்டில் வந்தீங்க...
ருக்குமணி - அதோ ஐயா ரோடில் டூ வீலரில் இருக்கார், வரட்டுமா ?
குமுதா - ரொம்ப நன்றிம்மா. நூறு தந்ததா நினைச்சுக்கிட்டேன்.
ருக்குமணி - கவனமா இரும்மா..... நாங்க வரோம்.....
குமுதா - சரிம்மா,....
ருக்குமணி - (வண்டியில் சென்றுகொண்டிருககும்போது)என்னங்க இது இன்னிக்கு ஒரே சோதனையா இருக்கு.
கோபாலன் - (வண்டியை ஓட்டியபடி) - ஆமாம்
ருக்குமணி... இது மனிதர்களுக்கு அவ்வப்போது நடக்கும் பரிட்சை. நேர்மை மனதில் வேரூன்றி இருக்கிறதா.. அடுத்தவர் பொருளுக்கு நாம் ஆசைப் படாமல் இருக்கோமா என காலம் அவ்வப்போது சோதிக்கும். அதில் நாம் எப்போதும் பாஸ் ஆக வேண்டும். இன்னிக்கு நான் கற்ற பாடம். எப்போதும் சின்ன தொகையோ பெரிய தொகையோ கொடுக்கல் வாங்கலில் முதலில் எண்ணி சரி பார்த்து பெறவும் கொடுக்கவும் வேண்டும்.
ருக்குமணி - இன்னிக்கு நாம இருவருமே பரிட்சையில் பாஸ் ஆயிட்டோம்!

திரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நேரடி நெல் விதைக்கும் விவசாயிகளுக்கு யோசனை

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தெப்போற்சவம்

புதுச்சேரி வேதபுரீஸ்வரா் கோயில் தேரோட்டம்

முத்து மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

முருகன் கோயில்களில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT