சிறுவர்மணி

 சத்தியவாணி

க.சங்கர்

அரங்கம்

 காட்சி : 1
 இடம் : வீடு / சத்தியவாணியின் அறை
 நேரம் : அதிகாலை 6.15
 மாந்தர் : சத்தியவாணி, அம்மா
 (சத்தியவாணி அரைத் தூக்கத்தில் இருக்கிறாள்.)
 
 அம்மா : வாணி.. நேரமாச்சு.. ஆறே கால்.. 
 சத்தியவாணி : ( கலக்கமாக ) ஆகட்டும்-மா.. ஸ்கூல் நாள்லயே ஏழு மணிக்குத்தான் எந்திரிப்பேன்.. லீவு நாள்ல எதுக்கு.. ம்ம்ம்ம்ம்ம்..
 அம்மா : சரி, அப்ப நீ தூங்கு.. நேத்து ஏதோ அப்படித் தெரியாம சொல்லிட்டே போலிருக்கு..
 சத்தியவாணி : ( சட்டென விழித்து ) இல்லியே.. எனக்குத் தூக்கம் எல்லாம் வரல.. எப்பவோ ரெடி..
 அம்மா : அப்போ ஆரம்பிக்கிறியா..? அப்பாவும் தம்பிகளும் முழிச்சுட்டாங்க..
 சத்தியவாணி : ( படுக்கையிலிருந்து இறங்கி ) இதோ.. பத்தே நிமிஷம் .. வந்துர்றேன்..  
 (அம்மா அமைதியாகப் பார்க்கிறார்.)

காட்சி : 2
 இடம் : வீடு / உணவு மேஜை
 நேரம் : காலை 8.35
 மாந்தர் : சத்தியவாணி, நிகில், சஞ்சய், அப்பா, அம்மா
 
 சத்தியவாணி : ( பாத்திரத்தை வைத்து) எனக்குத் தெரிஞ்சமாதிரி பண்ணிருக்கேன்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடுங்க.. 
 நிகில் : அக்கா.. தக்காளி இல்லியா..? எனக்கு தேங்காச் சட்டினி பிடிக்காது..
 சத்தியவாணி : தெரியுன்டா.. ஒருநாள் மட்டும் சாப்டு.. ஒண்ணும் ஆகாது..
 நிகில் : அதெல்லாம் முடியாது.. நீங்க மட்டும் உங்களுக்குப் புடிச்சத சாப்பிடுவீங்க.. நான் மட்டும் பார்த்திட்டிருக்கணுமா..?
 சஞ்சய் : ஆமா.. சும்மா பார்த்திட்டிரு.. நீ சாப்பிடலனு யார் அழுதா..?
 அப்பா : சஞ்சய் , சும்மா இரு.. வாணி ஒரு பத்து நிமிஷம்தான-ம்மா.. பண்ணிக்குடுத்திரு.. இல்லனா சாயங்காலம் வரைக்கும் இவன் ஆட்டம் காட்டிட்டே இருப்பான்..
 சத்தியவாணி : அப்பா, தக்காளி இல்ல தீர்ந்திடுச்சு.. அப்றமா கடைக்குப் போறப்போ வாங்கிட்டு வர்றேன்..
 நிகில் : ( மேஜயைத் தட்டி ) எனக்குப் பசிக்குது.. ரொம்பப் பசிக்குது.. இப்பவே வேணும்.. இப்பவே ..
 அப்பா : கடை இருக்கும்ல.. அந்த மாஸ்க் எடுத்துப் போட்டுட்டுப் போ, வாணி ...
 (சத்தியவாணி அம்மாவைப் பார்க்கிறாள்.)

காட்சி : 3
 இடம் : வீடு / ஹால் 1
 நேரம் : முற்பகல் 11.45
 மாந்தர் : சத்தியவாணி, சஞ்சய், அம்மா
 சத்தியவாணி :  பாத்திரங்களை எல்லாம் கழுவியாச்சு.. எப்படி இத்தனை சேர்ந்துச்சுன்னே தெர்ல.. ம்மா.. நான் போய் குளிச்சிட்டு வர்றேன்.. 
 அம்மா : ம்ம்ம்..
 (சஞ்சய் ஓடி வருகிறான்.)
 
 சஞ்சய் : ம்மா.. லட்சுமி அத்தை தண்ணி வருதுனு சொல்லச் சொன்னாங்க..
 (சஞ்சய் திரும்பி வேகமாக ஓடுகிறான்.)
 
 அம்மா : வாணி.. நீ போய்க் குளி.. இத நான் பார்த்துக்கறேன்.. 
 சத்தியவாணி : இல்லம்மா.. இன்னிக்கு நானே போய் தண்ணி பிடிச்சுட்டுவரேன்.. நீங்க வீட்டப் பார்த்துக்கங்க..
 அம்மா : ( தயக்கமாக) சரி.. ஆனா..
 சத்தியவாணி : நான் போறேன்.. எத்தனை குடம் பிடிக்கணும்..?
 அம்மா : ( தயக்கமாக ) பதினஞ்சு பதினாறு இருக்கும்..
 சத்தியவாணி :  ஓ.. பரவாயில்லம்மா.. வேலைய முடிச்சிட்டு வந்து குளிச்சுக்கறேன்..
 (சத்தியவாணி அமைதியாக நடக்கிறாள்.) 
 
 காட்சி : 4
 இடம் : வீடு / சமையலறை
 நேரம் : பிற்பகல் 1.50
 மாந்தர் : சத்தியவாணி, அப்பா
 (சத்தியவாணி நிற்கிறாள்.)
 அப்பா : ( அங்கே வந்து ) என்ன, வாணி.. ஏதோ பலத்த யோசனை போல.. 
 சத்தியவாணி : இப்போத்தான் காலை சமையல் முடிஞ்ச மாதிரி இருக்கு.. அதுக்குள்ள மதியம் ஆயிருச்சுப்பா..
 அப்பா : அது அப்டித்தான்.. சரி, உள்ள போண்டா மாவு இருக்கானு பாரும்மா..
 சத்தியவாணி : இருக்குப்பா.. இப்போத்தான் ஏதோ எடுக்கும்போது பார்த்தேன்.. 
 அப்பா : நல்லாதாப் போச்சு.. அதைக் கொஞ்சம் சுட்ரு.. பசங்க கேட்கறாங்க.. 
 (சத்தியவாணியின் முகம் சுருங்குகிறது.)
 சத்தியவாணி : சரிப்பா..
 அப்பா : ம்ம்ம்.. அப்படியே எலுமிச்சம் பழத்தையும் பிழிஞ்சு ஜுஸ் போட்ரு.. நிறைய உப்புப் போட்டுக் குடிக்கணும் வயிறு ஒருமாதிரி இருக்கு..
 சத்தியவாணி : சரிப்பா..

 காட்சி : 5
 இடம் : வீடு / வெவ்வேறு இடங்கள்
 நேரம் : வெவ்வேறு நேரங்கள்
 மாந்தர் : சத்தியவாணி, அம்மா, நிகில், சஞ்சய், அப்பா
 3 மணி :  சத்தியவாணி துணிகளைத் துவைக்கிறாள்.அம்மா அவளைப் பார்க்கிறார்.
 4 மணி : சத்தியவாணி தோட்டதிற்கு நீர் பாய்ச்சுகிறாள் . நிகிலும் சஞ்சயும் விளையாடுகிறார்கள்.
 6 மணி : சத்தியவாணி சிலிண்டரை உருட்டிச் செல்கிறாள். அப்பா தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார்.

 காட்சி : 6
 இடம் : வீடு / சத்தியவாணியின் அறை
 நேரம் : இரவு 10. 35
 மாந்தர் : சத்தியவாணி, அம்மா
 
 (வெளியில் மழை பெய்துகொண்டிருக்கிறது.)
 
 அம்மா : வாணி.. ஏன் இன்னும் லைட் எரியுது..? தூக்கம் வரலையா..?
 சத்தியவாணி அமைதியாக சாளரத்திற்கு வெளியே பார்த்தபடி நிற்கிறாள்.
 அம்மா : வாணி..
 சத்தியவாணி : (திரும்பாமல்) ம்மா.. உண்மையிலேயே நேத்து ஏதோ கோபத்துல ஒருநாள் முழுக்க வீட்டு வேலை செய்யறேன்னு சொல்லிட்டேன்.. இது ரொம்பக் கஷ்ட்டம்மா.. சரியான நேரத்துக்கு இவ்ளோ செய்யணுமா..!
 அம்மா : எனக்கும் உன்னை இவ்வளவு வேலை செய்ய விட்டுட்டோமேனு உறுத்தலாத்தான் இருக்கு.. நான் அப்டி பண்ணிருக்கக் கூடாது..
 சத்தியவாணி : இவ்ளோநாள் எல்லாரும் வீட்டுல இருந்துட்டு உங்கள மட்டுமே வேலை வாங்கியிருக்கோம்.. உங்களப் பத்தி நாங்க சரியாப் புரிஞ்சுக்காம சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்பட்டிருக்கோம்.. மன்னிச்சிருங்கம்மா.. 
 அம்மா : ஸ்ஸ்ஸ்.. பரவாயில்ல வாணி.. போய்த் தூங்கு.. கலைப்புக் கொறையும்..
 (சத்தியவாணி அம்மாவைப் பார்க்கிறாள்.)

காட்சி : 7
 இடம் : வீடு / ஹால் 2
 நேரம் : காலை 9.45
 மாந்தர் : சத்தியவாணி, நிகில், சஞ்சய், அப்பா, அம்மா
 
 (சமையலறையிலிருந்து பாத்திரம் விழும் சத்தம் கேட்கிறது.)
 
 அம்மா : ( சட்டென) வாணி.. என்ன சத்தம்..?
 சத்தியவாணி : (குரல்) ஒன்னுமில்லம்மா.. இந்தத் தக்காளிச் சட்டினிக்காரன் தெரியாம தட்டிவிட்டுட்டான்..
 நிகில் : ( குரல்) ம்மா.. சஞ்சய்தான் குங்ஃபூ மாதிரி என்னமோ செஞ்சு எல்லாத்தையும் போட்டு நொறுக்கறான்.. நானில்ல..
 சஞ்சய் : ( குரல்) ம்மா.. பொய்.. அண்ணன்தான்.. 
 அம்மா : ( சிரிப்புடன் ) நான் வரட்டுமா..? நீங்க போங்க நான் பாத்திரங்களை எல்லாம் கழுவிக்கறேன்..
 சத்தியவாணி : ( குரல்) வேண்டாம்... நீங்க டி.வி. பாருங்க.. இத நாங்க கவனிச்சிக்கறோம்... 
 நிகில் : ( குரல்) டேய்.. அது பாத்திரம் தேய்க்கற சோப்பே இல்லடா..
 (அம்மா சிரிக்கிறார்.)
 அப்பா : ( உள்ளே வந்து) ம்ம்ம்.. இப்போ தோட்டத்தைப் போய்ப் பாரு.. பக்காவா ரெடி பண்ணிட்டேன்..
 அம்மா : (வியப்பாக) நீங்க எதுக்கு...
 அப்பா : ( இடைமறித்து ) இதொன்னும் பெரிய விஷயம் கிடையாது.. நேத்து வாணி சொன்னதுக்கு அப்புறம்தான் புரிஞ்சுது.. தடை உத்தரவு போட்டதிலிருந்து எல்லோரும் வீட்டுலதான் இருக்கோம்.. உன்னை எவ்ளோ கஷ்ட்டப்படுத்தறோம்னு புரிஞ்சுக்கிட்டோம்..
 சத்தியவாணி : ( வெளியே வந்து) (இடைமறித்து) தடை உத்தரவு முடிஞ்சாலும் ...
 நிகில் : ( வெளியே வந்து) நாங்க இனி உங்களுக்கு ஹெல்ப் பண்றதா முடிவு பண்ணிட்டோம்..
 சஞ்சய் : ( வெளியே வந்து) ஆமா, பெரிய ஹெல்ப்.. போய் இவன் பாத்திரம் தேய்ச்சு வெச்சிருக்கற அழகப் பாருங்க.. பேசறான்..
 நிகில் : டேய்..
 (சஞ்சய் ஓட , நிகில் துரத்துகிறான்.
 அனைவரும் சிரிக்கிறார்கள்.)
 (திரை)
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT