சிறுவர்மணி

கருவூலம்: உத்தமர் காந்தி!

ஆ. கோ​லப்​பன்

காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்படுவது இந்தியர்கள் மட்டுமில்லை! உலகின் பல நாடுகள் அவரது வாழ்க்கையை வியந்து மதித்துப் போற்றுகின்றன! அவருக்கு நினைவிடங்களை நிறுவியிருக்கின்றன. சிலைகள் வைத்திருக்கின்றன! அவரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றன.

அவற்றில் சில இடங்களைப் பார்ப்போமா?.....

இங்கிலாந்து

இங்கிலாந்தின் தலைநகரமான லண்டனில் "டாவிஸ் டாக்' என்னும் இடத்தில் நம் மகாத்மாவின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சிலையை வடிவமைத்தவர் "ஃபிபெடா பிரில்லன்ட்' என்னும் சிற்பி ஆவார். இந்தச் சிலை 1968 - இல் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் ஹெரால்டு வில்சனால் திறந்து வைக்கப்பட்டது. அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் மகாத்மா காந்திக்கு ஏராளமான ஆதரவாளர்கள் இருந்தனர். அவர்களது உணர்வை மதிக்கும் வகையிலும், இந்தியர்களின் உணர்வை மதிக்கும் வகையிலும் இந்தச் சிலை திறக்கப்பட்டது! அமர்ந்த நிலையில் காணப்படும் வெண்கலச் சிலை இது!

அது மட்டுமல்ல! இங்கிலாந்தின் தலைநகரமான லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பார்லிமெண்ட் சதுக்கத்திலும் நம் தேசபிதாவின் சிலையை நிறுவி நெகிழ்ந்திருக்கிறார்கள் இங்கிலாந்து வாசிகள்! இந்தச் சிலையை உருவாக்க மக்களே நிதி சேகரித்தார்கள்! இச்சிலையை உருவாக்க சுமார் 56 லட்சம் ரூபாய் ஆனது. இந்தச் சிலையை உருவாக்கியவர் "பிலிப் ஜாக்சன்' என்ற சிற்பியாவார். 2015 - ஆம் ஆண்டு இந்தச் சிலை நமது மறைந்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லியால் திறக்கப்பட்டது! இந்நிகழ்ச்சியில் காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அமெரிக்கா

கலிபோர்னியாவில் லெய்த் ஷ்ரோனில் அமைந்துள்ள காந்தி அமைதி நினைவகம் உலகின் மிகப் பழமையான காந்தி நினைவகங்களில் ஒன்று. புராதன சீன பாணியிலான நினைவிடம் இது. 1950 - இல் கட்டப்பட்டது. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், நம் காந்தியின் சாம்பலின் ஒரு பகுதி இங்கே பாதுகாக்கப்பட்டு வருகிறது! அந்நிய தேசத்தவரை மகாத்மா எந்த அளவு கவர்ந்திருக்கிறார்! அஹிம்சையால்! அன்பால்!

மேலும், அமெரிக்காவில் உள்ள கொலம்பஸ் கலைக் கல்லூரியில் நிறுவப்பட்ட காந்தியின் சிலை ஒன்று உள்ளது. இச்சிலை ராஜதோரணையில் இருக்கிறது.

இன்னும் ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் மகாத்மா காந்திக்கு 40 - க்கும் மேற்பட்ட சிலைகள் நிறுவப்பட்டுள்ளன!

ஆனால் தன் வாழ்நாளில் மகாத்மா காந்தி அமெரிக்காவிற்கு ஒரு முறை கூடச் சென்றதில்லை! அவரது அன்பின் அலை எவ்வளவு சக்தி மிகுந்தது!

தென்னாப்பிரிக்கா

ஒரு முறை காந்தி புகைவண்டியில் பயணம் மேற்கொண்ட பொழுது நிறவெறி மிக்க வெள்ளையன் ஒருவனால் அவமானப்படுத்தப்பட்டதுடன் அவரை வண்டியிலிருந்தும் தள்ளிவிட்டான்! கண்கலங்கச் செய்யும் இந்நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில் தென்னாப்பிரிக்காவின் "பீட்டர் மாரிட்ஸ் பெர்க் சர்ச்' தெருவில் ஒரு காந்தி சிலை நிறுவப்பட்டது!

ஆஸ்திரே−யா

ஆஸ்திரேலியாவிலுள்ள "அகுணா பன்டா தெரு' வில் உள்ள கிளிப்பூங்காவில் 2002 - இல் 1.5 மீட்டர் உயரமுடைய காந்தியின் வெண்கலச் சிலை நிறுவப்பட்டது.
பிரிஸ்பென்னின் ஸ்ட்ரீட் பார்லாண்ட்ஸில் 2014 - ஆம் ஆண்டு ஒரு காந்தி சிலை நிறுவப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இதைத் திறந்து வைத்தார். இந்தச் சிலை 2.5. மீ உயரமுள்ளதாகும்.

உகாண்டா

1984 - ஆண்டு. காந்திஜியின் "அஸ்தி' ஜிம்கா என்னும் பகுதியில் ஓடும் "நைல்' நதியில் கரைக்கப்பட்டது. இந்த இடத்தின் அருகே காந்தியின் நினைவகம் அமைக்கப்பட்டிருக்கிறது!

ஆஸ்திரியா

பிரபல ஆஸ்திரிய ஓவியர் "வெர்னர் ஹோர்' என்பவர் வரைந்த காந்தியின் தைல வண்ண ஓவியம் வியன்னாவின் "கார்டன் ஆஃப் பீஸ்' என்னும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவின் பரிசுப்பொருளாக பல நாடுகளில் காந்தி சிலைகள் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் துறையினா் கட்டணமின்றி அரசு பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை

உயா்நீதிமன்ற நீதிபதி எனக் கூறி எஸ்.பி. அலுவலகத்தில் ஏமாற்ற முயன்றவா் கைது

அதி வேகமாக சென்ற காா் மோதி இளைஞா் சாவு: கண்ணாடியை உடைத்து நொறுக்கிய பொதுமக்கள்

பொன்னமராவதி அருகே சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் சாவு

பொன்னமராவதி அருகே தொடா்மழையினால் 17 ஆடுகள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT