சகல கலா ஆசார்யர்!
இந்திய பாணி ஓவியம் என்றால், எஸ்.ராஜம் அவர்களின் பெயர்தான் முதலில் வந்து நிற்கும். அவர் எழும்பூர் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸில் சேர்ந்த போது, அப்போதைய தலைவர் தேவி பிரசாத் ராய் சௌத்ரியிடம் ""எதற்காக மேற்கத்திய ஓவியப் பாணியை நாம் பின்பற்ற வேண்டும் நான் இந்திய பாணி ஓவியங்கள்தான் வரைவேன்'' என்று துணிந்து சொன்னவர் எஸ். ராஜம் என்றார் நடிகரும் ஓவியருமான சிவகுமார். (""என்னை முதலில் ஓவியன் என்பேன். பிறகுதான் நடிகன்'' என்றார் சிவகுமார், அழுத்தம் திருத்தமாக.) அந்தக் காலத்திலேயே ராஜமும் அவர் சகோதரியும் ராமரும் சீதையுமாக நடித்த படத்தை நினைவுகூர்ந்து பேசினார் சிவகுமார்.
இந்திய பாணி ஓவியம் என்றால், எஸ்.ராஜம் அவர்களின் பெயர்தான் முதலில் வந்து நிற்கும். அவர் எழும்பூர் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸில் சேர்ந்த போது, அப்போதைய தலைவர் தேவி பிரசாத் ராய் சௌத்ரியிடம் ""எதற்காக மேற்கத்திய ஓவியப் பாணியை நாம் பின்பற்ற வேண்டும் நான் இந்திய பாணி ஓவியங்கள்தான் வரைவேன்'' என்று துணிந்து சொன்னவர் எஸ். ராஜம் என்றார் நடிகரும் ஓவியருமான சிவகுமார். (""என்னை முதலில் ஓவியன் என்பேன். பிறகுதான் நடிகன்'' என்றார் சிவகுமார், அழுத்தம் திருத்தமாக.) அந்தக் காலத்திலேயே ராஜமும் அவர் சகோதரியும் ராமரும் சீதையுமாக நடித்த படத்தை நினைவுகூர்ந்து பேசினார் சிவகுமார்.
நிகழ்ச்சி எஸ்.பி. காந்தனும், எழுத்தாளர் லலிதா ராமும் இணைந்து உருவாக்கிய எஸ்.ராஜம் பற்றிய "சகல கலா ஆசார்யர்' என்ற டிவிடி வெளியீட்டு விழா. பிற்பகல் இரண்டு மணிக்கு விழா நடத்தினால் யாராவது வருவார்களா என்று நினைத்தவர்கள், அன்று தத்வா லோகா அரங்கம் முழுதும் நிரம்பியிருந்ததைப் பார்த்திருக்க வேண்டும். அத்தனை பேரும் ராஜத்தின்
ரசிகர்கள்!
ஓவியம் மட்டுமே அவருக்குக் கைவந்த கலை அல்ல. இசையிலும் அவர் வல்லுநராக இருந்தார். கோடீசுவரய்யர் கீர்த்தனைகளைப் பிரபலப்படுத்தியவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு.
அவரைத் தேடி ஒருவர் ஒரு பாடலைக் கற்க வந்துகொண்டிருந்தாராம். அவர் வசித்த நடுத் தெருவில் இருந்த வீட்டிலிருந்து அவர் கிளம்பி விட்டார். அவரைத் தேடி வந்தவருக்கோ, அவரை இப்போது விட்டுவிட்டால், மறுபடி வரவேண்டுமே என்ற கவலை. ஒரு கீர்த்தனையில் தமக்கு இருந்த சந்தேகத்தை நடு வீதியில் நின்று கொண்டு கேட்டாராம். ராஜம் உடனே பக்கத்தில் இருந்த ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து, அங்கேயே பாடிக்காட்டி, அவர் ஐயத்தைப் போக்கினாராம்!
எளிமையின் உருவமாக அவர் இருந்தார் என்றார் கிரேசி மோகன். ஒரு லுங்கியும் ஒரு மேல் துண்டும் அவருக்குப் போதும். வீட்டில் ஒரு டெலிபோன் கூடக் கிடையாது என்றார். யார் வந்து என்ன விளக்கம் கேட்டாலும் அதற்கு உடனே தெளிவாகச் சொல்லிக் கொடுப்பார் என்று இசையுலகத்தின் இளைய தலைமுறையினர், குறிப்பாக அவர் மாணவ-மாணவிகள் சொல்வதுண்டு.
எஸ். ராஜம் வரைந்த கர்நாடக இசை மூவரான தியாகராஜர்-முத்துசாமி தீட்சிதர்-சியாமா சாஸ்திரி ஓவியங்கள், பல சபாக்களிலும், வீடுகளிலும் அலங்கரிக்கின்றன. நவக்கிரகங்களாகட்டும், நாயன்மார்கள் கதைகளாகட்டும், ராஜம் வரைந்தால் அவற்றின் அழகே தனியாகத் தெரிந்தது. ஒரு முறை ஒரு பெண்மணி அவருடைய ஓவியங்களை அப்படியே டிரேஸ் செய்து, வர்ணம் தீட்டி, ஓர் ஓவியக் காட்சி நடத்தினார். ராஜத்தின் சகோதரர் வீணை பாலசந்தர் இதைக் கேள்விப்பட்டு மிகவும் கோபப்பட்டார். ராஜத்திடம் போய், "அந்தப் பெண் இப்படி அநியாயம் பண்ணியிருக்கிறாள். நீ ஏன் சும்மா இருக்கிறாய்?' என்று கேட்டார். ராஜம் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லையாம். ""போகட்டும், விடு...'' என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாராம்.
லலிதா ராம் தொழிலால் பொறியாளர். ஆனால் இசை ஆர்வம் மிக்க இளைஞர். இவர் எழுதிய இசை இளவரசர் ஜி.என்.பி என்ற நூலும், மிருதங்க மேதை பழநி சுப்பிரமணிய பிள்ளை வாழ்க்கை வரலாறும் சுவாரசியமானவை. ராஜத்தைச் சந்தித்தது முதல் தம் காமிராவில் பதிவு செய்ததை, டாகுமென்டரி துறையில் இன்றைக்குப் புகழோடு இயங்கும் எஸ்.பி. காந்தனிடம் கொடுத்து, அவருடன் இணைந்து இந்த டிவிடியைத் தயாரிக்க உதவியிருக்கிறார். (அடுத்த டாகுமென்டரி பழநி சுப்பிரமணிய பிள்ளையைப் பற்றித்தான் என்றார் காந்தன்.)
ராஜத்தின் பரம ரசிகரான மணியம்செல்வன், ஒரு முறை காஞ்சி பெரியவரைச் சித்திரமாக வரைய, அதே ஓவியத்தில் ராஜமும் மேல் பகுதியில் சித்திரம் தீட்டியதைத் தன் வாழ்க்கையில் பெரும் பேறாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
மொத்தம் முப்பது மணி நேரம் குறும்படத்துக்கான செய்திகளை "ஷூட்' பண்ணிவிட்டு, அதை இரண்டு மணி நேர டிவிடியில் அடக்குவது என்பது யானையைப் பிடித்துப் பானைக்குள் அடைப்பது போன்றதுதான். ராஜத்தின் ஓவியங்களிலும், அவருடைய தனித்துவமான இசையிலும் மனம் பறிகொடுத்த ரசிகர்களுக்கு இந்த டிவிடியைவிடச் சிறந்த பரிசு இருக்க முடியாது. படத்துக்குப் படம், பாட்டுக்குப் பாட்டு என்று டூ-இன்-ஒன் பரிசாக இதைக் கருத வேண்டும்.
"ஸ்வாதி சாப்ட் சொலூஷன்ஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த சுதாகருக்கு, இதெல்லாம் வணிக ரீதியாக வெற்றி தருமா என்ற கவலையே இல்லை. ஒரு மகத்தான கலைஞனின் இரண்டு பக்கங்களையும் உலகெங்கும் இருக்கும் அவருடைய ரசிகர்களுக்குக் கொண்டு சேர்ப்பது மட்டுமே அவருடைய குறிக்கோள் என்றார் காந்தன்.
லலிதா ராம், எஸ்.பி. காந்தன் போலவே நமக்குத் தேவை நிறைய சுதாகர்கள்!