ஆசிரியரே வாசிக்கும் நாவல்!
"எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனமு' என்று ஆரம்பிக்கிற
"எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனமு' என்று ஆரம்பிக்கிற "அரங்கம்' நாவலை, 92 ஆம் ஆண்டு ஸýஜாதா விஜயராகவன் தொடராக "சாவி' இதழில் எழுதினார். கர்நாடக சங்கீதப் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல், அப்போதே வாசகர்களிடமிருந்து பலத்த வரவேற்பைப் பெற்றது. தொடர்கதையாக வெளியான மறு வருடமே, நூல் வடிவிலும் நாவல் வெளியாயிற்று. வெளியிட்டவர் முன்னாள் அமைச்சர் சி. சுப்பிரமணியம். முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டவர்கள் செம்மங்குடி சீனிவாசய்யர், சுப்புடு மற்றும் சாவி. (... "எனக்கு இது ஒரு வரப்பிரசாதம். பல புதிய விஷயங்கள் புலனாகின்றன' என்றார் சுப்புடு.) அன்று நூல் வெளியீட்டு விழா நடந்ததும் நாரதகான சபாவில்தான்.
சென்ற வாரம், அதே "அரங்கம்' நாவல், நாரதகான சபாவில், ஆடியோ சிடியாக வெளியிடப்பட்டது. நாரத கான சபா செயலர் கிருஷ்ணசாமி சிடியை வெளியிட, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி பெற்றுக்கொண்டார்.
""கட்டுக்கோப்பான கதை. சுவாரசியமாக எழுதப்பட்ட நாவல். இப்போதெல்லாம் காரில் போட்டுக் கேட்டுக் கொண்டே அமெரிக்காவில் பல மணி நேரம் பயணம் செய்வது சாதாரணமாகிவிட்டது. "அரங்கம்' சிடியை அப்படிக் கேட்டு ரசிக்கலாம். அங்கே தமிழ் படிக்கத் தெரியாதவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தமிழ் கேட்கத் தெரிந்தவர்கள்'' என்றார் கிருஷ்ணசாமி.
""பல வருடங்களுக்கு முன் ந. சிதம்பர சுப்பிரமணியன் எழுதிய "இதய நாதம்' நாவலும் கர்நாடக சங்கீதப் பின்னணி கொண்டதுதான்'' என்று குறிப்பிட்டார், முதல் பிரதியைப் பெற்றுக்கொண்ட இ.பா. (இந்த வருடம் ந. சிதம்பரசுப்பிரமணியனின் நூற்றாண்டு) ஸýஜாதா விஜயராகவன் பாத்திரங்களுக்கு ஏற்ப, குரலில் ஏற்ற இறக்கங்களுடன் வாசித்து, வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்திருப்பது மட்டுமல்ல. நாவலில் வரும் அத்தனை கீர்த்தனைகளையும் தாமே பாடியும் இருக்கிறார். கதையும் பாட்டும் காதில் விழுகிற போது, சங்கீதச் சூழலை ஆத்மார்த்தமாக ரசிக்க முடிகிறது.
கதையின் முதல் நான்கு அத்தியாயங்களை எழுதி முடித்த போது, எந்தப் பத்திரிகை இதை வெளியிடும் என்று ஸýஜாதா யோசித்தாராம். அதனால் அப்படியே வைத்துவிட்டார். தற்செயலாக ராணிமைந்தன் தம்மைச் சந்தித்தபோது, தாம் எழுதி வைத்திருந்ததை எடுத்துப் படிக்கக் கொடுத்தாராம். அவர் அதை ரசித்துவிட்டு, சாவியிடம் கொடுத்தார். மறுவாரமே சாவி தம் இதழில் அரங்கம் தொடர் வெளிவரப்போவதாக அறிவிப்பு செய்துவிட்டார். அப்புறம் வாரம் தோறும் கதையின் அத்யாயத்தை எழுதி நாவலை முடித்த கதையை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார் ஸýஜாதா.
தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி, சுவாதித் திருநாள், மாணிக்கவாசகர்,அருணகிநாதர், தாயுமானவர், பெரியசாமி தூரன் என்று பலரின் பாடல்களை அங்கங்கே தூவியிருக்கிறார் ஸýஜாதா.
முழுக்க முழுக்க சங்கீதம் நிறைந்த நாவலில், கால் பந்து வீரர் மாரடோனா எதிரணி வீரர்களுக்குப் பிடிகொடாமல் பாய்ச்சல் காட்டி, கால்களால் பந்தைக் கொஞ்சிக் கொஞ்சி, அது உருளுமா, ஓடுமா, பாயுமா, பறக்குமா என்று புரியாமல் யாவரையும் திகைக்கச் செய்து, இமைக்குமுன் விரலசைவில் பந்து ராம பாணமாக கோல் போஸ்ட்டுக்குள் பாயும் லாகவத்தை, கதாநாயகன் ரங்கனின் இசைத் திறமையோடு ஒப்பிடும் இடம் வித்தியாசமானது.
""ரங்கா, எனக்கு ஒரு பெரிய துக்கம்டா இப்போ..' என்கிறான் சுதர்சன். என்னது உன்னோட கீதப்ரியா கச்சேரியை ரிக்கார்ட் பண்ணி வெச்சுக்காத போனோமே... இருந்தா ரிப்ளே பண்ணிக் கேக்கற பாக்கியம் கிடைச்சிருக்குமே... அநியாயமா அதை விட்டுட்டோமே. அன்னிக்கு நீ செஞ்சது மாரடோனா போட்ட கோல் மாதிரிதான்...!''
- நாவலின் பல இடங்களில் தி. ஜானகிராமனின் பாதிப்பு உரை நடையில் தெரிகிறது. வார்த்தைகளில் அவர் கையாளும் சொக்க வைக்கும் நயமும், இதமும் இதயத்தை வருடுகின்றன. எழுத்திலும் இசையிலும் ஒரு தாகமும் தேடலும் இருந்தால் மட்டுமே இப்படி ஒரு படைப்பைக் கொண்டுவர முடியும்.
வெற்றி தோல்வி பாராமல், நூற்றைம்பது ரூபாய்க்கு ஸ்வாதி சாப்ட் சொலூஷன்ஸ் வெளியிட்டிருக்கும் இந்த சிடி சுமார் ஒன்பது மணி நேரத்துக்கு மேல் கேட்க வாய்ப்பு அளிக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்துவிட்டால், பாத்திரங்கள் நம் அருகிலேயே இருந்து உரையாடும் புதிய அனுபவம் இதில் கிடைக்கிறது.