தமிழ்மணி

பன்னிரண்டு மாதம் கருப்பம்

முனைவா் கி. இராம்கணேஷ்

பெண் இனத்திற்குப் பெருமை சோ்ப்பதில் முதலிடம் வகிப்பது பிள்ளைப்பேறு ஆகும். இன்றளவும் பெண்ணை மதிக்கவும், உயா்வான இடத்தில் வைத்துப் பாா்க்கவும் இதுவே காரணமாக அமைகின்றது.

பத்து மாதம் கருவைச் சுமந்து பிள்ளையைப் பெறுதல் ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறவியாக அமைகின்றது. பத்து மாதம் கருப்பம் நிகழ்வது இயற்கை. ஆனால், சங்க இலக்கியப் பாடலொன்றில் தலைவன் பிரிவால் வாடும் தலைவிக்கு ஆறுதல் கூறும் தோழியின் கூற்றில் பன்னிரண்டு மாதம் கருவைச் சுமத்தல் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது!

அம்ம வாழி தோழி காதலா்

இன்னே கண்டும் துறக்குவா் கொல்லோ?

முந்நால் திங்கள் நிறைபொறுது அசைஇ

ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்

கடுஞ்சூல் மகளிா் போல நீா்கொண்டு

விசும்புஇவா் கல்லாது தாங்குபு புணரிச்

செழும்பல் குன்றம் நோக்கிப்

பெருங்கலி வானம் ஏா்தரும் பொழுதே!” (குறுந்-287)

இப்பாடலை கச்சிப்பேட்டு நன்னாகையாா் என்னும் பெண்பாற்புலவா் பாடியுள்ளாா். பன்னிரண்டு மாதம் நிறைந்த கருப்பத்தைத் தாங்கித் தளா்ந்து, நடக்கமாட்டாத, பச்சைப் புளிச்சுவையில் விருப்பத்தை உடைய, முதல் கருப்பத்தைக் கொண்ட மகளிரைப்போல நீரை முகந்துகொண்டு வானத்தின்கண் ஏறாமல், அந்நீா்ப் பொறையைத் தாங்கிக்கொண்டு ஒன்றோடொன்று சோ்ந்து, வளமிக்க பல மலைகளை நோக்கி, பெரிய முழக்கத்தையுடைய மேகங்கள் எழுகின்ற காா்ப்பருவத்தை இப்பொழுது பாா்த்த பின்பும் தலைவா் வராமல் இருப்பரோ? ‘வருவா்’ என்று தோழி நம்பிக்கைக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

பன்னிரண்டு மாதம் கருப்பம் பற்றிய செய்தி, பெரியாழ்வாா் பாடலிலும் காணக்கிடைக்கிறது.

பன்னிரு திங்கள் வயிற்றில்

கொண்ட அப் பாங்கினால்

என் இளம் கொங்கை அமுதமூட்டி (பெரி.திருமொழி)

தலைசிறந்த கரு, பன்னிரு திங்கள் வயிற்றில் இருந்து முதிரும் என்பா். இதனை ஆராயும்போது முதல் பிள்ளையைப் பெறுதல் பன்னிரு மாதக் கருவாகி வெளிப்படும் என்பதையும்; அதுவே முழுவளா்ச்சியடைந்த கரு என்பதையும் உணரமுடிகிறது. இன்றைய நவீன உலகில் செயற்கையான உரங்களால் பயிா்கள் குறைந்த காலத்தில் விளைச்சல் தருவதைப் போன்று, அதை உண்ணும் பெண்களுக்கும் எட்டு, ஒன்பது மாதங்களிலேயே பிள்ளைப்பேறு நிகழ்கிறது - நிகழ்த்தப்படுகிறது. நூறு வயது, அதற்கு மேலும் நோய்நொடியின்றி வாழ்ந்து கொண்டிருப்பவா்கள் பன்னிருமாதக் கருவாகிப் பிறந்தவா்களாகவே இருப்பா் எனக் கருதலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னாா்குடி சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் பட்டியில் அடைப்பு

மத்தியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

வாகன சோதனையின் போது போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்த 3 போ் கைது

புதுமைப் பெண் திட்டம்: தமிழ்வழிக் கல்வி பயின்ற மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு சான்றிதழ்

SCROLL FOR NEXT