தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - (26-02-2023)

DIN


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத் தொடர்பாளர் ஆ. கோபண்ணாவுடனான எனது நட்புக்கு வயது நாற்பது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் நானும் நெருங்கிய நண்பர்கள். 1983-இல் அவர் ஈரோடு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தார். அப்போது ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.ஸின் ஒருங்கிணைப்பில், அகில உலக சிவாஜி ரசிகர் மன்ற மாநாடு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. அங்குதான் கோபண்ணாவுடனான எனது முதல் சந்திப்பும் அதைத் தொடர்ந்து நெருக்கமும் ஏற்பட்டது.

கோபண்ணாவின் குடும்பம் தேசிய பாரம்பரியம் கொண்டது. அவரது தந்தை ஆதிகேசவன், முன்னாள் முதல்வர் பக்தவத்சலம், ஓ.வி. அளகேசன் ஆகியோருக்கு நெருக்கமானவர். அதனால் இயல்பாகவே கோபண்ணாவுக்கு தேசிய சிந்தனை ஏற்பட்டதிலும், காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் ஏற்பட்டதிலும் வியப்பில்லை. 

"தேசிய முரசு' என்கிற இதழை நடத்துவது மட்டுமல்லாமல், "நவ இந்தியா' என்கிற பதிப்பகத்தின் மூலம் தேசிய சிந்தனையை ஊட்டும் பல நூல்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் கோபண்ணா. அவரது "காமராஜ் ஒரு சகாப்தம்' என்கிற புத்தகம், அரிய புகைப்படங்களுடன் கூடிய அற்புதமான ஆவணப் பதிவு.

அதே பாணியில், பண்டித ஜவஹர்லால் நேரு குறித்த ஆங்கில நூல் ஒன்றைத் தொகுத்து வெளியிட்டார் கோபண்ணா. அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் வெளியிடப்பட்ட, 700-க்கும் அதிகமான அரிய புகைப்படங்களுடன் கூடிய அந்தப் புத்தகம், இப்போது அவரால் தமிழில் வெளியிடப்பட்டிருக்கிறது. 

ஜவஹர்லாலின் பிள்ளைப் பருவத்தில் தொடங்கி, அவரது அரசியல் பிரவேசம், விடுதலைப் போராட்டப் பங்களிப்பு, 1947 இந்திய சுதந்திரமும் அதிகார மாற்றமும், நவீன இந்தியாவின் உருவாக்கம், அவரது பன்முக ஆளுமை உள்ளிட்ட நேருவின் வரலாற்றுத் தகவல்களை புகைப்படங்களுடன் பதிவு செய்திருக்கிறது, கோபண்ணாவின் "மாமனிதர் நேரு'. அரிய புகைப்படங்களை சேகரித்தது பெரிதல்ல, தரமான காகிதத்தில் அச்சிட்டதுகூட பெரிதல்ல, அத்தனை படங்கள் குறித்த குறிப்புகளையும் இணைத்திருப்பதுதான் இந்தப் புத்தகத்தை சிறந்த ஆவணப் பதிவாக உயர்த்துகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பண்டித நேரு என்று சொன்னால் மறக்க முடியாதது, அவரது மறைவைத் தொடர்ந்து கவிஞர் கண்ணதாசன் எழுதிய இரங்கற்பாதான். அதை அடுத்த பதிப்பில் இணைக்க வேண்டும் என்பது நண்பர் கோபண்ணாவுக்கு எனது வேண்டுகோள்.

இந்தியா வாழும் காலம் வரை, பண்டித ஜவஹர்லால் நேருவின் புகழும் வாழும்; நேருவின் நினைவு நிலைத்திருக்கும் காலம் வரை ஆ. கோபண்ணா தொகுத்து வழங்கியிருக்கும் இந்த புகைப்பட ஆவணமும் பேசப்படும்!

-------------------------------------------------------

சர்வதேச அளவில் தமிழைக் கொண்டு சென்ற பெருமை ஜார்ஜ் எல். ஹார்ட்டுக்கு உண்டு. சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது அதில் பங்கேற்க வந்திருந்தார் ஜார்ஜ் எல். ஹார்ட். அப்போதுதான், பல்கலைக்கழகப் பேராசிரியர்களைத் தாண்டி சாமானியர்களும் ஜார்ஜ் ஹார்ட்டின் தமிழ்த் தொண்டையும் தமிழ் மீதான அவரின் பற்றையும் தெரிந்து கொண்டார்கள்.

தமிழ் குறித்து மிக அதிகமான ஆய்வுகளை மேற்கொண்ட மேலைநாட்டவர்களில் ஜார்ஜ் ஹார்ட்டின் பங்களிப்பு முதன்மை பெறுகிறது என்றுகூடச் சொல்லலாம். விரிவாகவும், நுட்பமாகவும் தமிழ்ச் செவ்விலக்கியத்தை மட்டுமல்லாமல், சங்க, சமய இலக்கியங்கள் குறித்தும், தமிழின் தொன்மை குறித்தும் ஆய்வுகளை நடத்தி சர்வதேச இலக்கியத் தளத்தில் பதிவு செய்திருக்கிறார் அவர்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஜார்ஜ் ஹார்ட், தமிழ், லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றவர். பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மதிப்புறு பேராசிரியர். தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையேயான தொடர்பு, வேறுபாடு, ஒப்புமை உள்ளிட்ட பல கோணங்களில் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார் அவர். 

தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த ஜார்ஜ் ஹார்ட்டின் பணி, தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்ததில் பெரும்பங்கு வகித்தது. தமிழிலும், சமஸ்கிருதத்திலும் மொழிபெயர்ப்புகள் மட்டுமல்லாமல், பல நூல்களையும் படைத்திருக்கும் அவரை இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.

அவரது ஒப்பாய்வுப் படைப்புகளில் ஒன்று, "தி ரிலேஷன் பிட்வீன் டமிள் அண்ட் கிளாசிகல் சான்ஸ்க்ரிட் லிட்ரேச்சர்'. அதை "தமிழ் - சமஸ்கிருதச் செவ்விலக்கிய உறவுகள்' என்ற பெயரில், ஜார்ஜ் ஹார்ட்டின் ஒப்புதலுடன் தமிழாக்கம் செய்திருக்கிறார் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பு. கமலக்கண்ணன்.

"தமிழ், சமஸ்கிருத இலக்கியங்களுக்கான பொது மூலம்', "பிற்காலத் தமிழும் பிற திராவிட மொழிகளும் சமஸ்கிருதமும்' ஆகிய இரண்டு வெவ்வேறு கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். தமிழிலிருந்து சமஸ்கிருத இலக்கியங்களா, இல்லை சமஸ்கிருத மூலத்திலிருந்து தமிழ் இலக்கியங்களா என்கிற கேள்விக்குச் சான்றுகளுடன் விடை தருகிறது ஜார்ஜ் ஹார்ட்டின் ஆய்வு!

-------------------------------------------------------

விமர்சனத்துக்கு வந்திருந்தது தாமரைபாரதியின் "காசினிக் காடு'  கவிதைத் தொகுப்பு. அதிலிருந்த "ஆமென்' என்கிற இந்தக் கவிதை எனக்குப் பிடித்திருந்தது. நான் பகிர்ந்து கொண்டபோது, வடிவமைப்பாளர் சுந்தரபாண்டியன், கிறிஸ்தவர்களின் மனம் புண்படுமே என்று தயக்கத்துடன் தெரிவித்தார். கவிதையை கவிதையாகப் பார்க்க வேண்டும், ரசிக்க வேண்டும் என்பது எனது கருத்து. இதுவே மாரியாத்தாளாகவோ, மதுரை வீரனாகவோ, முனியாண்டி சாமியாகவோ இருந்தால் தயங்கி இருப்போமா என்று சிந்தித்தேன். அதனால் பகிர்ந்து கொள்கிறேன். அப்படி யாருடைய மனமாவது புண்படுமேயானால், மன்னித்து அருள்வீர்களாக!

பாவஞ்செய்யும் சகலருக்குமாக
பாரஞ்சுமக்க அவர்
உயிர்த்தெழும் நன்னாளில்தான்,
நாற்பது நாள்கள் நோன்பிருந்து
நாற்பத்தோராவது நாளில்
மந்தையிலிருந்துப் பிரிந்த
மறியொன்றை
மதிய உணவாக்கிக்கொண்டோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழைநீா் வடிகால்களில் தூா்வாரும் பணி: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 16 டன் மாம்பழங்கள் அழிப்பு

மீண்டும் கரோனா: சிங்கப்பூா்-கோவை வரும் விமானப் பயணிகளுக்கு பரிசோதனை

அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் 1 சோ்க்கை முகாம்

வெளிநாடுகளில் உயா்கல்வி -பழங்குடியின மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT