தமிழ்மணி

அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே!

DIN

கட்டுரைத் தலைப்பு கம்பராமாயணக் கடவுள் வாழ்த்துப் பாடல் தொடராகும். இதன் ஒவ்வொரு சொல்லும் பொருளாழம் உடையது. இலக்கண வகையில் தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூவிடப் பெயர் நிலையில் அவர் என்பது படர்க்கை இடச் சொல். எனினும் ஈண்டு அப்படர்க்கை என்ற பொதுமை கடந்த நிலையில் அவர் என்பது சேய்மைச்சுட்டாக அறிதற்குரிய வகையில் தலைவர் என்ற சொல்லுடன் தொடர்ந்துள்ளதால் எவர் தலைவர் எனக் கேள்வி எழுப்பிக் கேட்பதற்கு அவர் தலைவர் என விடைபகரும் நிலையில் அவர் என்றது சுட்டுச் சொல்லின் சுந்தரத்தை பெற்றுள்ளது. 

அவர் என்றது அம்மனிதன் எனச் சுட்டிய அளவில் அல்லாமல் அச்சுட்டுக்குக் கூடுதலாகச் சுட்டப்பட வேண்டியதாக உள்ளவரே அவர் என்ற கருத்தாடலை உணரச் செய்யுமாறு கம்பர் கூறும் நிலையில் அவர், தலைவர் என்ற இரு சொற்களும் கடவுள் என்ற பொருளை ஒருசேர உணர்த்தச் செய்கின்றன எனலாம்.

நிலம், பொழுது (காலம்) இரண்டும் முதற் பொருள் எனத் தொல்காப்பியம் உலகத் தோற்றத்தின் அடிப்படைக் கூறுகளை உணர்த்துகையில் காலச் சுழற்சிக்கேற்ப உலக உயிர்களும் பொருள்களும் இயற்கை, செயற்கைகளால் ஆக்கவும் ஆக்கியவை யாவும் வாழும் காலம் வரை காக்கவும் பின்னர் அழிவு என்றவகையில் மாற்றம் பெறுதலும் தொடர்ந்து உலகில் நடைபெறுவதால் அவ்இயக்கம் ஓர் இன்றியமையாத மூலத்தால்இயங்குகிறது எனலாம்.

காணுதற்கரிய அணு அளவான அந்த மூலம், இயக்குதற்குரிய ஆற்றலையும் ஆற்றலாலான பயனையும் ஒரு சேர இணைந்ததால் உள்ளதை உணர்ந்து தெளிந்த நிலையில்தான் சக்தி  சிவம் என்ற கடவுள் கோட்பாட்டின் குறியீடுகளாகச் சமயக் கொள்கையும் புராணப் பாங்கும் அவ்வக் காலத்தில் உருவானதால் அவர் என்ற அகச்சுட்டுக் சொல் அவன், அவள் என்ற ஆண் பெண் சொற்களுக்குரிய கூட்டுச் சொல்லாக அவர் என்ற சொல் வடிவமைக்கப்பட்டது.
இந்நுட்பத்தைக் கோடிட்டுக் காட்டும் வகையிலேயே பரஞ்சோதி முனிவர் சக்தியாய் சிவமாகித் தனிப் பெரும் முத்தியான முதல் எனத் திருவிளையாடல் புராணக் தொடக்கத்தை நினைவுகூர்ந்தார்.

இந்நிலையில், தலைவன், தலைவி என்ற ஆண் பெண்ணுக்குரிய பன்மையாகத் தலைவர் என்ற சொல்லைக் கருதினாலும் அதற்குக் கூடுதலாக இச்சொல் தலைமை என்ற உயரிய முதலிடத்தைக் குறிப்பதாகும். 

இச்சொல் தலையை உடையதால் தலையர் எனப்பட்டார் என்பதையும் உணரச் செய்யினும் அது தலைமைக்குரிய உயர்நிலைப் பண்பைக் குறிக்காதென்பதால் தலைவர் எனக் கம்பர் உச்சரித்தது ஆக்கல் காத்தல் மாற்றல் என்ற மூன்றையும் தாம் ஒருவரே செய்யவல்ல திறனாளியாம் ஒற்றைத் தலைமையைக் குறிப்பதாக உணரும் போது தான் அத்தலைவர் என்பது குறிப்பிட்ட எல்லை கடந்த பரந்துபட்ட உலகிற்கெல்லாம் தலைவராவார்  என உணருமாறு செய்கிறது எனலாம். 

இதுதான் கடவுள் தன்மைக்கான இலக்கணம் என்பதால் அவர் தலைவர் எனக் கூறியதற்குப் பிறகு அத்தலைமையை உறுதிப்படுத்தவே அன்னவர்க்கு என அகரத்தை முதலாக உடைய சுட்டையே  கூறித் தலைவர் என்ற சொல்லை அவர் என்றதற்கும் அன்னவர்க்கே என்றதற்கும் இடையில் கிடுக்குப் பிடியிட்டு உரைத்தார் கம்பர் என்பதாக உணர வேண்டும்.

ஆக பிறப்பு இறப்புகளுக்கு உட்படும் மனித உயிர் முதலானயாவும் அப்பிறப் பிறப்புகளுக்கு உட்படாதவர்க்கே சரணாய் கிடக்கும் என்பதால் அன்னவர்க்கே சரண் என்றார் கம்பர்.

சரண் என்பது சரணாகதித் தத்துவத்தை உணர்த்தினாலும் ஆன்மாவுக்கான அடைக்கலமாம் புகலிடத்தை நினைப்பித்தது எனலாம். ஈண்டு ஆன்மா என்றாலும் அது பாடலின் தொடக்கமான உலகம் யாவையும் என்றதன்வழி, உலகம் யாவும் கடவுளையே அடைக்கலம் தேடும் என்பது கருத்தாம்.

ஈண்டு உலகம் எனக் கூறினும் அச்சொல் அஃறிணை தவிர்த்த மானுடமாம் உயர்திணையைக் குறிக்கும் என்ற வேறுபாட்டைக் குறிக்கவே சரண் நாங்களே 
எனக் கம்பர் தம்மையும் சேர்த்துக் கொண்டுக் கூறும் உளப்பாட்டு உயர்திணை மாந்தர் பெறும் சரணாகதியை நினைப்பித்தார் என்பது கருத்து.

ஏனெனில் மனித உயிர்தான் தன்மையும் இப்பிரபஞ்சத்தையும் உணர்வதோடு இப்பிரபஞ்சத்தின் இயக்க மூலத்தையும் உணரும் தன்மை பெற்றதால் கம்பர் சுட்டும் நாங்கள் என்றது அஃறிணையை நீக்கிய உயர்திணையையாம் என்பது கருத்து.

மேலும் பாடல்கூறும் அவர் என்ற சொல் படர்க்கைச்சுட்டு, சேய்மைச்சுட்டு என்றெல்லாம் கூறுதற்கும் மேலாக அதனைப் பண்டறிச் சுட்டாகக் கூறும் சமய உணர்வான பழம்பெரும் சொல் என்பதாகவும் கருதலாம்.

பண்டறிச்சுட்டு என்றது அரும்பெறல் மரபின் பெரும் பெயர்ச் சொல்லாக உணரக்கிடப்பதால் சித்தாந்த முறையில் ஆண்டவன் ஆன்மா என்றதன் இருப்பை, என்று நீ, அவறு நான் என்பதாகக் கருத வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT