தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - (28-05-2023)

DIN

தில்லியில் நான் சந்தித்த அனைவர் மத்தியிலும் "செங்கோல்' குறித்த பேச்சுதான். அது என்ன, அதன் பின்னணி என்ன என்று வடநாட்டுக்காரர்கள் ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் விளக்கம் சொல்லியும், திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பில் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவுக்கு "செங்கோல்' வழங்கப்பட்டது குறித்து விளக்கியும் போதும் போதுமென்றாகிவிட்டது.

எல்லா ஹிந்தி தொலைக்காட்சி சேனல்களிலும் "செங்கோல்' குறித்த வரலாறு ஓடிக் கொண்டிருக்கிறது. வடநாட்டில், மகுடம் சூட்டுதல் குறித்த குறிப்புகள் இருக்கிறதே தவிர, "செங்கோல்' வழங்கும் வரலாறு எதுவும் கிடையாது. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முகமது கஜினியின் படையெடுப்பைத் தொடர்ந்து, ராஜபுத்திரர்களின் ஆதிக்கம் குறைந்துவிட்டது. இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு "செங்கோல்', "கிரீடம்' போன்றவை கிடையாது.

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவையொட்டி மதச்சடங்குகள் நடத்தப்படுவது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று சிலர் கூறுவதை என்னால் ஏற்க முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு, சிறுபான்மை ஹிந்துவான பிரதமர் ரிஷி சுனக், பிரிட்டனின் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையான கிறிஸ்தவ மதத்தின் மறையான பைபிளை வாசிக்க, மன்னர் இரண்டாம் சார்லஸ் முடிசூட்டிக்கொண்டதை நாம் பார்த்தோம்.

தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான சைவத் திருமடங்களின் சன்னிதானங்கள், "செங்கோல்' நிகழ்ச்சிக்காக தில்லிக்கு வந்திருக்கிறார்கள். பிரதமர் இல்லத்தில் திருமுறை ஓதப்படுகிறது. "கோளறு பதிகம்' ஓதுவார்களால் பாடப்படுகிறது. சங்கத் தமிழானாலென்ன, சைவத் தமிழானாலென்ன தலைநகர் தில்லியில் பிரதமர் இல்லத்தில் தமிழ் ஒலித்தது என்பதுதானே முக்கியம்?

"செங்கோல்' நிகழ்வு, வேறு பல செய்திகளையும் தேசிய அளவில் எடுத்துச் சென்றிருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் சைவத் திருமடங்கள் குறித்து இப்போதுதான், தமிழகத்துக்கு வெளியே பரவலாகத் தெரிய வந்திருக்கிறது. பிற மொழி பத்திரிகையாளர்கள், ஆதீனங்கள் குறித்தும், அவர்களது பின்னணி, பங்களிப்பு, செயல்பாடுகள் குறித்தும் ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். ஜனனி ரமேஷ் எழுதிய "சைவ ஆதீனங்கள்' புத்தகத்தை அவர் ஆங்கில மொழியாக்கம் செய்ய இதுதான் சரியான தருணம்.

"செங்கோல்', ஆங்கிலத்தில் "செப்டர்' என்று அழைக்கப்படுகிறது. இது குறித்து பைபிளில் குறிப்பு காணப்படுகிறது. கிரேக்க, ரோமானிய அரசர்கள் தங்களது கையில் "செப்டர்' என்கிற "செங்கோல்' வைத்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்தில் அதன் மேல்பகுதியில் கழுகும், பிற்காலத்தில் சிலுவையும் காணப்பட்டன. பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில், மகுடாபிஷேகத்தின்போது தேவாலயத்தின் தலைமை மதகுரு "செப்டர்' எனப்படும் "செங்கோல்' வழங்கும் நடைமுறை இருந்தது.

அது என்னவோ இருக்கட்டும். இன்று, தலைநகர் தில்லியில் பிரதமரின் இல்லத்தில் தமிழ் திருமுறைகள் ஒலிக்கிறது. இந்திய நாடாளுமன்றத்தில், தமிழகத்தின் அடையாளமாக திருவாவடுதுறை ஆதீனம் அளித்த "செங்கோல்' நிறுவப்படுகிறது. அந்த நிகழ்ச்சியை உங்கள் சார்பில் பார்த்து மகிழ எனக்குக் கொடுத்து வைத்திருக்கிறது!

---------------------------------------

ஜியோமே எம். குபோஸ் எழுதிய "ஜென் கோன்ஸ்' என்கிற புத்தகத்தின் தமிழாக்கம்தான் "ஜென்  ஒரு தீர்வு இல்லாத புதிர்'. முரண்பாடான கதைகள் என்றும் சொல்லலாம். சுப. மீனாட்சி சுந்தரத்தால் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம், ஜென் குறித்துத் தெரிந்து கொள்ள விழைபவர்களுக்கு ஒரு சிறிய வெளிச்சத்தைக் காட்டுகிறது.

அதென்ன "சிறிய வெளிச்சம்?' அதுதான் ஜென் தத்துவத்தின் அடிப்படை. ஒன்றுபோல மற்றது இல்லை என்பதுதான் ஜென் தத்துவத்தின் அடிப்படைக்கூறு. எதையும் எதனுடனும் ஒன்றாக்குதல் இயலாது என்கிறது ஜென்.

ஜியோமே எம். குபோஸ் எழுதியிருக்கும் புத்தகத்தில் காணப்படும் கதை இது  "நோய்வாய்ப்பட்டுள்ள சக துறவியான உங்கன் என்பவரை டோகோ பார்க்கச் சொன்னார்.'

"நீங்கள் இறந்து உங்கள் காலத்தை மட்டும் விட்டுச் சென்றால், நான் உங்களை மீண்டும் எங்கே சந்திக்கலாம்' எனக் கேட்கிறார் டோகோ.

"எதுவும் பிறக்காத இடத்திலும், இறக்காத இடத்திலும் நான் உங்களைச் சந்திப்பேன்' என்பது உங்கனின் பதில்.

"நீங்கள் சொல்லியிருக்க வேண்டியது என்னவென்றால், எதுவும் பிறக்காத அல்லது இறக்காத இடம் என்று எதுவும் இல்லை. நாம் ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டியதில்லை' என்று அதற்கு பதிலளிக்கிறார் டோகோ.

இதில் எனக்கு எதுவும் புரியவில்லை என்று நீங்கள் குழம்பாதீர்கள். அதுதான் ஜென். இருக்கும் என்பதால் இருக்கிறது, என்னதான் சொல்ல வருகிறார் என்று யோசிக்கத் தொடங்கினால், நீங்கள் ஜென் தத்துவம் குறித்துத் தெரிந்து கொள்ளத் தொடங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

ஜென் தத்துவம் சீனாவைச் சேர்ந்தது என்பதுதான் பரவலான புரிதல். அது இங்கிருந்துதான் சென்றது என்பதை நாம் மறந்துவிடுகிறோம். போதி தர்மர்தான் (நம்ம காஞ்சிபுரத்துக்காரர் என்று கூறப்படுகிறது) ஆறாம் நூற்றாண்டில் ஜென்னை சீனாவுக்குக் கொண்டு சென்றார் என்று கூறுவார்கள்.
இந்தப் புத்தகத்தில் பின் இணைப்பாக பெளத்தத்தின் சொற்களஞ்சியம் தரப்பட்டிருக்கிறது. முக்கியமான வார்த்தைகளுக்குப் பொருள் தெரிந்து கொள்ள உதவுகிறது. முத்தாய்ப்பாக, ஜியோமே எம் குபோஸ் கூறுகிறார் "ஞானம் என்பது வாழ்க்கைத் தத்துவம், பிறப்பு பற்றிய விஷயம். ஜென் வாழ்க்கை என்பது முழுமையின் வாழ்க்கை.'

---------------------------------------

வல்லம் தமிழின் இலக்கியப் பயணம் 1992இல் "தினமணி கதி'ரில் பிரசுரமான முதல் சிறுகதையுடன் தொடங்கியது. ஆனால், அச்சுவாகனம் ஏறிய அவரது முதல் புத்தகமான "ஒரே இனிப்பு... தனித்தனி நாக்கு...' என்கிற கவிதைத் தொகுப்பு இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. அதில் இருந்து நான் ரசித்துத் தேர்ந்தெடுத்த கவிதை இது  
எல்லா வீடுகளிலும்
செல்லம்மாக்கள்
இருக்கிறார்கள்!
பாரதி மட்டும்
ஏதாவது ஒரு வீட்டில் 
எப்போதாவதுதான்
தென்படுகிறான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா், சிவகாசி, சாத்தூரில் இறுதிக்கட்ட பிரசாரம்

கிணற்றில் மூழ்கி மாணவா் பலி

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 6 லட்சம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணசாமி இறுதிக்கட்ட பிரசாரம்

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT