தமிழ்மணி

தசவிடு தூது தந்த மகாவித்துவான்

ஒருவர் தன்னுடைய கருத்தை மற்றொருவருக்கு நேரில் சென்று சொல்ல முடியாத நிலையில், தான் கருத்தை சொல்லியோ அல்லது எழுதியோ அனுப்புவதைத் தூது என்பர்.

முனைவர் சே. கரும்பாயிரம்

ஒருவர் தன்னுடைய கருத்தை மற்றொருவருக்கு நேரில் சென்று சொல்ல முடியாத நிலையில், தான் கருத்தை சொல்லியோ அல்லது எழுதியோ அனுப்புவதைத் தூது என்பர். தூதுக்காக அனுப்பப்படும் ஆடவரைத் தூதன் என்றும் மகளிரைத் தூதி என்றும் வழங்குவதுண்டு. தூதுக்காக எழுதிய ஓலையைத் தூதோலை என்று அழைப்பர்.

தூதினை அகத்தூது, புறத்தூது என இருவகைப்படுத்துவர். தலைவன் தலைவிக்கிடையே தூது செல்வதை அகத்தூது என்றும் மன்னன், வள்ளல் முதலானோரிடம் தூது செல்வதைப் புறத்தூது என்றும் அழைப்பர்.  

தூது செல்வது பண்டைய காலந்தொட்டு இருந்துள்ளதை ஐங்குறுநூற்றில் பாணன் தூது, புறநானூற்றில் ஒளவையார் தூது ஆகிய செய்திகளால் அறியலாம். உயர்திணை ஆகிய ஆண்பால், பெண்பாலினரைத் தூதாக அனுப்புவதன்றி, அஃறிணைப் பொருள்களையும் தூது அனுப்புவது கவி மரபாக இருந்துள்ளது. சான்றுகளாக நண்டு, நாரை, கிளி, வண்டு முதலியவை சங்க இலக்கியங்களில் தூதாக அனுப்பப்பட்டுள்ளன. நாயன்மார், ஆழ்வார் பாடல்களிலும் தூது விடும் நிகழ்வுகளைக் காணமுடியும். 

அத்தகைய தூது தனி பின்னாளில் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாக வளர்ச்சியுற்றது. பொதுவாகத் தூது இலக்கியங்களைத் தொடர்நிலைச் செய்யுள் வடிவில் கலி வெண்பாவால் இயற்றுவது மரபாகும். சைவ சமய சந்தானக் குரவர் நால்வருள் ஒருவராகிய கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட நெஞ்சுவிடு தூது நூலே தமிழில் வெளிவந்த முதல் தூது இலக்கியமாக அறியமுடிகிறது. 

நெஞ்சைத் தூதுப் பொருளாக விடுத்தபின், அன்னம், மயில், கிளி, மேகம், நாகணவாய்ப்புள், குயில், தென்றல், வண்டு ஆகியனவற்றையும் தோழியையும் தூது அனுப்புவதைப் புலவர்கள் மரபாகக் கொண்டிருந்தனர். இந்தப் பத்தையும் தூது விடுவதைத் தசவிடு தூது என்று ஒரே நூலில் இயற்றி விளக்கியவர் மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளை ஆவார்.

இந்தப் பத்து மட்டுமின்றி விறலி, மான், கருடன், காக்கை, நெல், கொன்றை, கமலம், சவ்வாது, புகையிலை, பணம், தமிழ், துகில், கண்ணாடி ஆகியன கொண்டும் தூது விடுவதைப் புலவர்கள் நூல்களாக இயற்றியுள்ளனர். இவற்றில் பணத்தைத் தூதுப் பொருளாகக் கொண்டு இயற்றிய ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்கள் உண்டு.     
மாதை திருவேங்கடநாதர் (1838), இராமலிங்கேசர் (1934), முத்துவிஜய ரகுநாத சேதுபதி (1980) புல்லைக் குமரேசர், கவிராயர், சின்னவன்னியனார் ஆகியோரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட பணவிடு தூது நூல்கள் இதுவரை அச்சில் பதிப்பிக்கப்பட்டுள்ளன (மூன்று பணவிடு தூது நூல்கள் இணைந்த பதிப்பு, 2003). இந்நூல்களில் அன்றைய காலத்தில் பயன்படுத்திய பலவகையான நாணயங்களைக் குறிப்பிட்டுள்ளன.  

நாணயங்கள் பொருள்களைப் பறிமாற்றிக் கொள்வதற்கு மதிப்புடையதாகப் பண்டைய காலந்தொட்டு இருந்து வருகிறது. முன்னோர் பொன், வெள்ளி, செம்பு முதலான உலோகங்களைக் கொண்டு நாணயங்களை உருவாக்கினர். நாணயம் அச்சிடும் இடத்தை அக்கசாலை என்றனர். அந்நாணயங்களை அச்சிடுவதற்கு வரியும் விதித்துள்ளனர். அதனை மாடைக்கூலி என்றனர். 

பொன் என்பது நாணயத்தையும் குறித்துள்ளது. பொன்னிற்கு அத்தம், அரி, ஆசை, ஆடகம், இரணியம், ஈகை, ஈழம், ஏமம், கந்தம், கல்யாணம், கனகம், கனம், காஞ்சனம், காரம், சந்திரம், சாதரூபம், சாமீகரம், செம்பொன், சொன்னம் (சொர்ணம்), தங்கம், தமனியம், தனம், தாது, திரவியம், தேசிகம், நிதானம், பீதகம், பூரிகை, பூனதம், பொலம், மா, மாசை, மாடை, வேங்கை ஆகிய பலபெயர்கள் வழங்கியதைப் பணவிடு தூது இலக்கியங்கள் சுட்டுகின்றன.  

மாடை, வராகன், காசு, பணம், சக்கரம், வெட்டு, மின்னல், முளை என்பவை நாணயத்திற்கு வழங்கிய பெயர்களாகும். இவற்றில் மாடை, காசு ஆகியன பழங்காலத்திலிருந்து புழக்கத்தில் இருந்த வந்த நாணயங்களாகும். 

பரங்கிப்பேட்டை, சென்னப்பட்டணம், தஞ்சை, திருநெல்வேலி, அரியலூர், சேலம், மாமதுரை, கண்டரகோட்டை, திருவெங்கோடு முதலான ஊர்ப்பெயர் கொண்ட நாணயங்களும் இருந்துள்ளன. இந்த நாணயங்கள் அந்தந்த ஊரில் அச்சிட்டுப் புழக்கத்தில் இருந்தவையாகும்.   

புதிதாக அச்சிட்டுப் புழக்கத்தில் இருந்த நாணயம் புதுநாணயம், புதுவெட்டு என்றும் அச்சிடும் பொழுது குறைபாடு ஏற்பட்டுப் பயன்படுத்திய நாணயம் கருக்கு, வெந்துருகல், வேவல் என்றும் பயன்படுத்தித் தேய்தல், சிதைதல், உடைதல் முதலானவை ஏற்பட்ட நாணயம் தேய்வு, தேய்ச்சவுரை, வின்னம், வேட்டுடைசல் என்றும் தரம் குறைந்த நாணயம் மாற்றுக்குறைச்சல் என்றும் வழங்கப்பெற்றுள்ளதைக் காணலாம். 

முன்னோரின் வரலாறு, பண்பாடு முதலானவற்றை அறிந்து கொள்ள நாணயங்கள் சான்றாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் ஐயே, மை கோல்டே - பிழையற்ற தமிழ் அறிவோம்! - 60

கொள்ளிட ஆற்றங் கரையோரங்களில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

எல்.கே. அத்வானி மருத்துவமனையில் அனுமதி!

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

தில்லி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல், இந்த வாரத்தில் மூன்றாவது சம்பவம்

SCROLL FOR NEXT