பாம்பன் சுவாமிகள் குருபூஜை!
பாம்பன் சுவாமிகள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த உன்னத துறவியாவார்.
பாம்பன் சுவாமிகள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த உன்னத துறவியாவார். முருகன்பால் அன்பு பூண்டு கவிகள் பல பாடி கனவிலும, நனவிலும் ஆறுமுகப்பெருமானை தரிசித்தவர். சுவாமிகளின் தமிழ் ஞானம் அளவிடற்கரியது. சுவாமிகள் உலகம் உய்ய பல அருள் நூல்களை அருளிச் செய்துள்ளார். சுவாமிகள் ஜீவசமாதியில் 27.5.16 அன்று குருபூசை நடைபெறுகின்றது.
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் 87 ஆம் ஆண்டு குருபூஜை விழா இணைய தளம் மூலமும் நேரடியாக ஒளிபரப்பாகிறது.
"சண்முக கவசம்', "பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம்' எனும் செய்யுளை பாடியருளினார். இந்த பாடல் முருகப்பெருமானுக்கு மிகவும் விருப்பமானதாகும். 1918 ஆம் ஆண்டு தமக்கு ஏற்பட்ட வெப்பு நோய் விலகும் பொருட்டு "குமாரஸ்தவம்' எனும் அர்ச்சனை நூலை சுவாமிகள் இயற்றினார். அந்நோயும் நீங்கியது. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் சுவாமிகளுக்கு குரு பூஜை நடத்த, அருணகிரிநாதர் முக்தி பெற்ற தினம் உத்தராயணம் கழிந்த ஆறாவது பெüர்ணமி என்று உணர்ந்த சுவாமிகள், தமது சீடர்களுக்கு அதை அறிவித்து குரு பூஜை நடைபெறுமாறு செய்தார்.
Advertisement
Advertisement
1923 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் நாள், சுவாமிகள் சென்னை தம்பு செட்டி தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு குதிரை வண்டியின் சக்கரம் அடிகளாரது இடது காலின் மீது ஏற, கால் முறிந்தது. பின்னர், சென்னை பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுவாமிகள் படுக்கையில் படுத்த வண்ணம் முருகனை வேண்டினார். அப்போது முருகனின் வாகனமாகிய மயில்கள் வானத்தில் நடனம் புரிந்து வருவதை கண்டார். அப்பொழுது, முருகன் மயில்கள் மீது அமர்ந்து வரும் அரிய மயூரவாகன சேவனக்காட்சியை சுவாமிகள் கண்டு களித்தார். பெரிய மருத்துவரான ஆங்கிலேயர், இவரை சோதித்து இது தெய்வச் செயல் என்று அறிந்து அடிகளாரை வணங்கினார். இரு வாரங்களில் சுவாமிகள் முழுமையாக குணமடைந்தார். பின் சுவாமிகளின் வேண்டுகோளின்படி, அடியார்கள் ஒவ்வொரு ஆண்டும் "மயூர வாகன சேவன விழா'வை நடத்தி வருகின்றார்கள்.
1929 ஆம் ஆண்டு, ஒரு நாள் சுவாமிகள் தமது சீடர்களை அழைத்து, "நான் சமாதி அடைந்ததும் என்னுடைய உடலை திருவான்மியூரில் சேர்த்து விடுங்கள்' என்று கட்டளையிட்டார். அதன்படி, சுவாமிகள் பிராண வாயுவை உள்ளிழுத்து மகாசமாதியில் ஆழ்ந்தனர். இதை அறிந்த அனபர்கள் பலர் சுவாமிகளை வந்து தரிசித்து சென்றனர். 31-5-1929 அன்று சுவாமிகளின் திருமேனியை திருவான்மியூரில் சேர்த்து சமாதிக்கோவில் அமைத்தனர். இந்தச் சமாதிக்கோயில் மிகவும் மகிமை வாய்ந்தது. அங்கு சென்று வாழ்வில் வளம் பெற்றோர் பலர்.
திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த சமாதிகோயில்.
தொடர்புக்கு: 94449 58526.
- தெ. தனபால்