வெள்ளிமணி

உதகையில் ஒளிரும் உத்தமன்!

DIN

நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் அமைந்துள்ள, "எல்க் ஹில்' பாலதண்டாயுதபாணி திருக்கோயில் முருகப்பெருமான், மலேசியா பத்துமலை முருகன் தோற்றத்துடன் விளங்குபவர், திருமண வரம், குழந்தை வரம் அருள்பவர் என பல்வேறு பெருமைகள் கொண்டவர்.
உதகமண்டலத்தில் வாழ்ந்த இரண்டு முருக பக்தர்கள் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று பாத யாத்திரையாக பழனிக்குச் சென்று, பாலதண்டாயுதபாணியைத் தரிசித்து வருவதை, வழக்கமாக கொண்டிருந்தனர். இருவரும் முதுமை அடைந்த நிலையில், பழனி சென்று வர இயலாத நிலைமை ஏற்பட்டது. மனம் வருந்திய நிலையில், அன்றிரவு அவர்கள் இருவரின் கனவிலும் பழனியாண்டவர் தோன்றி, "மன வருத்தம் வேண்டாம், நான் உதகையில் உள்ள எல்க் ஹில் குன்றில் வசித்து வருகின்றேன்' என்று கூறினார். அதன்படி, அங்கு சென்ற இருவருக்கும் பழனி பாலதண்டாயுதபாணியாக முருகன் காட்சியருளினார். அதன்பின் அங்கே சிறிய ஆலயம் அமைத்து வழிபடலானார்கள்.
இதன் பெருமையை அறிந்த நிலம்பூர் மகாராஜா நிலதானம் வழங்கியதாக கர்ண பரம்பரை கதை கூறுகின்றது. இதன்பின் ஊர் மக்கள் ஆதரவோடு குன்றின் உச்சியில், அழகிய பாலதண்டாயுதபாணி சுவாமி ஆலயம் எழும்பியது.
மான்களின் வகைகளில் ஒன்றுக்கு எல்க் என்று பெயர். அவ்வகை மான்கள் இம்மலையில் வாழ்ந்தன. அந்த வகையில் இம்மலை எல்க்ஹில் என பெயர் பெற்றது. தமிழில் திருமான்குன்றம் என்று கூறப்படுகிறது. ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது எல்க் ஹில். அடர்த்தியான வனப் பகுதியில் அமைந்த எழிலான குன்றே எல்க் ஹில். வனத்துறையின் காப்புக்காடு பகுதியில், புகழ்பெற்ற ஊட்டி ரோஜா பூங்காவிற்கு அருகில், இக்கோயில் அமைந்துள்ளது. தியானம் செய்வோருக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் மிகவும் ஏற்ற தலமாக இது அமைந்துள்ளது.
மாதக்கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடியில் அம்பாளுக்கு சண்டி ஹோமம் என விழாக்களுக்குப் பஞ்சமில்லை. பங்குனி உத்திரத்தன்று, உதகை மகாமாரியம்மன் ஆலயத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள், எல்க்ஹில் முருகனுக்கு பால் காவடி எடுத்து தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்துகின்றனர். தைப்பூசத்தன்று வீதியுலா மற்றும் தேர்த்திருவிழா மிகவும் சிறப்புடன் நடத்தப்படுகின்றது.

அடர்த்தியான வனப்பகுதியில் அமைந்த எழிலான எல்க்ஹில் மலை அடிவாரத்தில், வலம்புரி விநாயகர் மற்றும் பாத விநாயகர், மலையுச்சியில் குகை விநாயகர் சந்நிதிகள் உள்ளன. மலையில் ஜலகண்டேஸ்வரர், ஜலகண்டேஸ்வரி, அஷ்டபுஜ துர்க்கை, சப்த கன்னியர்கள், நவக்கிரகம், சொர்ண ஆகர்ஷன பைரவர் ஆகிய சந்நிதிகளும் அமைந்துள்ளன. இவ்வாலயம், வடமேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது,
மலையேற 108 படிகள் 6 மண்டபங்கள் அமைந்துள்ளன. மலையேறியதும், மகாமண்டபம், கருவறை மண்டபம் காட்சியளிக்கின்றன. அதில் சுமார் மூன்றடி உயர பாலதண்டாயுதபாணி தண்டம் தாங்கி, நின்ற கோலத்தில் அழகு மிளிரக் காட்சியளிக்கின்றார். தலமரம், செண்பகமரம், தலத்தீர்த்தம் எல்க்ஹில் தீர்த்தம் ஆகும்.
இத்தலம், திருமண வரம், குழந்தை வரம் மற்றும் ஞானம் அருளும் தலமாகப் போற்றப்படுகின்றது. காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்து மகிழலாம். இந்து சமய அறநிலையத்துறை, இக்கோயிலை நிர்வாகம் செய்து வருகின்றது.
நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் ரயில் நிலையத்தில் இருந்தும் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தும் சுமார் 2 கி.மீ. தொலைவில், எல்க்ஹில் மலைமுருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. ஊட்டி ரோஜாப் பூங்காவிற்கு அருகே அரை கி.மீ. தொலைவில், இக்கோயில் அமைந்துள்ளது.

மலேசிய நாட்டின் பெருமைகளுள் ஒன்றாகத் திகழ்வது, பத்துமலை முருகன் சிலை. இதே பாணியில் 40 அடி உயர முருகன் சிலை, மலையுச்சியில் தங்க நிற வண்ணத்தில் கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றது. இக்கோயில் திருப்பணிகள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவு பெற்று குடமுழுக்கு 2011- ஆம் ஆண்டில் நடந்ததை குறிக்கும் விதமாக, 40 அடி உயர சிலை எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவே தமிழகத்தில் எழுப்பப்பட்ட முதலாவது மலேசிய முருகன் வடிவிலான 40 அடி உயர சிலையாகும்.

- பனையபுரம் அதியமான்


 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாமதமாகும் புதை சாக்கடைப் பணி

கல்லூரி மாணவா்களுக்கு வரலாற்றுச் சுவடுகள் பயிற்சி வகுப்பு தொடக்கம்

சா்வதேச அவசர சிகிச்சை தின நிகழ்ச்சி

பான் - ஆதார் இணைக்கவில்லையா? வருமான வரித்துறை எச்சரிக்கை!

காஞ்சிபுரத்தில் சேவாபாரதி அமைப்பின் சாா்பில் உணவு, தங்குமிடத்துடன் இலவச சுயதொழில் பயிற்சி

SCROLL FOR NEXT