வெள்ளிமணி

கார்த்திகையில் கார்த்திகை

இலக்கியமேகம் ஸ்ரீநிவாஸன்

"கார்த்திகை மாதத்துக்குச் சமமான மாதம் இல்லை. க்ருத யுகத்துக்குச் சமமான யுகமும் இல்லை. வேதத்துக்குச் சமமான சாத்திரம் இல்லை. கங்கைக்குச் சமமான தீர்த்தம் இல்லை' என்கிறது கந்தபுராணம்.

கார்த்திகை முதல் நாளில் கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத்  தொடங்குவர்.  48 நாள்கள் விரதம் இருக்கக் கூடிய மாதம் கார்த்திகை. தீய குணங்களை விரதங்கள் மூலம் குறைத்து நிறைவாக மனிதன் தன்னுள் இருக்கும் இறைசக்தியை உணர்வதுதான் ஐயப்ப விரதம். 

அத்வைத நிலையை பெறுவதுதான் சபரிமலைப் பயணம்.  18 படிகள் ஏறியவுடன்  "தத்வமஸி', "நீதான் அது'  என்னும் வேத வாக்கியத்தை கொடிமரத்தருகில் பொறித்து வைத்திருக்கின்றனர்.  நமது பொறிபுலன்களை அடக்கி,  இறையாக காணும் புனித பயணத்தின் தொடக்கம்தான் கார்த்திகை.  

இருள் சூழ்ந்த அதிகாலையில் கிராமப்புறங்களில் நட்சத்திரங்களை கொண்டு பயணத்தைத் தொடர்வர். 

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான ஜோதிப் பிழம்பு சரவணப்பொய்கையில் ஆறு தாமரைகளில் (மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞா) ஆறு குழந்தைகளாகத் தவழ்ந்தது. அன்னை பராசக்தி சேர்த்து அணைக்கக் கந்தன் ஆனான் என்பது கந்தபுராணம். அவ்வாறு ஆறு தாமரைகளில் தவழ்ந்த ஆறுமுகனை ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். அவர்களின் பக்திக்கும், அன்புக்கும் இறைவன், ஆறு பேரையும் வானில் கார்த்திகை நட்சத்திரம் ஆக்கி இன்றும் ஒளிர செய்கின்றான்.  ஆறுமுக வள்ளலை வளர்த்த அவர்களை நினைவு கொள்ளும் வண்ணமாக கார்த்திகைத் திருநாளில் முருகனை வணங்கி மகிழ்கின்றோம். 

27 நட்சத்திரங்களில் விரதம் இருப்பதற்கென்ற நட்சத்திரங்கள் இரண்டு ஆகும். அவை கார்த்திகையும், திருவோணமும்தான்.

கார்த்திகை மாதம் பெüர்ணமியுடன் கூடிய திருக்கார்த்திகை சிறப்பானது. அந்நன்னாளில் தான் திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற "கார்த்திகை தீபம்' ஏற்றப்படுகிறது. 

பிரம்மனும், திருமாலும் தான்தான் பெரியவர் என்று வாதிட ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதியாக ஈசன் தோன்றினார்.  கல்வியாலும் செல்வத்தாலும் இறைவனைக் காண இயலாது என்று அறிந்து உணர்ந்த அவர்கள் திருவண்ணாமலையில் இறை காட்சி பெற்ற நன்னாள் திருக்கார்த்திகை ஆகும்.

தேவி உண்ணாமுலை தவமிருந்து ஈசனின் இடப்பாகத்தில் இடம் பெற்ற அற்புதத் திருநாள் இதுவாகும். எனவேதான் கோயிலில் இருந்த பஞ்சமூர்த்திகள் வெளியே வந்து காட்சி தந்த பின்னர் கோலாகலமாக அர்த்தநாரீஸ்வரர் பெருமான் ஆடிக் கொண்டு வெளியே வந்து காட்சி தருகின்றபோது, மலை மீது தீபம் ஏற்றப்படுகிறது.

இந்த நாளில்  சிவன் கோயில்களில் சொக்கப்பனை ஏற்றப்படுகிறது. இறைவன் ஜோதி வடிவானவன் என்பதனைக் காட்டும் நிகழ்வாக இது நடத்தப் பெறுகிறது. கார்த்திகை சோம வாரங்களில் (திங்கள்கிழமை)  சிவனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.   உலக நன்மைக்காக,  கிருத்திகா மண்டல வேதபாராயணங்களும் இம்மாதத்தில் நடத்தப்படுகின்றன.

விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் திருமணம் செய்ய நல்ல மாதம்.  தினசரி விடியற்காலையில் எழுந்து குளித்து,  மகாவிஷ்ணுவை துளசியால் வழிபாடு செய்வது சகல நலன்களையும் வழங்கும் என்பது வேதக் கருத்தாகும்.

இந்த மாதத்தில் வரும் ஏகாதசிக்கு "ரமா ஏகாதசி'  என்று பெயர்.  இதற்கு அடுத்த நாள் துவாதசியில் துளசிக்கும்,  நெல்லி மரத்துக்கும் திருமணம் செய்து வழிபாடு செய்வது மரபாகும். இதன்
மூலம் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். 

கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்வதன்மூலம் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது சாஸ்திரம். 

கார்த்திகை ஞாயிறு தொடங்கி,  12 வாரங்கள் ஞாயிறுதோறும் விரதமிருந்து சூரியனை வழிபாடு செய்தால் நவகிரகத் தோஷங்கள் நீங்கும்.  இந்த மாதத்தில் பகவத்கீதை படித்தல் விசேஷமாகும்.

இம்மாதத்தில் மெய்ப்பொருள் நாயனார், ஆனாய நாயனார், கணம்புல்ல நாயனார், மூர்த்தி நாயனார், சிறப்புலி நாயனார் அவதரித்து சிவனருள் பெற்றுள்ளனர்.  12 ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார், திருப்பாணாழ்வார், திருநட்சத்திரங்கள் கார்த்திகை மாதத்தில்தான் வருகின்றன.

கார்த்திகை மாத அமாவாசையன்று திருவிசைநல்லூரில் மஹான் ஸ்ரீதர ஐயவாளுக்காக கிணற்றில் கங்கை பொங்கும் அதிசயம் இன்றும் நடைபெறுகிறது. இத்தனை பெருமைகள் நிறைந்த கார்த்திகை மாதத்தில் நாமும் இறைவன் திருவருளைப் பெற்று நன்மைகளை அடைவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கச்சத்தீவு பிரச்னையில் மீனவர்களுக்கு காங்கிரஸ், திமுக அநீதி இழைப்பு: ஜி.கே. வாசன்

அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்!

கேஜரிவாலை பயங்கரவாதியை போல் நடத்துகிறார்கள்: பகவந்த் மான்

'ஜிஎஸ்டி' வரி அல்ல… வழிப்பறி! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

SCROLL FOR NEXT