ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள பாதுகாப்புத் துறை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஏவுகணை மாதிரி (கோப்புப் படம்). 
உலகம்

அணு ஆராய்ச்சித் திட்டங்களின் மறு ஆய்வையடுத்து: ஈரான் மீது புதிய தடைகள் விதித்தது அமெரிக்கா

ஈரான் மேற்கொண்டு வரும் அணு ஆராய்ச்சி, ஏவுகணை ஆராய்ச்சி திட்டங்களின் மறு ஆய்வையடுத்து, அந்த நாட்டின் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்தது.

DIN

ஈரான் மேற்கொண்டு வரும் அணு ஆராய்ச்சி, ஏவுகணை ஆராய்ச்சி திட்டங்களின் மறு ஆய்வையடுத்து, அந்த நாட்டின் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்தது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஸ்டூவர்ட் ஜோன்ஸ் புதன்கிழமை தெரிவித்ததாவது:
ஈரான் உடனான சர்வதேச ஒப்பந்தத்தின் அடிப்படையில் முந்தைய தடை உத்தரவுகளை மறு ஆய்வு செய்து அவற்றை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனாலும் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் வகையில் செயல்படும் ஈரானின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா தக்க விதத்தில் பதில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
சர்வதேச ஒப்பந்தத்தின் கீழ் ஈரானின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அணு ஆயுதம் செலுத்தும் திறன் கொண்ட ஏவுகணையை உருவாக்க ஈரான் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது. இதையடுத்து, ஈரானின் ஏவுகணை ஆராய்ச்சி தொடர்பாகப் புதிய தடைகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்புக் குழு தீர்மானத்தின் அடிப்படையில், ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள், ஏவுகணை ஆராய்ச்சிக்கு உதவிய ஈரானிய நபர், ஈரானுக்கு ஏவுகணைத் திறன் வழங்கிய சீன நிறுவனம் ஆகியவற்றின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகின்றன.
சிரியாவில் அல்-அஸாத் அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவது, பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாகச் செயல்படுவது, இராக், யேமன் போன்ற நாடுகளில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் ஆயுதப் புரட்சிக்கு உதவி வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபடுவதை அமெரிக்கா தொடர்ந்து உறுதியாக எதிர்க்கும்.
அந்த நாட்டில் மனித உரிமைகள் மீறல்கள் குறித்தும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அங்கு தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் தனி நபர்கள், அமைப்புகள் மீது, பொருளாதாரத் தடைகள் விதிக்கும் விஷயத்தில் அமெரிக்காவைப் பின்பற்றுமாறு நட்பு நாடுகளைக் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
ஈரான் கடும் கண்டனம்


 தங்களின் ஏவுகணை ஆராய்ச்சித் திட்டத்துக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்ததற்கு ஈரான் கடுமையான கண்டனம் தெரிவித்தது.
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் பெஹ்ராம் காசிமி இது தொடர்பாக தெரிவித்திருப்பதாவது: அணு சக்தி ஆராய்ச்சித் திட்டங்களில் சர்வதேச ஒப்பந்தத்துக்கு ஏற்ப ஈரான் செயல்பட்டு வருகிறது. ஆனால் தடை செய்யப்பட்டோர் பட்டியலில், சில தனி நபர்கள், நிறுவனங்கள் பெயரை அமெரிக்க அரசு இப்போது தன்னிச்சையாக சேர்த்துள்ளது. இது வல்லரசு நாடுகளுடன் ஏற்பட்ட உடன்படிக்கையின் நற்பயன்களைக் கெடுப்பதாக உள்ளது.
அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டம் ஈரானுக்கு எப்போதுமே இருந்ததில்லை. ஆனால் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் ஏவுகணைகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடுவது எங்களின் உரிமை. எங்களது ஏவுகணை ஆராய்ச்சித் திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வோம் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மது, கஞ்சா விற்றவா்கள் கைது

குழந்தைகள் அறிவியல் மாநாடு: தேனி மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தோ்வு

உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.51 லட்சம் கோடி: ராஜ்நாத் சிங்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஒகேனக்கல் வனச்சாலைகளில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT