உலகம்

பாகிஸ்தானில் 4 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

தலிபான் பயங்கரவாதிகள் நால்வருக்கு பாகிஸ்தான் ராணுவ விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது

DIN

தலிபான் பயங்கரவாதிகள் நால்வருக்கு பாகிஸ்தான் ராணுவ விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது.
பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த கைபர் பக்துன்குவா பழங்குடி மாகாணப் பகுதியில் பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பல்வேறு பயங்கரவாதச் செயல்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பயங்கரவாதிகள் புதன்கிழமை தூக்கிலிடப்பட்டனர். ராணுவத்தினரைத் தாக்கியது, பாதுகாப்பு படையினர் தாக்குதல்கள் நிகழ்த்தியது, அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்தது, மின்சாரம், தொலைத் தொடர்பு விநியோக மையங்களை அழித்தது, பள்ளிகள் மீது தாக்குதல் நிகழ்த்தி அழித்தது ஆகிய குற்றங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன.
பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, ரகசிய இடத்தில் ராணுவ விசாரணை நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணை முடிவில் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த முகமது, இப்ராஹிம், ரிஸ்வான் உல்லா, சர்தார் அலி, ஷேர் முகமது கான் ஆகிய 4 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள சிறையில் அவர்களின் மரண தண்டனை புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2014-ஆம் ஆண்டு பெஷாவர் நகரில் உள்ள ராணுவப் பள்ளியில் தலிபான் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நிகழ்த்தியதில் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர். இந்தக் கொடூரத் தாக்குதலையடுத்து, மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு பாகிஸ்தான் தாமாக விதித்தியிருந்த தடையை நீக்கிக் கொண்டது. அப்போது முதல், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
பயங்கரவாதிகளைப் பொருத்த வரையில், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு ராணுவ விசாரணை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு அமைக்கப்பட்ட அந்த சிறப்பு நீதிமன்றங்களின் கால அளவு கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. அவற்றின் செயல்பாடு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, இதுவரை 170-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், கொடுங் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
அந்த நீதிமன்றங்களும் அதன் விசாரணைகளும் மிக ரகசியமாக நடைபெறுகின்றன என்றும், இதுவரை 441 பேர் தூக்கிலிடப்பட்டதாகவும் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

திருப்பரங்குன்றம் சம்பவம்: சேலத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் டிச.13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

சாலை மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா் 58 போ் கைது

சிகிச்சைக்கு வந்த குழந்தையிடம் நகை திருடிய செவிலியா் கைது

SCROLL FOR NEXT