டாக்கா: பெண்கள் உரிமை சார்ந்த அமைப்புகளின் நீண்ட சட்டப் போராட்டத்தின் காரணமாக, வங்கதேச திருமணப் பதிவு விண்ணப்பத்தில் இருந்து சர்ச்சைக்குரிய வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள வங்கதேசத்தில் திருமணத்தை சட்டபூர்வமாகப் பதிவு செய்யும் விண்ணப்பத்தில், பெண்கள் தங்களது தற்போதைய திருமண நிலையைத் தெரியப்படுத்த, திருமணமாகாத பெண் என்னும் பொருள்படும் 'குமாரி' என்னும் வார்த்தை பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அந்த வார்த்தைக்கு கன்னித்தன்மை உடையவர் என்னும் பொருளும் உண்டு. கணவனை இழந்தவர் மற்றும் விவகாரத்தானவர் ஆகியன விண்ணப்பத்தின் மற்ற இரண்டு தேர்வுகளாகும்.
இந்நிலையில் இந்த வார்த்தைப் பயன்படானது பெண்களை அவமானப்படுத்துவதாகவும் பாகுபாடு காட்டுவதாகவும் அமைந்துள்ளது என்று அந்நாட்டில் உள்ள பெண்கள் உரிமை அமைப்புகள் தொடர்ந்து போராடி வந்தனர். இதுதொடர்பாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் 2014-ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது.
இத்தனை நாளாக நடைபெற்று வந்த அவ்வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது. அதன்படி வங்கதேச இளம்பெண்களுக்கான திருமண பதிவு விண்ணப்பத்தில் இனி 'குமாரி' என்னும் வார்தைக்குப் பதிலாக 'ஒபிபஹிதா' (திருமணமாகாத இளம்பெண்) என்னும் வார்த்தை பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு வார்த்தைகளில் எந்த மாற்றமும் இல்லை. அதேசமயம் மணமகன்களும் இனி தங்களது திருமண நிலையை விண்ணப்பத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்று தனியான தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வங்கதேச பெண்கள் உரிமை அமைப்புகள் பெரிதும் வரவேற்றுள்ளன.