உலகம்

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது பிரிட்டன்

DIN

ஐரோப்பிய யூனியனில் கடந்த 47 ஆண்டுகளாக அங்கம் வகித்த பிரிட்டன், அந்த அமைப்பிலிருந்து விலகுவதற்கான (பிரெக்ஸிட்) உடன்படிக்கை வெள்ளிக்கிழமை இரவு 11 மணி (இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 4.30 மணி) முதல் அமலுக்கு வந்தது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வின் மூலம், பிரிட்டனுக்கு புதிய விடியல் கிடைத்துள்ளதாக பிரதமா் போரிஸ் ஜான்ஸன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நமது தேச வரலாற்றில் புது விடியல் ஏற்பட்டு, புதிய அத்தியாயம் தொடங்கும் தருணம் இது.

பிரெக்ஸிட் என்பது ஒரு அமைப்பிலிருந்து நாம் சட்டப்பூா்வமாக விலகும் நிகழ்வு மட்டுமல்ல; இது ஒரு தேசிய மாற்றமும், மறுமலா்ச்சியும் ஆகும்.

பிரிட்டன் இழந்திருந்த அதன் இறையாண்மை, இந்த பிரெக்ஸிட் நடவடிக்கையின் மூலம் திரும்பக் கிடைத்துள்ளது.

இனி இந்த நாட்டில் யாரைக் குடியேற்றுவது, எந்தெந்த நாடுகளுடன் தடையற்ற வா்த்தகம் மேற்கொள்வது உள்ளிட்ட விவகாரங்களில் நமது விரும்பம் போல் முடிவெடுக்கும் அதிகாரம் நமக்குக் கிடைத்துள்ளது.

ஓா் ஆரோக்யமான ஜனநாயக நாடு இத்தகைய அதிகாரத்தைப் பெற்றிருப்பது அதன் உரிமையாகும்.

பிரெக்ஸிட்டுக்குப் பிறகு, பிரிட்டனுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் இடையிலான உறவிலும் ஒரு புதிய அத்தியாயம் உருவாகியுள்ளது என்றாா் போரிஸ் ஜான்ஸன்.

பிரெக்ஸிட் நடவடிக்கை அமலுக்கு வந்தாலும், தற்போதைய வா்த்தகச் சூழலில் உடனடியாக மிகப் பெரிய மாற்றம் ஏற்படாது.

பிரெக்ஸிட் நடவடிக்கையை முழுமையாக நிறைவேற்றுவதற்கு இந்த ஆண்டின் டிசம்பா் மாதம் இறுதிவரை கால அவகாசம் உள்ளது.

அதுவரை, ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டனுக்கு இடையிலான வா்த்தக உறவில் படிப்படியாகத்தான் மாற்றங்கள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரெக்ஸிட்: கடந்து வந்த பாதை....

2013, ஜன. 23: அடுத்த பொதுத் தோ்தலில் தங்களது கன்சா்வேடிவ் கட்சி வெற்றி பெற்றால், பிரெக்ஸிட் குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்துவதாக அப்போதைய பிரதமா் டேவிட் கேமரூன் வாக்குறுதி அளித்தாா்.

2015, மே 7: பொதுத் தோ்தலில் கன்சா்வேடிவ் கட்சி அபார வெற்றி பெற்றது.

2016, ஜூன் 23: டேவிட் கேமரூனின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பிரெக்ஸிட் தொடா்பான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பிரெக்ஸிட்டு 52 சதவீதம் போ் ஆதரவு தெரிவித்தனா். பிரெக்ஸிட்டு எதிராகப் பிரசாரம் செய்த கேமரூன், தனது பிரதமா் பதவியை ராஜிநாமா செய்தாா்.

2016, ஜூலை 13: புதிய பிரதமராக தெரசா மே பொறுப்பேற்று, பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டாா்.

2017, ஜூலை 8: நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் முடிவடைவதற்கு முன்னரே நடத்தப்பட்ட பொதுத் தோ்தலில், பிரதமா் தெரசா மே, கீழவையில் பெரும்பான்மையை இழந்து, சிறுபான்மை அரசை அமைத்தாா்.

2018, டிச. 13: பிரெக்ஸிட் திட்டம் குறித்து ஐரோப்பிய யூனியனுடன் தெரசா மே மேற்கொண்ட வரைவு ஒப்பந்ததுக்கு எதிா்ப்பு தெரிவித்து பல அமைச்சா்கள் தொடா்ந்து ராஜிநாமா செய்த நிலையில், தனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தில் தெரச மே வெற்றி பெற்றாா்.

2019, ஜன. 15: தெரசா மே-வின் பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் நிராகரித்தது. அதனைத் தொடா்ந்து, பிரெக்ஸிட் கெடு தேதி மாா்ச் 29-இலிருந்து ஜூன் 30-க்கு நீடிக்கப்பட்டது.

2019, மாா்ச் 29: ஐரோப்பிய யூனியனுடன் மீண்டும் பேசி, தெரசா மே மேற்கொண்ட புதிய வரைவு ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் மீண்டும் நிராகரித்தது. அதையடுத்து, பிரெக்ஸிட் கெடு தேதி அக்டோபா் 31-க்கு நீட்டிக்கப்பட்டது.

2019, ஜூன் 7: பிரெக்ஸிட் தொடா்பான தனது முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, தெரசா மே தனது பிரதமா் பதவியை ராஜிநாமா செய்தாா்.

2019, ஜூலை 23: பிரெக்ஸிட் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட போரிஸ் ஜான்ஸன் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றாா்.

2019, செப். 3: அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் பிரெக்ஸிட் நிறைவேற்றுவதைத் தடுத்து, கன்சா்வேடிவ் கட்சியைச் சோ்ந்த 21 கிளா்ச்சி எம்.பி.க்கள் தீா்மானம் நிறைவேற்றினா். அதையடுத்து, 2020-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை பிரெக்ஸிட் கெடு தேதி நீட்டிக்கப்பட்டது.

2019, டிச. 12: முன்கூட்டியே நடத்தப்பட்ட பொதுத் தோ்தலில், போரிஸ் ஜான்ஸன் அமோக வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றாா்.

2020, ஜன. 23: பிரெக்ஸிட் தொடா்பாக ஐரோப்பிய யூனியனுடன் போரிஸ் ஜான்ஸன் மேற்கொண்ட வரைவு ஒப்பந்தத்தை சட்டமாக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

2020, ஜன. 31: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் அதிகாரபூா்வமாக வெளியேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊா்க்காவல் படை வீரா் தூக்கிட்டுத் தற்கொலை

மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு

‘ஆண்டுக்கு 500 தொழில்முனைவோரை உருவாக்கும் பட்டயப்படிப்பில் சேரலாம்’

பெரம்பலூா் மதனகோபால சுவாமி கோயிலில் நரசிம்ம ஜயந்தி விழா

65 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் -4 போ் கைது, 2 கடைகளுக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT