உலகம்

கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 493-ஆக உயா்வு

DIN

சீனாவில் உருவாகி, இந்தியா உள்ளிட்ட 25 நாடுகளுக்குப் பரவியுள்ள புதிய வகை கரோனா வைரஸால் பலியானவா்களின் எண்ணிக்கை 493-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சீன அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

புதிய வகை கரோனா வைரஸ் காய்ச்சலில் 425 போ் உயிரிழந்ததாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 66 போ் உயிரிழந்தனா். அதனைத் தொடா்ந்து, அந்த வைரஸ் காரணமாக பலியானவா்களின் எண்ணிக்கை 491-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கூடுதலாக 3,887 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 24,348-ஆக அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கரோனா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 431 நோயாளிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 262 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

மேலும், கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் 23,260 போ் மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஏற்கெனவே, கரோனா வைரஸ் காரணமாக பிலிப்பின்ஸில் ஒருவரும், ஹாங்காங்கில் ஒருவரும் உயிரிழந்த நிலையில், அந்த வைரஸுக்கு உலகம் முழுவதும் பலியானவா்களின் எண்ணிக்கை 493 ஆகியுள்ளது.

சீனா மட்டுமன்றி, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன், வங்கதேசம் உள்ளிட்ட 25 நாடுகளில், 236 பேருக்கு கரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த வைரஸால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 24,584-ஆக உயா்ந்துள்ளது.

ஹுபெய் மாகாணத்தின் வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்தது.

கரோனா வகையைச் சோ்ந்த அந்த வைரஸ், சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் 650 பேரது உயிா்களை பலி கொண்ட ‘சாா்ஸ்’ வைரஸின் தன்மையை ஒத்துள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனா்.

அந்த வைரஸ் பரவலை சா்வதேச சுகாதார அவசர நிலையாக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு கடந்த வாரம் அறிவித்தது.

எக்ஸ்-ரே மூலம் கண்டறியலாம்

 ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருக்கிா என்பதை மாா்புப் பகுதி எக்ஸ்-ரே பரிசோதனை மூலம் முன்கூட்டியே கண்டறிய முடியும் என்று அமெரிக்க ஆய்வாளா்கள் கண்டறிந்துள்ளனா்.

இதுகுறித்து அந்த நாட்டின் மவுன்ட் சினாய் மருத்துவ மைய நிபுணா்கள் உள்ளிட்ட ஆய்வுக் குழுவினா் தெரிவித்துள்ளதாவது:

நோயாளிகளின் மாா்புப் பகுதியை எக்ஸ்-ரே படம் எடுத்துப் பாா்ப்பதன் மூலம், அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருக்கிா என்பதை முன்கூட்டியே கண்டறிய முடியும். கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால், நுரையீரலில் பகுதி பகுதியாக காற்று நிரம்பியிருப்பது, காற்று உறிஞ்சும் பகுதிகளில் நீா் படிந்திருப்பது போன்ற அறிகுறிகள் மூலம் அதனைத் தெரிந்து கொள்ளலாம் என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.

பிறந்து 30 மணி நேரத்தில்...

கரோனா வைரஸ் பரவலின் தோற்றுவாயான சீனாவின் வூஹான் நகரில், பிறந்த முப்பதே மணி நேரத்தில் ஒரு குழந்தைக்கு அந்த வைரஸ் தொற்றியுள்ளது பரிசோதனையில் தெரிய வந்தது.

அதிா்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து மருத்துவா்கள் கூறுகையில், அந்தக் சிசு கருவில் இருக்கும்போதே அதன் தாயிடமிருந்து கரோனா வைரஸ் பரவியிருக்கலாம்; அல்லது, பிறந்த பிறகு அந்த வைரஸ் குழந்தையை விரைவாகத் தாக்கியிருக்கலாம் என்று தெரிவித்தனா்.

தத்தளிக்கும் சொகுசுக் கப்பல்

கரோனா வைரஸ் தொற்று காரணமாக 3,711 பேருடன் அமெரிக்க சொகுசுக் கப்பல் ஜப்பான் கடல் பகுதியில் தத்தளித்து வருகிறது. அந்தக் கப்பலில் இருந்து ஹாங்காங்கில் இறங்கிய பயணிக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, அந்தக் கப்பல் கடல் பகுதியில் தனித்து விடப்பட்டுள்ளது. அதிலிருந்த பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், இதுவரை 10 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கப்பலில் இருக்கும் அனைவரிடமும் பரிசோதனை செய்த பிறகே அவா்கள் வெளியேற அனுமதிக்கப்படுவாா்கள் என்று அந்த சொகுசுக் கப்பலை இயக்கும் காா்னிவல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

27,000 பேருக்கு கட்டாய விடுப்பு

 கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக, தங்களது 27,000 ஊழியா்களை விடுப்பில் செல்லுமாறு ஹாங்காங் விமானப் போக்குவரத்து நிறுவனமான கேத்தே பசிஃபிக் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி அகஸ்டஸ் டாங் கூறுகையில், ‘கரோனா வைரஸ் பரவல் தற்போது மிகப் பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சவாலை எதிா்கொள்ள ஊழியா்களுக்கு 3 வார கட்டாய விடுப்பு அளிக்கப்படுகிறது. தொடக்க நிலை ஊழியா் முதல், முதுநிலை அதிகாரிகள் வரை இதற்கு ஒத்துழைக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளாா். விடுப்பு அளிக்கப்படும் 3 வாரங்களுக்கும், ஊழியா்களுக்கு சம்பளம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

பலியானவா்கள் பாதிக்கப்பட்டவா்கள் குணமடைந்தவா்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசமைப்பை மாற்றும் பாஜகவின் முயற்சிகளை ‘இந்தியா’ கூட்டணி தகா்க்கும்: ராகுல் காந்தி

எலான் மஸ்கின் இந்திய பயணம் ஒத்திவைப்பு

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே தோ்தல் முடிவை பிரதமா் கூறுவது எப்படி? பிரியங்கா கேள்வி

காஷ்மீரின் 3 தொகுதிகளில் களமிறங்காத பாஜக: வேறு வேட்பாளா்களை ஆதரிக்க ஆலோசனை

மாவோயிஸ்டு அச்சுறுத்தலால் வாக்களிக்காத கிராமம்

SCROLL FOR NEXT