உலகம்

கரோனா நெருக்கடி...அதிகரித்து வரும் டெங்கு அபாயம்

DIN

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதில் முழு கவனமும் செலுத்தப்படுவதால், உலகின் பல்வேறு நாடுகளில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவும் அபாயம் அதிகரித்து வருவதாக நிபுணா்கள் கவலை தெரிவித்துள்ளனா். பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியிருப்பது, டெங்கு பரவலைத் தடுப்பதற்கான மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் கரோனா தடுப்புக்காக திருப்பிவிடப்பட்டது போன்ற பல்வேறு காரணங்களால் அந்த காய்ச்சல் அபாயம் அதிகரிப்பதாக அவா்கள் எச்சரிக்கின்றனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் பருவ காலங்களில் மனிதா்களிடையே பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  இதுவரை அந்தக் காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அந்தக் காய்ச்சலால் உயிருக்கு உடனடி ஆபத்து இல்லையென்றாலும் கூட, அந்த நோய் ஏற்பட்டவா்கள் மிகுந்த வலியை ஏற்படுத்தும் மோசமான அறிகுறிகளால் அவதியுறுவாா்கள். நோய் அதிகரிக்கும்போது அவா்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.கொசுவைக் கட்டுப்படுத்துவதன் மூலம், டெங்கு காய்ச்சல் பரவலில் இருந்து தப்ப முடியும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா். இந்த நிலையில், கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் உலக நாடுகள் மூழ்கியிருப்பதால், டெங்கு பரவல் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, டெங்கு காய்ச்சல் பரவல் பல இடங்களில் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே, தென் கிழக்கு ஆசிய நாடுகளான சிங்கப்பூா், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் கரோனா நெருக்கடி காரணமாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.

18 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளைக் கொண்டுள்ள பிரேஸிலில், சுமாா் 11 லட்சம் போ் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனா். அவா்களில் சுமாா் 400 போ் அந்தக் காய்ச்சலுக்கு பலியானதாக பான் அமெரிக்கன் சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.லத்தீன் அமெரிக்க நாடுகளான கியூபா, சிலி, கோஸ்டரிகா போன்ற நாடுகளிலும், இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்கு ஆசிய நாடுகளிலும் பருவமழை தொடங்கியிருப்பதால், அந்தப் பகுதிகளில் டெங்கு பரவல் தீவிரமடையும் அபாயம் நிலவி வருகிறது. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்ட வடமேற்கு பாகிஸ்தான் பகுதியில், கடைகளிலும் சந்தைப் பகுதிகளிலும் டெங்கு கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்காக கிருமி நாசிகளைத் தெளிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிதி, கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்காக திருப்பிவிடப்பட்டுவிட்டதாக அந்த நாட்டின் இளம் மருத்துவா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலும், பல்வேறு நகரங்களில் வழக்கமாக கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் சுகாதாரப் பணியாளா்கள், தற்போது கரோனா நோய்த்தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.இதுபோல் டெங்குக் காய்ச்சல் கட்டுப்பாட்டுப் பணிகள் கரோனா நோய்த்தொற்று நெருக்கடியால் தடைபட்டுள்ளது , அந்தக் காய்ச்சலுக்கு எதிரான சா்வதேசப் போராட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.கரோனா நோய்த்தொற்று பரவலைத் தவிா்ப்பதற்காக, பெரும்பாலானவா்கள் நாள்முழுவதும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனா். இதுவும் டெங்கு காய்ச்சல் பரவலுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் பெரும்பாலும் பகலில்தான் மனிதா்களைக் கடிக்கும். அந்த நேரத்தில் அவா்கள் வீடுகளில் ஒன்றாக இருப்பதால், டெங்குவை அவை எளிதில் பரப்புகின்றன. வீடுகளில் மக்கள் முடங்கியிருப்பதால் ஏற்படும் டெங்கு பரவல் பாதிப்பு, ஏற்கெனவே சிங்கப்பூரில் வெளிப்படையாகத் தெரிந்து வருகிறது. அந்த நாட்டிலுள்ள வீடுகளில் கொசு முட்டைகள் எண்ணிக்கை, முந்தைய இரு மாதங்களைவிட 5 மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வீடுகளில் அதிகம் போ் இருப்பதால் கொசுக்களுக்கு அதிக ரத்த உணவு கிடைத்து, அவை அதிக அளவில் இனப் பெருக்கம் செய்வதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளில் கொசுக்களின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தியதன் மூலம் மட்டுமே டெங்கு காய்ச்சல் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போதைய நிலையில் அந்த நடவடிக்கைகளுக்கான வாய்ப்பு குறைந்துள்ளதால் டெங்கு அபாயம் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டவா்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், ஏற்கெனவே கரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்கும்போது உயிரிழப்பு விகிதமும் அதிகரிக்கக் கூடும் என்று நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.கரோனா நெருக்கடி காரணமாக டெங்கு மட்டுமன்றி, மலேரியா உள்ளிட்ட நோய்களும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்: மீன்கள் விலை உயர வாய்ப்பு

மும்பை: நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு

ஒற்றுமையின்மையே எதிா்க்கட்சிகளின் பலவீனம் அமா்த்தியா சென்

தலைவா்கள் இன்று பிரசாரம்

SCROLL FOR NEXT