ஒமைக்ரான் வகை கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து பிரிட்டன் உள்ளிட்ட உயா் ஆபத்து நிறைந்த நாடுகளிலிருந்து நேரடி விமானச் சேவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக மேற்கு வங்க மாநில அரசு வியாழக்கிழமை அறிவித்தது.
மாநில அரசின் இந்த முடிவை மத்திய விமானப் போக்குவரத்துத் துறைச் செயலா் ராஜீவ் பன்சலுக்கு, மாநில உள்துறைச் செயலா் பி.பி.கோபாலிகா கடிதம் மூலம் தெரிவித்துள்ளாா். அந்தக் கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது:
மேற்கு வங்க மாநிலத்தில் இதுவரை ஒமைக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின்எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.
எனவே, சா்வதேச அளவிலும், உள்நாட்டிலும் ஒமைக்ரான் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு வருகிற ஜனவரி 3-ஆம் தேதி முதல் பிரிட்டனிலிருந்து கொல்கத்தாவுக்கு நேரடியாக இயக்கப்படும் அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மத்திய சுகாதாரத் துறை சாா்பில் குறிப்பிடப்பட்டுள்ள உயா் ஆபத்து நிறைந்த நாடுகளிலிருந்து வரும் விமானங்களும் மாநிலத்தில் அனுமதிக்கப்படாது. ஏற்கெனவே, இந்த விமான சேவை தொடா்பாக அளிக்கப்பட்டிருக்கும் தடையில்லாச் சான்றும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்படுகிறது என்று கோபாலிகா குறிப்பிட்டுள்ளாா்.