பாகிஸ்தானில் பழைமைவாத முஸ்லிம்களால் கடந்த ஆண்டு சேதப்படுத்தப்பட்டு தீ வைக்கப்பட்ட பழைமையான ஹிந்து கோயில் சீரமைக்கப்பட்டுள்ளது. அதை அந்நாட்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி குல்சார் அகமது திறந்து வைத்தார்.
பாகிஸ்தானின் பக்துன்குவா மாகாணம், காரக் மாவட்டத்தில் தேரி கிராமத்தில் ஸ்ரீ பரம்ஹன்ஸ்ஜி மஹராஜ் கோயில் உள்ளது. இக்கோயிலை பழைமைவாத அமைப்பான ஜாமியத் உலேமா-ஏ-இஸ்லாம் ஃபசலைச் சேர்ந்த உள்ளூர் மத குருக்கள் தலைமையிலான கும்பல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சேதப்படுத்தி, தீவைத்தது.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அந்நாட்டு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி குல்சார் அகமது, அக்கோயிலை மறுநிர்மாணம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய இச்செயலை செய்தவர்களிடம் இருந்து கோயில் மறுநிர்மாணப் பணிக்கான பணத்தை வசூலிக்குமாறும் உத்தரவிட்டார். அதன்படி இக்கோயில் புதுப்பித்துக் கட்டப்பட்டது.
இந்நிலையில், மறுநிர்மாணம் செய்யப்பட்ட இக்கோயிலை தலைமை நீதிபதி குல்சார் அகமது திங்கள்கிழமை திறந்து வைத்தார். இக்கோயிலில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடவும், ஹிந்துக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் நடைபெற்ற விழாவில் அவர் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியது:
சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் எப்போதுமே நடவடிக்கை எடுத்து வந்துள்ளது. எதிர்காலத்திலும் உச்ச நீதிமன்றம் அதைச் செய்யும். பாகிஸ்தான் அரசியல்சாசனப்படி மற்ற மதங்கள் அனுபவிக்கும் உரிமைகளை ஹிந்துக்களும் அனுபவிக்கின்றனர்.
நாட்டின் சிறுபான்மை சமூகத்தினரின் மத உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்யும். மாற்று மதத்தவரின் வழிபாட்டுத் தலத்தை சேதப்படுத்தும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றார்.
விழாவில் பங்கேற்ற அவருக்கு பாகிஸ்தான் ஹிந்து கவுன்சில் அழைப்புவிடுத்திருந்தது. அவருக்கு ஒரு தலைப்பாகையும் குர்ஆன் புனித நூலும் பரிசாக வழங்கப்பட்டன. சிந்து, பலுசிஸ்தான் மாகாணங்களில் இருந்து ஏராளமான ஹிந்துக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ஸ்ரீ பரம்ஹன்ஸ்ஜி மஹராஜ் கோயிலை மறுநிர்மாணம் செய்ய தலைமை நீதிபதியும் உச்சநீதிமன்றமும் எடுத்த நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தான் ஹிந்து கவுன்சிலின் புரவலரும் தலைவருமான ரமேஷ்குமார் வாங்வானி நன்றி தெரிவித்தார்.
அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரான வாங்வானி, பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ளார். அவர் கூறுகையில், சேதப்படுத்தப்பட்ட மற்ற நான்கு வரலாற்றுக் கோயில்களையும் மறுநிர்மாணம் செய்ய இதேபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அது உலக அளவில் பாகிஸ்தானின் நற்பெயர் மேம்பட உதவும் என்றார்.
இக்கோயிலை சேதப்படுத்திய நபர்களிடம் இருந்து 1.94 லட்சம் அமெரிக்க டாலர்களை வசூலிக்குமாறு கைபர் பக்துன்குவா மாகாண அரசுக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. கோயிலை சேதப்படுத்தியதற்காக 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இஸ்லாமாபாதில் கோயில் கட்ட நிலம் ஒதுக்கீடு: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் முதல் ஹிந்து கோயில் மற்றும் சமுதாய மையத்தை அமைக்க அந்நாட்டின் தலைநகர் வளர்ச்சி ஆணையம் (சிடிஏ) கடந்த 2016-இல் அரை ஏக்கர் நிலத்தை ஒதுக்கி இருந்தது. கோயில் அமைப்பதற்கான பணிகளை ஹிந்துக்கள் தொடங்காததால் நில ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டதாக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் சிடிஏ திங்கள்கிழமை தெரிவித்தது. இதற்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, கோயில் நில ஒதுக்கீட்டை உறுதி செய்வதாக சிடிஏசெவ்வாய்க்கிழமை தெரிவித்தது.