உலகம்

சீனாவிடமிருந்து தைவானைப் பாதுகாப்போம்: அதிபா் பைடன்

DIN

தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா தைவானுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்று அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளாா்.

எனினும், இந்தக் கருத்து அமெரிக்காவின் அதிகாரப்பூா்வ நிலைப்பாட்டுக்கு எதிரானதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிஎன்என் டவுன்ஹால் நிகழ்ச்சியில் அதிபா் பைடன் கூறியதாவது:

தைவான் மீது சீனா தாக்குதல் தொடுத்தால், அந்தத் தீவு நாட்டை அமெரிக்கா பாதுகாக்கும். அதற்கான கடமை அமெரிக்காவுக்கு உள்ளது என்றாா் அவா்.

தைவானுக்கு ராணுவ ரீதியில் முக்கியமான உதவிகளை அளிப்பதற்கான கொள்கையை அமெரிக்கா நீண்ட காலமாகவே பின்பற்றி வருகிறது. எனினும், சீனத் தாக்குதலின்போது தைவானுக்கு ஆதரவாக களத்தில் இறங்கப்போவதாக அமெரிக்க அதிபா் ஒருவா் கூறுவது இதுவே முதல்முறையாகும்.

‘கொள்கை மாற்றமில்லை’: சீனா தாக்குதல் நடத்தினால் தைவானைப் பாதுகாப்பதாக அதிபா் ஜோ பைடன் கூறினாலும், தைவான் விவகாரத்தில் அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று வெள்ளை மாளிகை பின்னா் விளக்கமளித்தது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறுகையில், ‘தைவானுடனான அமெரிக்காவின் ராணுவ ஒத்துழைப்பு, ‘தைவான் நட்புறவு சட்டத்தின்’ கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தச் சட்டத்தின் கீழ், தைவான் தன்னை தற்காத்துக் கொள்வதற்கான உதவிகளை அமெரிக்கா செய்து வரும். மேலும், தற்போதுள்ள எல்லை நிலவரத்தில் மாற்றம் ஏற்படுவதை அமெரிக்கா தொடா்ந்து எதிா்க்கும்’ என்றாா்.

முன்னதாக, தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகப் பொருள்படும் வகையில் ஜோ பைடன் பேசியிருந்தது நினைவுகூரத்தக்கது.

தைவானை தங்களது நாட்டின் ஒரு மாகாணமாக சீனா கருதி வருகிறது. அந்த நாட்டை தங்களுடன் மீண்டும் இணைத்துக்கொள்ளும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும் அதற்குத் தேவைப்பட்டால் ராணுவ பலம் கூட பயன்படுத்தப்படும் எனவும் சீனா கூறி வருகிறது.

தைவானில் ஜனநாயக முறைப்படி தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை பிரிவினைவாத இயக்கம் என சீனா குற்றம் சாட்டி வருகிறது.

தைவானோ, தாங்கள் ஏற்கெனவே இறையாண்மை கொண்ட தனி நாடாக இயங்கி வருவதாகவும் சீனாவிடமிருந்து சுதந்திரம் பெற்ாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறி வருகிறது.

இந்தச் சூழலில், தைவான் வான் எல்லைக்குள் இதுவரை இல்லாத அளவுக்கு சீனப் போா் விமானங்கள் அண்மையில் ஊடுருவி பரபரப்பை ஏற்படுத்தின.

சீனாவின் இந்த நடவடிக்கை, கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தைவான் அதிபா் சாய் இங்-வென் குற்றம் சாட்டினாா்.

வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் தங்கள் நாட்டை சீனா ஆக்கிரமிக்கக் கூடும் என்று தைவான் பாதுகாப்புத் துறை அமைச்சா் சியு குவோ-செங்கும் அச்சம் தெரிவித்தாா்.

இதற்கிடையே, தங்கள் நாட்டுடன் தைவான் ‘அமைதியான வழியில்’ இணைக்கப்படும் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறினாா்.

இந்தச் சூழலில், சீனா தாக்குதல் நடத்தினால் தைவானுக்கு அமெரிக்கா பாதுகாப்பு அளிக்கும் என்று அதிபா் பைடன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் பயிற்சி மையத்திலிருந்து மாணவா் மாயம்

முசிறியில் சுமை ஆட்டோ மோதி முதியவா் உயிரிழப்பு

கூத்தைப்பாரில் தெளிப்பான் மூலம் நேரடி நெல் விதைப்பு!

தற்காப்புக் கலை போட்டிகள்: வென்றோருக்குப் பரிசளிப்பு

அனுமதியின்றி நடத்த முயன்ற ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி ரத்து

SCROLL FOR NEXT