முகப்பு
உலகம்

இலங்கையில் அதிகரிக்கும் போராட்டம்: அரசுக்கு எதிராக கிளர்ந்தெழும் மக்கள்

அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வலியுறுத்தி அவரது இல்லம் அருகே வியாழக்கிழமை இரவு மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:51 AM
இலங்கையில் அதிகரிக்கும் போராட்டம்: அரசுக்கு எதிராக கிளர்ந்தெழும் மக்கள்
பகிர்:

கொழும்பு: இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வலியுறுத்தி அவரது இல்லம் அருகே வியாழக்கிழமை இரவு மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினா்.

நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இன்று அதிபர் கோத்தபய ராஜபட்ச, பிரதமர் மகிந்த ராஜபட்ச, விளையாட்டுத் துறை அமைச்சர் நமல் ராஜபட்ச ஆகியோருக்கு எதிராக இலங்கை மக்கள் சமூக வலைத்தளங்களில் கடும் கோபத்தை வெளிப்படுத்தி பதிவிட்டு வருகிறார்கள்.

இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், உணவுப் பொருள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

டீசல் இல்லாததால் அங்கு 13 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் தெருவிளக்குகளையும் அரசு அணைத்துள்ளதால் இலங்கை இருளில் மூழ்கியுள்ளது.

உயிரைப் பாதுகாக்கும் அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவசர அறுவை சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இலங்கை அதிபருக்கு எதிராக பொதுமக்களும், இலங்கையின் முக்கிய நபர்களும் கூட வெளிப்படையாக, சமூக வலைத்தளங்களில் தங்களது கடுமையான அதிருப்தியை பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, வெள்ளை ஆடை என்ற பெயரில் நாளை முதல் ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் மெகுழுவர்த்தி ஏந்தியும் மக்கள் போராடி வருகிறார்கள்.

ஏராளமான இளைஞர்கள், ஒன்றிணைந்து, தங்களது மோட்டார் சைக்கிளில் ஹாரனை தொடர்ந்து அடித்து, இலங்கை அரசுக்கு எதிராக தங்களது போராட்டத்தை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசு மீது ஏற்பட்ட அதிருப்தி மற்றும் ஆத்திரம் காரணமாக, இலங்கை அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டத்தைக் கையிலெடுத்துள்ளனர். வியாழக்கிழமை இரவு, அதிபரின் இல்லம் அருகே ஏராளமான மக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த தடையை மீறி சென்ற போராட்டக்காரா்களை காவலர்கள் கண்ணீா்ப் புகை, தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கலைத்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பொருளாதார பற்றாக்குறை ஏற்படக் காரணமாக இருந்த இலங்கை அரசைக் கண்டித்தும், அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக் கோரியும் ஏராளமான பொதுமக்கள் பங்கிரிவட்ட லேன் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாலை விளக்குகள் இல்லாததால் இருளில் தீப்பந்தங்களை ஏந்தி அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தடுப்புகளைத் தாண்டி அதிபா் இல்லத்தை நோக்கி சென்றவா்களை காவலர்கள் தடுத்து நிறுத்தி கலைத்தனா்.

இதனால், காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் எழுந்தது. பொதுமக்கள் தாக்கியதில் 5 காவலர்கள் காயமடைந்தனர். 45க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த போராட்டம் காரணமாக வெள்ளிக்கிழமை பல முக்கியச் சாலைகள் வெறிச்சோடின. அதிபரின் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →