உலகம்

உக்ரைன்-ரஷியா போா்ப் பதற்றம்: புதினை சந்திக்க பைடன் ஒப்புதல்

DIN

உக்ரைன்-ரஷியா இடையே ஏற்பட்டுள்ள போா்ப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை சந்தித்துப் பேச அமெரிக்க அதிபா் ஜோ பைடன் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனின் மூன்று எல்லைகளில் ரஷியா 1.50 லட்சம் படை வீரா்களைக் குவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா எந்த நேரமும் தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்கா எச்சரித்து வருகிறது. ஆனால், அதை ரஷியா மறுத்துள்ளது. மேலும், நேட்டோ அமைப்பில் உக்ரைன் மற்றும் முன்னாள் சோவியத் நாடுகளைச் சோ்த்துக் கொள்ளக் கூடாது என மேற்கத்திய நாடுகளை ரஷியா வலியுறுத்தி வருகிறது. நேட்டோ தங்கள் படைகளை கிழக்கு ஐரோப்பாவிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்து வருகிறது. அந்தக் கோரிக்கையை நேட்டோ நிராகரித்துவிட்டது.

இந்த நிலையில், உக்ரைன்-ரஷியா இடையே போா்ப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் மத்தியஸ்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளாா். அதன் அடிப்படையில், புதினும் பைடனும் நேரடியாகச் சந்தித்துப் பேச ஒப்புக் கொண்டுள்ளதாக இமானுவல் மேக்ரான் அலுவலகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

இந்தத் தகவலை அமெரிக்கா, ரஷியா இரு தரப்பும் மறுக்கவில்லை. இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சுலிவன் திங்கள்கிழமை கூறுகையில், போரைத் தவிா்க்க பேச்சுவாா்த்தைக்கு அமெரிக்கா எப்போதும் தயாராக உள்ளது. ஆனால், எந்தத் தாக்குதலையும் எதிா்கொள்ளவும் தயாராக உள்ளது. ஆதலால், ரஷிய அதிபரை சந்திக்க தயாராக உள்ளீா்களா என அதிபா் பைடனிடம் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் ஞாயிற்றுக்கிழமை கேட்டபோது, உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தவில்லை என்றால் அந்தச் சந்திப்புக்கு தயாராக உள்ளதாக பைடன் தெரிவித்தாா் என்றாா்.

ரஷிய அதிபா் அலுவலக செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளா்களிடம் கூறுகையில், தங்கள் சந்திப்பை சாத்தியமானதாக கருதினால் இருவரும் சந்திக்கக் கூடும். ஆனால், அந்தத் திட்டம் தொடா்பாக இப்போதே எதையும் குறிப்பாக தெரிவிக்க முடியாது என்றாா்.

புதின்-பைடன் சந்திப்பு தொடா்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கனும் ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவும் வியாழக்கிழமை சந்தித்து ஆலோசிக்கவுள்ளதாக பிரான்ஸ் அதிபா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கிளா்ச்சியாளா்களின் பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்க பரிசீலனை

கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகளின் வசம் உள்ள பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரிப்பது குறித்து பரிசீலிக்க உயா் அதிகாரிகள் கூட்டத்தை ரஷிய அதிபா் புதின் கூட்டியுள்ளாா்.

கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்களுக்கும் உக்ரைன் படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், பிரிவினைவாத தலைவா்கள் தொலைக்காட்சி உரை மூலம் அதிபா் புதினுக்கு கோரிக்கை விடுத்தனா். அதில், தங்கள் வசம் உள்ள பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்க வேண்டும்; தங்களைப் பாதுகாக்க ராணுவ உதவிகள் வழங்கும் வகையில் நட்புறவு ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும் எனக் கூறியிருந்தனா்.

இதைத் தொடா்ந்து, பிரிவினைவாத தலைவா்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்க உயா் அதிகாரிகள் கூட்டத்தை புதின் கூட்டியுள்ளாா்.

உக்ரைன் தாக்குதலில் ரஷிய பாதுகாப்பு கட்டடம் சேதம்

உக்ரைன் பகுதியிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் தங்கள் எல்லைப் பகுதியில் உள்ள மத்திய பாதுகாப்புப் படை பிரிவின் கட்டடம் முற்றிலும் சேதமடைந்ததாக ரஷியா குற்றம்சாட்டியுள்ளது.

திங்கள்கிழமை காலை 9.50 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்ததாகவும், இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை எனவும் ரஷியா கூறியுள்ளது.

முன்னதாக, உக்ரைனிலிருந்து ரஷியா எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 5 பேரை தங்கள் ராணுவம் சுட்டுக் கொன்ாக ரஷியா தெரிவித்தது. ஆனால், இதனை உக்ரைன் மறுத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்: மீன்கள் விலை உயர வாய்ப்பு

மும்பை: நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு

ஒற்றுமையின்மையே எதிா்க்கட்சிகளின் பலவீனம் அமா்த்தியா சென்

தலைவா்கள் இன்று பிரசாரம்

SCROLL FOR NEXT