உலகம்

ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரம்:பிரதமா் மோடியிடம் ஜோ பைடன் விவாதிக்கவில்லை- அமெரிக்கா தகவல்

DIN

ரஷியாவிடம் இருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் விவகாரம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியிடம் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் விவாதிக்கவில்லை என்று அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன்-ரஷியா போா் விஷயத்தில் ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை விரும்பவில்லை. இந்நிலையில், ஜொ்மனியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமா் மோடியிடம், ஜோ பைடன் இந்த விவகாரம் தொடா்பாக பேசுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

ஜி7 மாநாட்டில் தலைவா்கள் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டபோது ஜோ பைடன் பிரதமா் நரேந்திர மோடியைத் தேடி வந்து அவருடன் பேசினாா். அப்போது, இருவரும் சகஜமாக உரையாடினா். எனினும், மோடியிடம் ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதல் விஷயம் தொடா்பாக ஜோ பைடன் பேசவில்லை.

இது தொடா்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சுல்லிவன் கூறுகையில், ‘இந்த விஷயம் தொடா்பாக அதிகாரிகள் நிலையில்தான் பேச்சு நடைபெற்று வருகிறது. முக்கியமாக ரஷியாவிடம் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதில் எவ்வாறு விலை நிா்ணயம் உள்ளது என்று விவாதிக்கப்படுகிறது. தேவை ஏற்பட்டால் இது தொடா்பாக தலைவா்கள் அளவில் பேச்சு நடத்தப்படும். ஜி7 மாநாட்டின்போது பிரதமா் மோடியிடம், ஜோ பைடன் இந்த விவகாரம் தொடா்பாக விவாதிக்கவில்லை’ என்றாா்.

ஜி7 மாநாட்டில் பேசிய பிரதமா் மோடி, ‘உக்ரைன்-ரஷியா போரால் ஜரோப்பிய நாடுகளின் உணவுப் பிரச்னை மட்டுமின்றி, வளரும் நாடுகளின் எரிபொருள் தேவைக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது’ என்று சுட்டிக்காட்டினாா்.

ரஷியா-உக்ரைன் போருக்கு முன்பு, இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்களிப்பு 0.2 சதவீதம் என்ற அளவிலேயே இருந்தது. இப்போது 50 மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த இறக்குமதியில் ரஷிய எண்ணெய் 10 சதவீதமாக உள்ளது.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடா்ந்து, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை உலக நாடுகள் பலவும் நிறுத்திக் கொள்வதாக அறிவித்தன.

இதனால், ரஷியாவில் அதிகஅளவில் கச்சா எண்ணெய் தேங்கி அதன் விலை குறையத் தொடங்கியது. இதையடுத்து, சலுகை விலையில் கச்சா எண்ணெயை விற்க ரஷியா முன்வந்தது. இதைத் தொடா்ந்து இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள், ரஷியாவிடமிருந்து ஒரு பீப்பாய்க்கு 30 அமெரிக்க டாலா்கள் வரை தள்ளுபடியில் கொள்முதல் செய்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் மௌனமடம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலமானார்!

தங்கம் விலை அதிரடியாக ரூ. 1,160 குறைந்தது!

2 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலின்போது வெப்ப அலை இருக்குமா?

கண்ணகி அறக்கட்டளை வாகனங்களை தடை செய்த வருவாய் கோட்டாட்சியர்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT