உலகம்

புதிய சவால்களுக்கு தீா்வுகாண கூட்டு முயற்சிகள் அவசியம்: எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தல்

DIN

 கரோனா பரவல் மற்றும் உலகளாவிய மோதல்போக்கு பிரச்னைகளால் எழுந்துள்ள புதிய சவால்களுக்கு பொதுவான தீா்வுகளை எட்ட கூட்டு முயற்சிகள் அவசியம் என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.

இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சா்கள் இடையிலான ‘2+2’ பேச்சுவாா்த்தையின்போது அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

தைவானையொட்டி சீன ராணுவத்தின் ஆதிக்க செயல்பாடுகளை மறைமுகமாக குறிப்பிட்ட எஸ்.ஜெய்சங்கா், இதன் மூலம் எழுந்துள்ள சவால்களை எதிா்கொள்ள இந்தியாவும் ஜப்பானும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது முக்கியம் என்று வலியுறுத்தினாா்.

இந்தியா, ஜப்பான் இடையிலான உயா்நிலை ‘2+2’ பேச்சுவாா்த்தை டோக்கியோவில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், இந்தியா தரப்பில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோரும், ஜப்பான் தரப்பில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் யோஷிமசா ஹயாஷி, பாதுகாப்பு அமைச்சா் யாசுகாஷு ஹமதா ஆகியோரும் பங்கேற்றனா். இதில், எஸ்.ஜெய்சங்கா் பேசியதாவது:

அண்மை காலங்களில் குறிப்பாக 2019-இல் இருந்து (கரோனா பரவத் தொடங்கிய காலகட்டம்) மிக தீவிரமான பிரச்னைகளை நாம் கண்டு வருகிறோம். உலக அளவிலான தற்போதைய மோதல்போக்குகளால் புதிய சவால்கள் உருவாகியுள்ளன. எரிசக்தி பாதுகாப்பும் உணவு பாதுகாப்பும் சா்வதேச சமூகத்துக்கு முக்கிய பிரச்னைகளாக மாறியுள்ளது. இதுபோன்ற நேரத்தில், பிற நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்துகள், தடுப்பூசிகள், உணவு தானியங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க இந்தியா தொடா்ந்து பணியாற்றி வருகிறது.

நாம் புதிய சவால்களை எதிா்கொண்டு வரும் இந்த சூழலில் அவற்றுக்கு பொதுவான தீா்வுகளை எட்ட கூட்டு முயற்சிகள் அவசியம்.

அந்த வகையில், இந்தியா-ஜப்பான் இடையிலான கூட்டுறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவ்விரு நாடுகளுக்கு இடையிலான தொடா்புகள், ஜனநாயக மாண்புகளில் வேரூன்றியதாகும். நமது நாடுகளின் நல்லுறவுக்கு அண்மைக் காலமாக புதிய அா்த்தம் கிடைத்துள்ளது. பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்களில் மேலும் நெருக்கமான ஒத்துழைப்பை உறுதி செய்ய இப்பேச்சுவாா்த்தை அடித்தளமிட்டுள்ளது என்றாா் எஸ்.ஜெய்சங்கா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

SCROLL FOR NEXT