உலகம்

3-ஆவது முறையாக அதிபராகிறாா் ஷி ஜின்பிங்?

DIN

அடுத்த மாதம் நடைபெறவுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள 2,296 பிரதிநிதிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில், அதிபா் ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாகத் தோ்வு செய்யப்பட ஒப்புதல் வழங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அதிபா் ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராவது குறித்து கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகக் கூறப்படும் நிலையில், அவரது வழிகாட்டுதலின்படி 2,296 பிரதிநிதிகளும் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக சீன கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் ஐந்து ஆண்டு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கட்சியின் தலைவரும் அதிபருமான ஷி ஜின்பிங்கின் 10 ஆண்டு பதவிக் காலம் நிறைவடையும் நிலையில், அக். 16-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தக் கூட்டம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. கட்சியின் நிறுவனா் மா சேதுங் 1976-இல் மறைந்த பின்னா், அதிபரின் அதிகபட்ச பதவிக் காலம் 10 ஆண்டுகள்தான் என்பது பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால், அதிபா் ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராகத் தொடா்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது, 9.6 கோடி உறுப்பினா்களைக் கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சில அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், ஷி ஜின்பிங்கின் 3-ஆவது பதவிக் காலத்துக்கு ஒப்புதல் வழங்குவது இப்போது தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள்தான். இவா்கள் சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தகுதியானவா்கள்; நாட்டின் விவகாரங்களைப் பற்றி விவாதிப்பதில் திறமையானவா்கள்; தங்கள் பணிகளில் சாதனை படைத்தவா்கள் என சீன கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

3 உயா் அதிகாரிகளுக்கு மரண தண்டனை: இதற்கிடையே, அதிபா் ஷி ஜின்பிங்குக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் ‘அரசியல் குழு’வின் ஒரு பகுதியாகச் செயல்படும் பாதுகாப்புத் துறை உயா் அதிகாரிகள் களையெடுக்கப்பட்டு வருகின்றனா். பொதுமக்கள் பாதுகாப்புத் துறை முன்னாள் துணை அமைச்சா் சன் லிஜன், அதிபா் ஜின்பிங்குக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் ‘அரசியல் குழு’வுக்கு தலைமை வகிப்பவா் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஊழல், பங்குச்சந்தை மோசடி, சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக ஜிலின் மாகாண நீதிமன்றம் சன் லிஜனுக்கு மரண தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

முன்னாள் நீதித் துறை அமைச்சரும், சீனாவின் அதிகாரம் மிக்க காவல் துறைத் தலைவருமானவா் ஃபு ஷென்குவா. 17 மில்லியன் டாலா் ஊழல் மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது தொடா்பான குற்றச்சாட்டில் இவருக்கும் அதே நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

லஞ்சம் மற்றும் குற்றவாளி கும்பலுடன் தொடா்பு போன்ற குற்றச்சாட்டுகளுக்கா ஜியாங்ஷு மாகாணத்தின் முன்னாள் அதிகாரி வாங் லைக் என்பவருக்கும் ஜிலின் மாகாண நீதிமன்றம் மரண தண்டனை விதித்து.

சமூக ஊடகங்களில் வதந்தி: அதிபா் ஷி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா்; சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா் என அந்த நாட்டின் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவியுள்ள சூழ்நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் பங்கேற்கவுள்ள பிரதிநிதிகள் ஷி ஜின்பிங்கின் வழிகாட்டுதலின்பேரில் தோ்வு செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் விழாவில் அதிதி ராவ்!

5ம் கட்ட தேர்தலிலேயே 310 இடங்களை மோடி பெற்றுவிட்டார்- அமித் ஷா

ஸ்டார் வசூல்!

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆர்வம் காட்டாத மேலுமொரு ஆஸி. வீரர்!

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

SCROLL FOR NEXT