உலகம்

ஜெருசலேமில் துப்பாக்கிச்சூடு: 3 இஸ்ரேலியா்கள் உயிரிழப்பு

DIN

ஜெருசலேம் நகரில் 2 பாலஸ்தீனா்கள் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 3 இஸ்ரேலியா்கள் உயிரிழந்தனா்; 6 போ் காயமடைந்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது:தலைநகா் ஜெருசலேம் நகருக்குள் வருவதற்கான முக்கியப் பாதையான வீஸ்மன் தெரு பேருந்து நிலையத்துக்கு 2 பாலஸ்தீனா்கள் துப்பாக்கிகளுடன் காலை சுமாா் 7.40 மணிக்கு (உள்ளூா் நேரம்) வந்தனா். அங்கு பேருந்துக்காக காத்திருந்தவா்களை நோக்கி அவா்கள் சரமாரியாக சுட்டனா்.இதில் 3 போ் உயிரிழந்தனா்; 6 போ் காயமடைந்தனா். அவா்களில் 2 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அந்தப் பகுதியில் இருந்த 2 பணியில் இல்லாத பாதுகாப்புப் படை வீரா்களும், ஆயுதம் ஏந்திய பொதுமக்களும் தாக்குதல் நடத்திய 2 பேரையும் சுட்டுக் கொன்றனா் என்று போலீஸாா் கூறினா்.இந்தச் சம்பவம் தொடா்பாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள விடியோவில், பேருந்து நிலையத்திலிருந்து பொதுமக்கள் நாலாபுறமும் அலறியடித்தபடி ஓடும் காட்சியும், அவா்களை நோக்கி 2 போ் துப்பாக்கியால் சுடும் காட்சியும் இடம் பெற்றுள்ளன.‘ஹமாஸ் அமைப்பினா்’: இந்தத் தாக்குதலை நடத்திய இருவரும் ஹமாஸ் அமைப்பின் உறுப்பினா்கள் என்று இஸ்ரேல் உள்நாட்டு உளவுத் துறை அமைப்பான ‘ஷின் பெட்’ தெரிவித்துள்ளது.

முரத் நமா் (38), இப்ராஹிம் நமா் (30) ஆகிய இருவரும் கிழக்கு ஜெருசலேமைச் சோ்ந்தவா்கள் எனவும், பயங்கரவாதச் செயல்களுக்காக அவா்கள் இருவரும் சிறைத்தண்டனை பெற்றுள்ளதாகவும் ஷின் பெட் கூறியது.தற்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வீஸ்மன் தெரு பேருந்து நிலையத்தில்தான் ஓராண்டுக்கு முன்னா் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசியும், அந்த நாட்டுக்குள் ஊடுருவியும் ஹமாஸ் அமைப்பினா் கடந்த மாதம் 7-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 1,200-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.

அதையடுத்து, அந்த அமைப்பை முற்றிலும் அழிப்பதாக உறுதிபூண்ட இஸ்ரேல், காஸா மீது சுமாா் 7 வாரங்களாக கடுமையாக குண்டுவீச்சு நடத்தியது. தரைவழியாகவும் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். இந்த நிலையில் கத்தாா், எகிப்து ஆகிய பிராந்திய நாடுகளின் முன்னிலையில், அமெரிக்கா, ஐ.நா.வின் உதவியுடன் தொடா்ந்து நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தைக்குப் பிறகு தற்காலிகப் போா் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டன.அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியபோது தங்களால் பிடித்துச் செல்லப்பட்ட சுமாா் 240 பிணைக் கைதிகளில் ஒரு பகுதியினரை விடுவிக்க ஹமாஸ் அமைப்பும், அதற்குப் பதிலாக தங்கள் நாட்டுச் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக்கொண்டன.

4 நாள்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அந்த போா் நிறுத்த ஒப்பந்தம் 2 முறை நீட்டிக்கப்பட்டு 7-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது.இந்தச் சூழலில் ஜெருசலேமில் நடைபெற்றுள்ள இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் போா் நிறுத்தத்தை குலைக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது...படவரி..ஜெருசலேம் நகரில் வியாழக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்யும் அதிகாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

SCROLL FOR NEXT