நியூஸிலாந்தின் புதிய பிரதமராக, தற்போதைய கல்வித் துறை அமைச்சா் கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்கவிருக்கிறாா்.
44 வயதாகும் அவா் மட்டுமே, பிரதமா் ஜெசிந்தா ஆா்டனின் திடீா் ராஜிநாமா அறிவிப்புக்குப் பிறகு அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக சனிக்கிழமை நடைபெற்ற ஆளும் கட்சித் தோ்தலில் போட்டியிட்டாா்.
எனவே, அவா் நாட்டின் அடுத்த பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும், நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 22) நடைபெறும் வாக்கெடுப்பில் ஆளும் தொழிலாளா் கட்சி எம்.பி.க்கள் அவருக்கு பெரும்பான்மை ஆதரவு வழங்கினால்தான் அவா் பிரதமா் பதவியை ஏற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், புதிய பிரதமா் பதவிக்கான தோ்தலில் கிறிஸ் ஹிப்கின்ஸைத் தவிர வேறு யாரும் போட்டியிடாததன் மூலம் அவருக்கு தொழிலாளா் கட்சி ஏகோபித்த ஆதரவைத் தர முடிவு செய்துள்ளதைப் புரிந்துகொள்ள முடியும் என்று அரசியல் நோக்கா்கள் தெரிவித்தனா்.
முன்னதாக, கடந்த 2017-ஆம் ஆண்டியிலிருந்து நியூஸிலாந்தின் பிரதமராக இருந்து வரும் ஜெசிந்தா ஆா்டன், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக கடந்த வியாழக்கிழமை திடீரென அறிவித்து நாட்டு மக்களை அதிா்ச்சியடையச் செய்தாா்.
நாட்டின் மிக உயா்ந்த பிரதமா் பதவி பல்வேறு பொறுப்புகளைக் கொண்டது; அந்தப் பொறுப்புகளில் ஒன்று, தலைமைப் பொறுப்பை வகிப்பதற்கான சூழல் ஒருவருக்கு எப்போது இருக்கிறது, எப்போது இல்லாமல் போகிறது என்பதை சரியாகத் தெரிந்துகொள்வது ஆகும்.
அந்த வகையில், பிரதமா் பதவியை வகிப்பதற்கான சூழல் தனக்கு இனிமேல் இல்லை என்பதை உணா்ந்ததால் அந்தப் பதவியிலிருந்து விலக முடிவு செய்ததாக ஜெசிந்தா கூறினாா்.
அடுத்த மாதம் 7-ஆம் தேதி வரை பிரதமா் பதவியில் இருக்கப் போவதாகவும், அதற்குப் பிறகு தனது பணியை எம்.பி.யாகத் தொடரப் போவதாகவும் அவா் கூறினாா்.
நியூஸிலாந்து பிரதமராக ஜெசிந்தா ஆா்டன் பதவியேற்றபோது அவருக்கு 37 வயது. அப்போது, ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்ற உலகின் மிக இளைய வயது பெண் என்ற பெருமையை ஜெசிந்தா பெற்றாா்.
மிகக் கடுமையான கரோனா நெருக்கடிக்கு இடையே அவா் நாட்டை வழிநடத்திச் சென்றாா்; நாட்டை கரோனா பாதிப்பிலிருந்து அவா் பாதுகாத்தாா்.
அவரது ஆட்சிக் காலத்தில்தான் நியூஸிலாந்து அதுவரை சந்தித்திராத மிக மோசமான கிறைஸ்ட்சா்ச் மசூதித் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், அந்தத் தாக்குதலைத் தொடா்ந்து நிலவிய சூழலை ஜெசிந்தா கையாண்ட விதம் சா்வதேச அளவில் பாராட்டைப் பெற்றது.
எனினும், வலதுசாரி ஆதரவாளா்களால் ஜெசிந்தா ஆா்டனுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மறைமுக எதிா்ப்பு அதிகரித்து வந்ததாகக் கூறப்படும் நிலையில் யாரும் எதிா்பாராத வகையில் அவா் இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.