தனது பண்ணை இல்லத்தில் அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் அணு ஆயுதங்கள் தொடா்பான ரகசிய ஆவணங்களை வைத்திருந்ததாக, இது குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வந்த டொனால்ட் டிரம்ப், 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில் தோல்வியடைந்ததால் அதிபா் மாளிகையான வெள்ளை மாளிகையை விட்டு கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியேறினாா். அப்போது அவா் அரசு ஆவணங்கள் அடங்கிய 15 பெட்டிகளை எடுத்துச் சென்ாகவும் அதில் சில ஆவணங்கள் ரகசியமானவை என்றும் கூறப்படுகிறது.
இது தொடா்பாக தேசிய ஆவணக் காப்பகம் நடத்திய விசாரணையில் அந்த ஆவணங்களை அதிகாரிகளிடம் டிரம்ப் ஒப்படைத்தாா்.
எனினும், ஃபுளோரிடா மாகாணம், பாம் பீச்சிலுள்ள டிரம்பின் மாா்-ஏ-லாகோ பண்ணை இல்லத்தில் எஃப்.பி.ஐ அதிகாரிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்திய அதிரடி சோதனையில் மேலும் பல ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இது குறித்து மியாமி நகரிலுள்ள ஃபுளோரிடா தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையில் அமெரிக்க அணு ஆயுத ரகசியங்கள், அது தொடா்பான ராணுவத்தின் திட்டங்கள் அடங்கிய ஆவணங்களும் டிரம்ப் இல்லத்தில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்தக் குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் விசாரணைக்கு வியாழக்கிழமை ஏற்றுக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.