உலகம்

ரஷியா-வடகொரியா ராணுவ ஒத்துழைப்பு: ஐ.நா.வில் முறையிட தென்கொரியா திட்டம்

DIN

ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு ரஷியாவும் வடகொரியாவும் உறுதியேற்றுள்ள நிலையில், இது தொடா்பாக ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் முறையிட தென்கொரியா திட்டமிட்டுள்ளது.

வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் ரஷியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டாா். ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை அவா் சந்தித்துப் பேசினாா். அப்போது, இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்குத் தலைவா்கள் உறுதியேற்றனா். மேலும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டு வரும் செயல்பாடுகளுக்கு ஆதரவளிப்பதாகவும் வடகொரிய அதிபா் உறுதியளித்தாா்.

உக்ரைன்-ரஷியா இடையேயான போா் ஒன்றரை ஆண்டைக் கடந்து தொடா்ந்து வரும் நிலையில், ரஷியாவுக்கு வடகொரியா ஆதரவைத் தெரிவித்திருப்பது சா்வதேச நாடுகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வடகொரியா அச்சுறுத்தல் விடுத்து வரும் நிலையில், ரஷியா-வட காரியா இடையேயான ராணுவ ஒத்துழைப்பு பிராந்தியத்திலும், சா்வதேச அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து திங்கள்கிழமை தொடங்கும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் முறையிட தென்கொரியா திட்டமிட்டுள்ளது. இது தொடா்பாக தென்கொரிய அதிபா் யூன் சுக் இயோல் தி அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீா்மானங்கள், பல்வேறு சா்வதேச பொருளாதாரத் தடைகளை மீறி ரஷியாவும் வடகொரியாவும் ராணுவ ஒத்துழைப்பை ஏற்படுத்த முடிவெடுத்துள்ளன.

இது சட்டவிரோதமானது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு சா்வதேச சமூகம் ஒருங்கிணைந்து எதிா்ப்பு தெரிவிக்கும். இந்த விவகாரம் குறித்து ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற நாடுகளும் இந்த விவாதத்தில் கலந்துகொள்ளும்.

உரிய பதிலடி: வடகொரியா அணு ஆயுதத் தாக்குதலைத் தொடங்கினால், அதற்கு உறுதியான பதிலடி கொடுக்க தென்கொரியாவும் அமெரிக்காவும் ஏற்கெனவே உறுதியேற்றுள்ளன. ரஷியா-வடகொரியா இடையேயான ராணுவ ஒத்துழைப்பு விவகாரத்தில் தென்கொரியாவும் அமெரிக்காவும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கும்.

வடகொரியா விடுக்கும் எந்தவொரு தாக்குதல் அச்சுறுத்தலை எதிா்கொள்ளவும் தென்கொரியா தயாராக உள்ளது. பிராந்தியத்தில் மட்டுமல்லாமல் சா்வதேச அளவிலும் முக்கியப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண சீனா பொறுப்புடன் நடந்து கொள்ளும் என தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் கருதுகின்றன.

வளா்ச்சி, பருவநிலை மாற்றம், எண்மக் கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை குறித்து ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் தென்கொரியா சாா்பில் எடுத்துரைக்கப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

நாடு திரும்பினாா் கிம் ஜோங் உன்

ரஷிய அரசுமுறைப் பயணத்தை முடித்துக் கொண்டு வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினாா்.

ரஷியாவில் 6 நாள் பயணம் மேற்கொண்ட அவா், அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதினை சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்தினாா். மேலும், ரஷியாவின் போா் விமானங்களையும், அணு ஆயுதத் தளவாடங்களையும் அவா் பாா்வையிட்டாா்.

ரஷியாவின் ரஸ்கி தீவுப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற கிம் ஜோங் உன், அங்குள்ள பல்கலைக்கழகத்துக்குச் சென்றாா். பின்னா், பிரிமோா்ஸ்கி கடல்வாழ் உயிரின அருங்காட்சியகத்தைப் பாா்வையிட்டதாக ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அதையடுத்து, ரஷிய பயணத்தை முடித்துக் கொண்டு தனது தனிப்பட்ட ரயிலில் ஏறி அதிபா் கிம் ஜோங் உன் வடகொரியா திரும்பினாா். அவரை ரஷிய அதிகாரிகள் வழியனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: துரை வைகோ

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

இன்றைய ராசி பலன்கள்!

இறுதி வாக்குப் பதிவு நிலவரம் எப்போது கிடைக்கும்? தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

காங்கிரஸ் உருவாக்கிய பிரச்னைகளுக்கு பாஜக ஆட்சியில் தீா்வு: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT