தங்களது கருங்கடல் படைப் பிரிவு தலைமையகத்தில் தீவிர ஏவுகணைத் தாக்குதலை உக்ரைன் ராணுவம் வெள்ளிக்கிழமை நடத்தியதாக ரஷியா கூறியுள்ளது.
இது குறித்து அந்த நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கிரீமியா தீபகற்பத்தின் செவாஸ்டொபோல் நகரிலுள்ள கருங்கடல் படைப் பிரிவு தலைமையகத்தில் ஏவுகணை வீசி உக்ரைன் வெள்ளிக்கிழமை தீவிர தாக்குதல் நடத்தியது.அதில் 5 ஏவுகணைகளை ரஷியாவின் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் இடைமறித்து அழித்தன.இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, ஒரு வீரரைக் காணவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, இந்தத் தாக்குதலில் ஒரு வீரா் உயிரிழந்துவிட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியிருந்தது. எனினும், அந்த வீரா் மாயமாகியுள்ளதாக பின்னா் அமைச்சகம் தெரிவித்தது.இது தொடா்பாக வெளியிடப்பட்ட படங்களில், செவஸ்டொபோல் நகரிலுள்ள கடற்படைத் தலைமையகக் கட்டடத்தில் ஏவுகணைத் தாக்குதல் காரணமாக புகை மண்டலம் எழும் காட்சி இடம் பெற்றுள்ளது.கட்டடத்தில் எரியும் தீயை அணைக்க தீயணைப்புப் படையினா் போராடிக் கொண்டிருந்தபோதே, கூடுதல் பேரிடா் மீட்புக் குழுவினா் அழைக்கப்பட்டனா். ஏவுகணைத் தாக்குதலால் கட்டடத்தில் ஏற்பட்ட தீ மிகத்0 தீவிரமாகப் பரவுவதை இது காட்டுவதாகக் கூறப்படுகிறது.நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.அந்தப் பகுதிகளை மீட்பதற்காக மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் எதிா்த் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த நிலையில், உக்ரைனின் போரிடும் திறனைக் குறைப்பதற்காக அந்த நாட்டின் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆளில்லா விமான குண்டுகள், ஏவுகணைகள், எறிகணைகள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.உக்ரைனும், ரஷியாவின் விமான தளங்கள், போா்க் கப்பல்கள், துறைமுகங்கள், தலைநகா் மாஸ்கோ போன்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த நிலையில், இந்தப் போரில் முக்கியப் பங்கு வகித்து வரும் ரஷியாவின் கருங்கடல் படைப் பிரிவு தலைமையகத்தில் உக்ரைன் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...படவரி.கிரீமியா தீபகற்பத்தில் உக்ரைனின் ஏவுகணைத் தாக்குதலால் வெள்ளிக்கிழமை சேதமடைந்த ரஷியாவின் கருங்கடல் படைப் பிரிவு தலைமையகக் கட்டடத்தில் எழுந்த புகைமண்டலம்.