இறக்கும் தருவாயில் இருந்த ஒரு மனிதனுக்கு பன்றியின் இதயத்தைப் பொருத்தி சாதனை படைத்திருக்கின்றனர் அமெரிக்க மருத்துவர்கள்.
உலகம் முழுவதும் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளால் உறுப்புகள் செயலிழப்பு என்பது அதிகரித்து வருகிறது. இதனால் விலங்குகளின் உறுப்புகளை குறிப்பாக பன்றியின் உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்தும் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் அமெரிக்காவின் மேரிலாண்ட் பல்கலைக்கழக மருத்துவர்கள் இரண்டாவது முறையாக, பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தி வெற்றி கண்டுள்ளனர்.
58 வயதுள்ள கடற்படை முன்னாள் அதிகாரி லாரன்ஸ் பாசெட், இதய செயலிழப்பு காரணமாக இறக்கும் தருவாயில் இருந்தார். பன்றியின் இதயத்தைப் பொருத்துவதற்கு அவர் சம்மதித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதன்படி, மருத்துவர்கள் பன்றியின் இதயத்தை லாரன்ஸுக்கு பொருத்தியுள்ளனர். தற்போது நாற்காலியில் எழுந்து உட்கார்ந்து மற்றவர்களுடன் சகஜமாக பேசும் அளவுக்கு லாரன்ஸின் உடல்நலம் முன்னேறியுள்ளது.
பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்துவது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு இதே மேரிலாண்ட் மருத்துவர்கள், டேவிட் பென்னெட் என்பவருக்கு பன்றியின் இதயத்தை முதல்முறையாகப் பொருத்தி அவர் இரண்டு மாதங்கள் வாழ்ந்துள்ளார்.
இதையும் படிக்க | வரலாற்றுச் சிறப்புமிக்க பன்றிச் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை!
முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை குறித்து அறிந்த லாரன்ஸ் பாசெட், 'இந்த ஒரு நிலையில் யாருக்கும் இதுகுறித்து தெரிந்திருக்காது. ஆனால் எனக்கு இதில் நம்பிக்கை உள்ளது, எனக்கு ஒரு வாய்ப்பும் கிடைத்துள்ளது' என்று அறுவை சிகிச்சைக்கு முன்னதாக கூறியுள்ளார்.
இதேபோன்று சமீபமாக அமெரிக்காவின் நியுயார்க் பல்கலைக்கழக மருத்துவர்கள், மூளைச் சாவுற்ற ஒருவரின் உடலில் இரண்டு மாதங்கள் பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி, அது இயல்பாகச் செயல்படுவதை, வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்துள்ளனர்.
உறுப்பு தானம் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், உறுப்புகள் செயலிழப்பு அதிகரித்து வருவதால் இறப்புகள் அதிகமாகவே நிகழ்கின்றன. பல நூற்றாண்டுகளாக விலங்குகளில் இருந்து மனிதனுக்கு செய்யும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தோல்வியைக் கண்டு வந்த நிலையில், மருத்துவர்களின் இந்த முயற்சி, மருத்துவத் துறைக்கு முன்னேற்றமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.
இதையும் படிக்க | மதுபான விலை கோவாவில் குறைவு! அதிக விலை எந்த மாநிலத்தில் தெரியுமா?