ஜனவரி
16:சாதனை கிராண்ட்ஸ்லாம் (21) வெல்லும் கனவுடன் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் களம் காண அந்நாட்டுக்கு வந்த செர்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அந்த விவகாரத்தில் அவர் அந்நாட்டு நீதிமன்றத்தை நாட, அதுவும் அரசின் முடிவை உறுதி செய்தது.
16:சூப்பர் 500 பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் ஆச்சரியப்படத்தக்க வகையில், உலக சாம்பியனும், சிங்கப்பூர் வீரருமான லோ கீன் யீவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
29:ஆஸ்திரேலிய ஓபனில் உள்நாட்டு வீராங்கனை ஆஷ்லி பர்ட்டி - அமெரிக்காவின் டேனியல் காலின்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனார். கடந்த 44 ஆண்டுகளில் சொந்த மண்ணில் கிராண்ட்ஸ்லாம் வென்ற முதல் ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.
30:ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையரில் ஸ்பெயின் நட்சத்திரம் ரஃபேல் நடால் - ரஷியாவின் டேனியல் மெத்வதெவை சாய்த்து 21-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். இந்த இறுதி ஆட்டம் 5 மணி நேரம் 24 நிமிஷங்கள் நீடித்தது.
பிப்ரவரி
4:குளிர்கால ஒலிம்பிக் (2022) போட்டி சீனாவின் பெய்ஜிங் நகரில் தொடங்கியது. உலகிலேயே கோடை மற்றும் குளிர்கால ஒலிம்பிக் என இரு போட்டிகளையும் நடத்திய முதல் நகரம் என்ற பெருமையை பெய்ஜிங் பெற்றது.
11:ஐபிஎல் போட்டிக்கான (2022) ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் 204 வீரர்களை வாங்கியதற்கு ரூ.551 கோடி செலவிடப்பட்டது. அதிகபட்சமாக இஷான் கிஷண் ரூ.15.25 கோடிக்கு மும்பை இண்டியன்ஸால் வாங்கப்பட்டார்.
19:மார்ச் மாதம் இலங்கையுடன் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டார். மோசமான
ஃபார்ம் காரணமாக சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரித்திமான் சாஹா, இஷாந்த் சர்மா ஆகியோர் அந்தத் தொடரிலிருந்து விலக்கப்பட்டனர்.
21:செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் செஸ் போட்டியில் தமிழகத்தின் ஆர்.பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை 5-ஆவது சுற்றில் வீழ்த்தி அசத்தினார்.
மார்ச்
18:இந்திய பாட்மின்டன் ஜோடியான காயத்ரி கோபிசந்த்/டிரீசா ஜாலி இணை சர்வதேச போட்டியின் காலிறுதியில், உலகின் 2-ஆம் நிலையிலிருந்த, உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிவென்றிருந்த தென் கொரியாவின் சோஹி லீ/சியுங்சான் சின்னை வீழ்த்தி அசத்தினர்.
24:சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய எம்.எஸ். தோனி, அந்தப் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார்.
ஏப்ரல்
3:மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 71 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, 7-ஆவது முறையாக சாம்பியனாகி சாதனை படைத்தது.
மே
15:தாமஸ் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்திய ஆடவர் அணி 3-0 என்ற கணக்கில், 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை சாய்த்து வாகை சூடி சாதனை படைத்தது.
ஜூன்
5:பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், நார்வேயின் கேஸ்பர் ரூடை வீழ்த்தி தனது 14-ஆவது பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும், 22-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்று சாதனை படைத்தார்.
8:சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அறிவித்தார். இந்தியாவுக்காக 23 ஆண்டுகளில் 12 டெஸ்ட், 232 ஒரு நாள், 89 டி20 ஆட்டங்களில் அவர் விளையாடியிருக்கிறார்.
13:ஐபிஎல் போட்டியின் 2023-27 காலகட்டத்துக்கான ஒளிபரப்பு உரிமத்தை விநியோகித்ததன் மூலம் பிசிசிஐ ரூ.48,390 கோடி வருவாய் ஈட்டியது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் இந்தியாவும் (ரூ.23,575 கோடி), எண்ம உரிமம் மற்றும் இந்திய துணைக்கண்ட ஒளிபரப்பு உரிமத்தை வையாகாம்18 நிறுவனமும் (ரூ.23,758 கோடி), உலகளாவிய அளவில் எஞ்சியிருக்கும் ஒளிபரப்பு உரிமத்தை வையாகாம் 18 மற்றும் டைம்ஸ் இன்டர்நெட் நிறுவனங்கள் கூட்டாகவும் (ரூ.1,057 கோடி) வாங்கின.
ஜூலை
10:விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸை வீழ்த்தி தனது 21-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். அந்த கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தொடர்ந்து 4 முறை சாம்பியனான 4-ஆவது வீரர் என்ற பெருமையும் பெற்றார்.
17:சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஆசிய சாம்பியன் வாங் ஜி யிவை தோற்கடித்து, சூப்பர் 500 போட்டியில் முதல் முறையாக வாகை சூடினார்.
24:டைமண்ட் லீக் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து புதிய பெர்சனல் பெஸ்ட் உடன், தேசிய சாதனையும் படைத்தார்.
30:காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான 55 கிலோ பிரிவில் இந்திய பளுதூக்குதல் வீரர் சாங்கெத் சாகர் மொத்தமாக 248 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
30:அந்தப் போட்டியின் மகளிருக்கான 49 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் சானு மொத்தமாக 201 கிலோ எடையைத் தூக்கி, சாதனையுடன் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்றார்.
31:அதே போட்டியில் ஆடவருக்கான 67 கிலோ பிரிவில் ஜெரிமி லால்ரினுங்கா 300 கிலோ எடையைத் தூக்கி இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்தார்.
ஆகஸ்ட்
7:சர்வதேச செஸ் சம்மேளனத்தின் தலைவராக ரஷியாவின் அர்கேடி துவோர்கோவிச் தொடர்ந்து 2-ஆவது முறையாக தேர்வு செய்யப்பட, இந்தியரும், 5 முறை உலக சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த் துணைத் தலைவராகத் தேர்வானார்.
9:இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழகத்தில் நடைபெற்ற 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் இந்திய "பி' அணியும், மகளிர் பிரிவில் இந்திய "ஏ' அணியும் வெண்கலப் பதக்கம் வென்றன. ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான், மகளிர் பிரிவில் உக்ரைன் சாம்பியன் ஆகின.
15:இந்திய கால்பந்து நிர்வாகத்தில் 3-ஆம் தரப்பு தலையீடு இருப்பதாகக் கூறி, தேசிய கால்பந்து சம்மேளனத்துக்கு (ஏஐஎஃப்எஃப்), சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) இடைக்காலத் தடை விதித்தது.
22:இந்திய கால்பந்தை நிர்வகிப்பதற்காக, தான் அமைத்திருந்த நிர்வாகிகள் கமிட்டியை உச்சநீதிமன்றம் நீக்கியதை அடுத்து, இந்திய கால்பந்து சம்மேளனத்தின் மீதான இடைக்காலத் தடையை பிஃபா விலக்கிக் கொண்டது.
செப்டம்பர்
3:மகளிர் டென்னிஸில் பல்வேறு சாதனைகள் படைத்த அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ், யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் தோல்வி கண்டதுடன் தனது டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார்.
9:சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் ஃபைனலில் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா 88.44 மீட்டருக்கு ஈட்டி எறிந்து, அந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார்.
11:யுஎஸ் ஓபன் டென்னிஸில் போலந்தின் இகா ஸ்வியாடெக், டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபியுரை வீழ்த்தி 4-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.
12:யுஎஸ் ஓபன் ஆடவர் ஒற்றையரில் நார்வேயின் கேஸ்பர் ரூடை வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியா, கிராண்ட்ஸ்லாம் வென்ற மிக இளவயது வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
15:சர்வதேச டென்னிஸிலிருந்து ஓய்வு பெறப்போவதாக சுவிட்ஸர்லாந்து டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் ஃபெடரர் அறிவித்தார்.
18:சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் செக் குடியரசின் லிண்டா ஃப்ருவிர்டோவா, போலந்தின் மக்தா லினெட்டை தோற்கடித்து தனது முதல் டபிள்யூடிஏ பட்டம் வென்றார்.
24:லேவர் கோப்பை டென்னிஸில் ரஃபேல் நடாலுடனான இரட்டையர் பிரிவு ஆட்டத்தோடு உணர்ச்சி பொங்க டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றார் ஃபெடரர்.
அக்டோபர்
18:இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 36-ஆவது தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி தேர்வானார்.
நவம்பர்
13:டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் ஆனது. ஒரே நேரத்தில் டி20, ஒரு நாள் உலகக் கோப்பைகளை தன் வசம் வைத்திருந்த முதல் அணி என்ற சாதனையை படைத்தது.
20:இருபத்தி இரண்டாவது ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கியது.
21:எஃப்1 கார் பந்தயத்தில் நெதர்லாந்து வீரரும், ரெட்புல் டிரைவருமான மேக்ஸ் வெர்ஸ்டாபென் நடப்பு சீசனின் கடைசி பந்தயத்தில் வென்றார். எஃப்1 வரலாற்றில் ஒரு சீசனில் அதிக பந்தயங்களில் வென்றவர் (15) என்ற சாதனையை அவர் படைத்தார்.
21:விஜய் ஹஸாரே கிரிக்கெட்டில் அருணாசல பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தமிழகத்தின் நாராயண் ஜெகதீசன் 141 பந்துகளில் 25 பவுண்டரிகள், 15 சிக்ஸர்களுடன் 277 ரன்கள் விளாசி, உலக "லிஸ்ட் - ஏ' கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தார்.
26:உலக யூத் குத்துச்சண்டை போட்டியில் தமிழகத்தின் விஸ்வநாத் சுரேஸ் 48 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
28:விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட்டில் உத்தர பிரதேசத்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் மகாராஷ்டிரத்தின் ருதுராஜ் கெய்க்வாட் ஒரே ஓவர்களில் 7 சிக்ஸர்கள் விளாசி (1 நோ பால்) புதிய உலக சாதனை படைத்தார்.
டிசம்பர்
1:பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து ஒரே நாளில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 506 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது.
2:ஆடவர் உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக, ஜெர்மனி - கோஸ்டா ரிகா ஆட்டத்தில் 4 பெண் நடுவர்கள் பணியாற்றினர்.
7:உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மீராபாய் சானு 49 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
10:இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் தடகள நட்சத்திரம் பி.டி. உஷா போட்டியின்றி தேர்வானார். சங்கத்தின் 95 ஆண்டுகால வரலாற்றில் தலைவர் பொறுப்பேற்ற முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.
10:வங்கதேசத்துக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய வீரர் இஷான் கிஷண் 126 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து, சர்வதேச அளவில் ஒரு நாள் ஃபார்மட்டில் அதிவேக இரட்டைச் சதம் அடித்த 7-ஆவது வீரர், 3-ஆவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
18:உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா 4-2 என்ற கோல் கணக்கில் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் பிரான்ஸை வீழ்த்தி 3-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
18:இங்கிலாந்தைச் சேர்ந்த தியோ ஆக்டென், உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 64 ஆட்டங்களையும் ஒன்று விடாமல் மைதானத்துக்கு நேரில் சென்று பார்த்து புதிய உலக சாதனை படைத்தார்.
23: ஐபிஎல் போட்டியின் 16-ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து வீரர் சாம் கரன், ரூ.18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டு புதிய சாதனை படைத்தார். ஐபிஎல் ஏலத்தின் வரலாற்றில் இதுவே ஒரு வீரருக்கு செலவிடப்பட்ட அதிகபட்ச தொகையாகும்.