செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

பெருஞ்சாணி அணையிலிருந்து மீண்டும் ஆயிரம் கன அடி நீர் திறப்பு: திற்பரப்பு அருவியில் தொடரும் வெள்ளம்

DIN | Published: 21st August 2018 02:48 AM
திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளம்.

நீர்வரத்து அதிகரித்ததால் பெருஞ்சாணி அணையிலிருந்து திங்கள்கிழமை மீண்டும் ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கன மழை பெய்தது. இதன் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. பெருஞ்சாணி அணை முழுக் கொள்ளளவை எட்டியதால் அங்கிருந்து 30 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
இந்நிலையில், கடந்த 3 நாள்களாக மழை குறைந்ததையடுத்து, அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதனால் மாமுகம், இஞ்சிக்கடவு, மங்காடு, ஏழூர், வைக்கலூர் பகுதிகளில் வீடுகளைச் சூழ்ந்த மழை வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. வைக்கலூர் பகுதியில் வாழைத் தோட்டங்களைச் சூழ்ந்த மழை வெள்ளம் வடியாமல் உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தெரிசனங்கோப்பு, ஞாலம், அருமநல்லூர் போன்ற பகுதிகளில் மழை வெள்ளத்தில் நெல், வாழை பயிர்கள் மூழ்கின. தற்போது அங்கும் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது.
கல்குளம், விளவங்கோடு வட்டங்களில் 11 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதனால் வீடுகளை இழந்த பொது மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
மழை வெள்ளத்தால் இடிந்த வீடுகள், பயிர்ச் சேதங்களை வருவாய்த் துறையினர் கணக்கெடுத்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல மழையால் சேதம் அடைந்த மேற்கு மாவட்ட பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்கும் பணிகளும் தீவிரம் அடைந்துள்ளது.
பெருஞ்சாணி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்ததால் ஞாயிற்றுக்கிழமை அணை மூடப்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை பெருஞ்சாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. வினாடிக்கு 1454 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. 77 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் 75 அடியாக உயர்ந்தது.
இதைத்தொடர்ந்து, காலை 10 மணிக்கு பெருஞ்சாணி அணை மீண்டும் திறக்கப்பட்டது. அணையிலிருந்து ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பரளியாறு, வள்ளியாறு, கோதையாறு, குழித்துறையாறுகளில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திற்பரப்பு அருவியில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வெள்ளம் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது. இதேபோல பேச்சிப்பாறை அணையிலிருந்து 4,688 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றாறு 1 அணையில் 15.71 அடி தண்ணீர் உள்ள நிலையில் அணைக்கு உள்வரத்தாக 268 கன அடி தண்ணீர் வருகிறது. அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


 

More from the section

சட்ட விரோத பேனர் விவகாரம்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
ஆளுநர் கிரண் பேடி மீது மத்திய உள்துறை அமைச்சரிடம் புகார்: முதல்வர் நாராயணசாமி தகவல்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: சிபிஐ முழுமையாக ஆராய்ந்து விசாரிக்க உத்தரவு
சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்: முதல்வர் அறிவிப்பு
அன்னவாசலில் ஜல்லிக்கட்டு: 22 பேர் காயம்