20 ஜனவரி 2019

ஒகேனக்கல்லில் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படுமா? முதன்மை சுற்றுலா தலமாவதற்கு நல்ல வாய்ப்பு!

DIN | Published: 27th August 2018 02:01 AM

தருமபுரி: தென்னகத்திலேயே பிரம்மாண்டமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மாற்றுவதற்கான இயற்கையான வசதிகளைக் கொண்ட ஒகேனக்கல், தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு முழுமையான திருப்தியைத் தரும் ஓர் இடமாக இல்லை என்பது பெரும் குறை!
 ஓரிரு நாள்களில் வறண்டும் விடலாம் என்றளவுக்கு காவிரியில் தண்ணீர் வரத்துக் குறைந்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் நேரடியாக எல்லாப் பகுதிகளையும் முழுமையாக ஆய்வு செய்து போதியளவு வசதிகளைச் செய்துத் தரவும், முன்னோடித் திட்டங்களை இங்கு செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் விரும்புகின்றனர்.
 தருமபுரி மாவட்ட மையத்திலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது ஒகேனக்கல் சுற்றுலாத் தலம். சுற்றிலும் பெருமளவு மலைகள் சூழ, நயாகரா அருவியைப் போன்ற இயற்கைக் கட்டமைப்பைக் கொண்டது ஒகேனக்கல். தமிழ்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் விடுமுறைக் காலங்களில் இங்கு குவிந்துவிடுவர்.
 தற்போதைக்கு பிரதான அருவியில் இரு பாலருக்கும் தனித்தனியே குளிக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய வெள்ளத்துக்கும் முன்பே ஆண்கள் குளிக்கும் பகுதியில் தடுப்புக் கம்பிகள் சேதமடைந்திருந்தன. கடந்த ஒரு மாதமாக பெருக்கெடுத்த வெள்ளம் இந்த இடங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கும்.
 பூங்காக்கள்: பிரதான அருவிக்குச் செல்லும் வழியில் வலதுபுறம் காவிரிக் கரையோரத்தில் ஒரு பூங்கா முற்றிலும் சேதமடைந்து பல ஆண்டுகளாகப் பூட்டப்பட்டிருக்கிறது. அடுத்துள்ள பூங்காவில் நுழைவுக் கட்டணம் ரூ. 5 வசூலிக்கப்பட்டாலும், அதற்கேற்ற உள்கட்டமைப்பு வசதிகள் அங்கு இல்லை.
 அருவிக்கு அருகே மீன் விற்பனைச் சந்தை மற்றும் உணவருந்தும் விதத்தில் அமைந்த பூங்கா உள்ளது. இங்கும் நபர் ஒன்றுக்கு ரூ. 5 வசூலிக்கப்படுகிறது. ஆனால், இருக்கைகள் உடைந்திருக்கின்றன; கைகழுவக் கூடத் தண்ணீர் இல்லை.
 தொங்கு பாலத்துக்கு அப்பால், பிரதான அருவிக்கு அருகே பாறைகளின் மீதிருந்து சுற்றுலாப் பயணிகள் இயற்கைக் காட்சிகளை ரசித்துப் பார்க்க இடம் இருந்தபோதிலும், அதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வெறுமனே தொங்கு பாலத்தில் நின்று "செல்ஃபி' எடுத்துக் கொள்ளலாம். இதற்கும் நபர் ஒருவருக்கு ரூ. 5 கட்டணம்! போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து, வேறு பகுதிகளுக்கும் சென்று ரசிக்க சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும்.
 நீண்ட காலத் திட்டங்கள் தேவை!
 ஒகேனக்கல்லுக்கு மேலே, கிருஷ்ணகிரி மாவட்டப் பகுதியையும் சேர்த்து, தமிழ்நாட்டு எல்லைக்குள் சுமார் 70 கி.மீ. தொலைவுக்கு காவிரி பவனி வருகிறாள். வலது புறம் அடர்ந்த வனம் மற்றும் மலைப் பகுதிகள். கேரள- கர்நாடக வனப் பகுதிக்கு நடுவே பயணிக்கும் பெரும் யானைக் கூட்டத்தின் வலசைப் பாதைகளை உள்ளடக்கிய வனம் இது.
 வனத்துக்கு பாதிப்பில்லாத வகையிலும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பாகவும், சுற்றுச் சூழலியலைக் கற்றுத் தரும் வகையில், அடர்வன நடையுடன் கூடிய சூழல் சுற்றுலாத் திட்டங்களை வடிமைக்க முடியும்.
 ஏற்கெனவே, ஒகேனக்கல்லில் மூன்று வழித்தடங்களில் பரிசல் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் இருக்கிறது. இது தொடர்பாக ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் படகில் சென்று ஆய்வு செய்துள்ளனர். தண்ணீர் வரத்து குறைவாக இருக்கும்போது, வாய்ப்புள்ள இடங்களில் உரிய பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் கூடிய படித்துறைகளை ஏற்படுத்தி இந்தக் கோரிக்கையை நிறைவேற்றலாம்.
 மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டால், தென் மாநிலத்தவரைக் கவரும் சுற்றுலாத் தலமாக ஒகேனக்கல்லை மாற்றி, பெரும் வருவாயும் ஈட்ட முடியும்!
 - சா. ஜெயப்பிரகாஷ்
 
 

More from the section

ஒவ்வொரு மாநிலத்திலும் சூழல் வேறுபடுகிறது: ராகுல் பிரதமர் வேட்பாளர் குறித்து ஸ்டாலின் கருத்து
பொங்கல் பரிசு தந்ததற்காக எங்கள் மீது வீண் பழி: முதல்வர் பழனிசாமி
தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்: அமைச்சர் செங்கோட்டையன்
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
விராலிமலை ஜல்லிக்கட்டு: 2 ஆயிரம் காளைகள் பங்கேற்கும் சாதனை நிகழ்வு!