திங்கள்கிழமை 25 மார்ச் 2019

விளம்பரத்திற்காக வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறவில்லை: சின்மயி விளக்கம் 

DIN | Published: 12th October 2018 08:05 PM

 

சென்னை: விளம்பரத்திற்காக கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறவில்லை என்று பாடகி  சின்மயி விளக்கம் அளித்துள்ளார். 

நாடெங்கும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் சீண்டல்கள் மற்றும் வன்கொடுமைகள் குறித்து, அவர்கள் "மீ டு" என்ற ஹேஷ் டேகை பயன்படுத்தி தங்கள் கருத்துக்களை வலைத்தளங்களில்வெளியிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து 2005-ஆம் ஆண்டு வெளிநாடு ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது தன்னை பாலியல் ரீதியாக அணுகியதாக புகார் கூறினார். இது மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் விளம்பரத்திற்காக கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறவில்லை என்று பாடகி  சின்மயி விளக்கம் அளித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் சின்மயி வெள்ளியன்று மாலை செய்தியளர்களை சந்தித்தார். அப்போது அவர்களின் பல்வேறு  கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

பல வருடங்களாக பெண்கள் மீது இத்தகைய பாலியல் சீண்டல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒரு சில இடங்களில் மட்டும் அல்ல. எல்லா இல்லங்களிலும் நடக்கிறதே? ஆனால் அவற்றையெல்லாம் வெளியில் சொல்வதற்கான சூழல் 'மீ டூ' பரப்புரையில் காரணமாக இப்போதுதான் உருவாகியிருக்கின்றது. 

இதுவரை இதுபற்றியெல்லாம் யாரும் சொன்னதில்லை. யாரவது ஒருவர் முன்வந்து சொன்னால்தான் உண்மைகள் வெளியில் வரும். நான் முதல் குரல் கொடுத்தவுடன் இப்போது பலரும் பேசுகிறார்கள்.

இதே போன்ற கொடுமையை அனுபவித்துள்ள என் சக பாடகிகள் பேசுவதில்லை. அவர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் நிறைய பேர் தகவல்களை கூறுகிறார்கள். 

விளம்பரத்திற்காக கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறவில்லை. நான் பிரபலமான பாடகி. தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் பாடியிருக்கிறேன். நன்றாகவே பாடி இருக்கிறேன். டப்பிங் பேசி இருக்கிறேன்.

இந்த குற்றச்சாட்டினைக் கூறியதன் காரணமாக இனிமேல் எனக்கு பாடல்களே தரப்படப் போவதில்லை என்றாலும் கவலை இலலை.   என் குரலை வைத்து நான் எப்படியாவது பிழைத்துக் கொள்வேன். 

2005-ஆம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு ஆதாரங்கள் கேட்கிறார்கள். அப்போது விடியோ தொழில் நுட்பம் இந்த அளவு இருந்ததா என்ன? இல்லாவிட்டால் எப்போதும் கேமராவுடன் சுற்றிக் கொண்டிருக்க முடியுமா? ஏன் வார்த்தையை நம்புங்கள். 

வைரமுத்து மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து என் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பேன்.  

இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

Tags : vairamuthu chinmayi me too sexual harasment publicity legal interview

More from the section

மக்களவை, பேரவை இடைத் தேர்தல்கள்வேட்புமனு தாக்கல்:  நாளை கடைசி
மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அறிவிப்பு: கமல்ஹாசன் போட்டியிடவில்லை
உள் தமிழகத்தில் இன்று வெப்பநிலை உயர வாய்ப்பு
திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா தேரோட்டம்
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி