செவ்வாய்க்கிழமை 19 மார்ச் 2019

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு: இடைநிலை அறிக்கை தாக்கல் செய்வதாக மத்திய குற்றப் பிரிவு தகவல்

DIN | Published: 04th September 2018 02:49 AM


டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு விடைத்தாள் வெளியான விவகாரம் குறித்து இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் மத்திய குற்றப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், கடந்த 2015- ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வின் விடைத்தாள் வெளியானதால் அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விடைத்தாள் வெளியானது குறித்து செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி மற்றும் சம்பந்தப்பட்ட பயிற்சி மையம், இந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்ட அரசியல் கட்சி பிரமுகர் மற்றும் 2 நாளிதழ்களை இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கவும், இந்தத் தேர்வில் வெற்றி பெற்று பணிநியமனம் பெற்றவர்களின் நியமனம் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் ஆர்.பொங்கியப்பன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய குற்றப் பிரிவு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், குரூப்-1 தேர்வில் மோசடி நடந்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்பல்லோ தனியார் பயிற்சி மையத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஹார்ட் டிஸ்க், செல்லிடப்பேசி, கணினிகள் உள்ளிட்டவை தடயவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் குரல் மாதிரிகளும் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய 3 மாத கால அவகாசம் தேவைப்படும். ஆனால், வழக்கின் தற்போதைய நிலை குறித்து வரும் புதன்கிழமை இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 
 

More from the section

“புறப்பட்டு விட்டால் புயலெனப் புரிய வைப்போம்” - மைத்ரேயன் தாக்குவது யாரை?
நடிகர்கள் கட்சி தொடங்கிய பிறகு தேர்தலில் போட்டியிடுவதில் தவறு இல்லை: இல.கணேசன்
அரவக்குறிச்சு சுங்கச்சாவடியில் 5.63 கிலோ பறிமுதல் 
திமுக சார்பில் 3ஆவது முறையாக களம் காணும் ஆ.ராசா
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா?