24 பிப்ரவரி 2019

குரூப் 4 தேர்வு: சான்றிதழ் பதிவேற்றத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

DIN | Published: 07th September 2018 02:28 AM


குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
குரூப் 4 -இல் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த பிப்ரவரியில் நடந்தது. இதைத் தொடர்ந்து, சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய விண்ணப்பதாரர்களின் பட்டியல் கடந்த 27 -ஆம் தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in)  வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ்களை வரும் 18 -ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். 
சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய மாற்றுத்திறனாளிகள், மருத்துவக் குழுவிடமிருந்து உரிய மருத்துவச் சான்றிதழ் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 
தற்போது அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மருத்துவச் சான்றிதழ் பெறுவதில் சிரமம் இருப்பதாக தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
அவர்களின் கோரிக்கையை ஏற்று சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய மாற்றுத்திறனாளிகளிடம், மருத்துவக் குழுவிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் இல்லையெனில், அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதனுடன் அவர்கள், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டால் அப்போது மருத்துவக் குழுவிடமிருந்து உரிய மருத்துவச் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கிறேன் என்ற உறுதிமொழிக்கடிதத்தையும் எழுதி பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அவ்வாறு பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்கள் அல்லது கலந்தாய்வின்போது மருத்துவக் குழுவிடமிருந்து உரிய மருத்துவச் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க தவறும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 
அவர்கள் அடுத்தகட்ட தெரிவுக்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை 044-2530 0336, 044-2530 0337 ஆகிய தொலைபேசி எண்களிலும், 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

More from the section

புலிகள் காப்பக வனத்தில் காட்டுத் தீ
டாப்சிலிப், முதுமலையில் யானைகளுக்குப் புத்துணர்வு முகாம் தொடக்கம்
அதிமுகவை பணிய வைத்தே பாஜக கூட்டணி அமைத்துள்ளது: முதல்வர் நாராயணசாமி
தேர்தல் கூட்டணிக்காக பாமக ஒருபோதும் கொள்கையை விட்டுக் கொடுத்ததில்லை: ராமதாஸ்
ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்க வீரசபதம் ஏற்போம்: டிடிவி தினகரன் கடிதம்